என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கடந்த 21-ந் தேதியன்று புதுவை 15-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக முதல்-அமைச்சரின் பரிந்துரையின்பேரில் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணனை ஆளுநர் தமிழிசை நியமித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது.

    முதல்-அமைச்சராக கடந்த 7-ந் தேதி ரங்கசாமி மட்டும் பதவியேற்றார். அமைச்சர்கள் பதவி ஏற்கவில்லை. 9-ந் தேதி தற்காலிக சபாநாயகரை நியமிக்கும் கடிதத்தை கவர்னர் தமிழிசைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்தார்.

    சீனியர் எம்.எல்.ஏ.வான லட்சுமி நாராயணன் தற்காலிக சபாநாயகராக பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அதே 9-ந் தேதியன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முதல்- அமைச்சர் ரங்கசாமி சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார்.

    பின்னர், சிகிச்சை முடிந்து கடந்த 17-ந் தேதி புதுவை திரும்பினார். தற்காலிக சபாநாயகர் நியமனம் தொடர்பாக கவர்னர் உத்தரவு பிறப்பிக்காமல் நிலுவையில் இருந்ததால் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்ய முடியவில்லை.

    அமைச்சர்கள் பதவிகளை ஒதுக்கீடு செய்வதில் என்.ஆர்.காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படாதே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

    தேர்தல் முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்காத நிலையே தொடர்ந்தது. இதனிடையே எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பை உடனடியாக நடத்த வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதியன்று புதுவை 15-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக முதல்-அமைச்சரின் பரிந்துரையின்பேரில் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணனை ஆளுநர் தமிழிசை நியமித்தார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் ஆய்வினை மேற்கொண்டார்.

    இதனிடையே வீட்டில் ஒருவார காலம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.

    இந்த நிலையில் சட்டப்பேரவை செயலர் முனுசாமி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

    ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

    அதில், கவர்னர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை நாளை (புதன்கிழமை) தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணனுக்கு காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

    இதையடுத்து காலை 10 முதல் 12 மணிக்குள் சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து 23 நாட்களுக்கு பிறகு புதுவை எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்கின்றனர்.

    கொலையான ரவுடியின் கல்லறையில் அவரது குழந்தையால் பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுச்சேரி:

    புதுவை திப்புராயப்பேட்டையை சேர்ந்தவர் திப்லான் (வயது24). ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்து வந்தநிலையில் திருமணத்துக்குப் பின் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து பெயிண்டிங் வேலை செய்து மனைவி, குழந்தையுடன் திருந்தி வாழத் தொடங்கினார்.

    இதை விரும்பாத கூட்டாளிகள் அவர் மீது ஆத்திரமடைந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு திப்லானை அவரது கூட்டாளிகளான சவுந்தரபாண்டியன், தணிகாஷ், கவுசி தாவீது, பாம் ரவி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர்.

    தேங்காய்திட்டில் வைத்து அடித்து உதைத்து சரமாரியாக தாக்கியதுடன் கட்டையால் அடித்ததில் திப்லானின் கை, கால் முறிந்தது. இந்தநிலையில் அவரை அந்த இடத்திலேயே குற்றுயிரும், குலையுயிருமாக போட்டு விட்டு கூட்டாளிகள் தப்பிச் சென்றனர். மறுநாள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட திப்லான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் உப்பளம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாம் ரவி, சவுந்தரபாண்டியன், தணிகாஷ், கவுசி தாவீது உள்பட பலரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் கடந்த வாரம் திப்லான் பிறந்த நாளையொட்டி அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. அங்கு திப்லானின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

    அப்போது வாலிபர் ஒருவர் திப்லானின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கையில் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்டச் செய்தார். திப்லான் கொலைக்கு பழி வாங்கும் வகையில் பாடலை பாடியும் சபதம் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருவடிக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற ஆட்டோ மணி (26) என்பவரை கைது செய்து பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர். கொலை செய்யப்பட்டவரின் பிறந்தநாளையொட்டி அவரது குழந்தையின் கையில் பட்டாக் கத்தியை கொடுத்து கேக் வெட்ட செய்து பழிக்குப்பழி வாங்க சபதம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரியில் ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடு போன்ற அரசின் நடவடிக்கைகளால் தற்போது தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
    புதுச்சேரி :

    புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகமாக இருந்து வந்தது. நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

    இந்தநிலையில் ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடு போன்ற அரசின் நடவடிக்கைகளால் தற்போது தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இதன்படி நேற்று புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 1000-க்குகீழ் சரிந்தது. அந்த வகையில் 992 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 23 பேர் உயிரிழந்தனர்.
    செய்தியை பாமர மக்களும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு சரித்திரம் படைத்தவர் சி.பா.ஆதித்தனார்.
    புதுச்சேரி:

    தெலுங்கானா மாநில கவர்னரும், புதுவை மாநில பொறுப்பு துணைநிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள புகழஞ்சலியில் கூறியிருப்பதாவது:-

    சபாநாயகராக இருந்து சபையில் தமிழை ஒலிக்கச்செய்த ஐயா சி.பா.ஆதித்தனார் சகலமானவர்களுக்கும் சமமாக தமிழ் செய்திகளை எளியவருக்கும் எளிய பதிப்பாக சென்றடையச் செய்து, செய்தியை பாமர மக்களும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு சரித்திரம் படைத்தவர்.

    தமிழர் தந்தை சிபா ஆதித்தனார் சிலை

    எளிய செய்தி ஊடகத்திற்கு நாட்டில் மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக திகழ்ந்தவர். அவர் வழியில் இன்று செய்தி ஊடகமாக மட்டுமல்லாமல் ஒளி ஊடகமாகவும் அவரது முயற்சி வெற்றிகரமாக பரிமளித்துகொண்டிருப்பது மகிழ்ச்சி. தமிழுக்கு தொண்டாற்றுவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ஊழியர்கள் பலியாகி வருவது சுகாதாரத்துறை ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் கொரோனா தொற்று 2019 டிசம்பர் மாதம் முதல் பரவ தொடங்கியது.

    இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுவையில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு முதல் சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு அறிவிப்பால் அத்தியாவசிய துறைகள் தவிர பிற துறைகள் இயங்காமல் உள்ளது.

    அதேநேரத்தில் சுகாதாரத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை, நோயாளிகளின் அதிக வருகை, கூடுதல் பணிச்சுமையுடன் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முதல்கட்ட கொரோனா அலை கடந்த ஆண்டு இறுதியில் படிப்படியாக குறைந்தது. இதனால் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிச்சுமை குறைந்து சில மாதங்கள் நிம்மதியடைந்தனர்.

    கொரோனா வைரஸ்

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி இறுதியில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தொடங்கி யது. முதல் தாக்குதலை விட 2-வது அலையின் தாக்கம் மிக வீரியமாக உள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சென்றது. இதனால் தனியார் மருத்துவ மனைகளையும் அரசு ஏற்று செயல்படுகிறது.

    தற்காலிகமாக டாக்டர்கள், செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் சுகாதாரத்துறை ஊழியர்களின் பணிச்சுமை குறையவில்லை.

    இதனிடையே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சுகாதார ஊழியர்கள் 6 பேர் இம்மாதத்திலேயே இறந்துள்ளனர்.

    கடந்த 11-ந் தேதி அரசு மகப்பேறு மருத்துவமனை நர்சிங் ஆர்டலி அனுசுயா, 16-ந் தேதி அரசு பொது மருத்துவமனை வார்டு அட்டண்டர் மாயகிருஷ்ணன், 19-ந் தேதி நர்சிங் ஆர்டலி ரங்கநாதன், 20-ந் தேதி ஒப்பந்த டாக்டர் மோகன்குமார், 21-ந் தேதி சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், 22-ந் தேதி செவிலியர் அதிகாரி நிரஞ்சனா ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    இத்தகவலை சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ஊழியர்கள் பலியாகி வருவது சுகாதாரத்துறை ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இதனால் தங்களை காப்பாற்ற உயிர் காக்கும் உபகரணங்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஆச்சிஜன் படுக்கை, வெண்டிலேட்டர் வசதி, மருந்து ஆகியவற்றை தட்டுப்பாடின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

    மேலும் சுகாதாரத்துறை ஊழியர்களும், தன்னார்வலர்களும் பேசும் ஆடியோ பதிவுகள் வெளியாகி வருகிறது.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியை சேர்ந்த நர்சு ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு எந்த நஷ்டஈடும் தேவையில்லை. தரமான பி.பி.இ.கிட் (கவச உடை) வாங்கி தந்தால் போதும். தற்போது வழங்கும் உடையை ஒரு மணி நேரம் கூட அணிய முடியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதனை கழற்றிப்போடும் நிலை ஏற்படுகிறது.

    சுகாதாரத்துறை செயலர், கவர்னருக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை. எவ்வளவுதான் மன்றாடுவது? ஆஸ்பத்திரி வி‌ஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என நினைக்கிறோம். சாதாரண வி‌ஷயமாக இருந்தால் போராட்டம் நடத்துவோம்.

    ஆனால் தற்போது மக்களைப்பற்றி கவலையின்றி போராடுகின்றனர் என குற்றம் சொல்வர். தரமான பி.பி.இ.கிட் கேட்டு கடிதம் அனுப்பி ஒரு மாதம் ஆகிறது. நன்கொடையாக கதிர்காமம் மருத்துவமனைக்கு ரூ.ஒரு லட்சம், அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.56 ஆயிரத்தில் பி.பி.இ.கிட் வாங்கி கொடுத்தோம்.

    எவ்வளவு நாள் நன்கொடை வாங்கி, பிச்சையெடுத்து வாங்கித்தர முடியும். எங்களுக்கு உயிர் பாதுகாப்போடு வாழ பி.பி.இ.கிட் அளித்தால் போதும். நஷ்டஈடு, ஊக்கத்தொகை, போனஸ் எதுவும் வேண்டாம். இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்க போகிறோம் என தெரியவில்லை.

    சக ஊழியர்கள் இறப்பதால் மற்றவர்கள் மன அழுத்தம், மன உளைச்சல் அடைகின்றனர். அரசை வலியுறுத்தி தரமான உபகரணங்கள வாங்கித்தாருங்கள் அது போதும்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    தொடர்ந்து பல மாதமாக ஓய்வின்றி பணியாற்றி வரும் சுகாதாரத்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையங்களை புதுவையில் ஆரம்பித்தால் வேலைவாய்ப்பும், கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் அதிக பயன் அளிக்கும் என்று கவர்னர் தமிழிசை கோரிக்கை வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை தெலுங்கானா கவர்னராகவும் இருப்பதால் அங்கு சென்றுள்ளார்.

    தெலுங்கானா ராஜ்பவனில் காணொலியில் நடந்த நிகழ்வில் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் தயாரிக்கும் முயற்சியிலும், மத்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. கண்டுபிடித்த கொரோனா சிகிச்சைக்கு பயன்தரும் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 2 டி.ஜி. மருந்தை தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவன தரப்புடன் கவர்னர் தமிழிசை கலந்துரையாடினார்.

    ஸ்புட்னிக் தடுப்பூசி தற்போது தெலுங்கானாவில் 3 இடங்களில் தயாரிக்கப்படுகிறது.

    புதுவை

    அதேபோல் தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையங்களை புதுவையில் ஆரம்பித்தால் வேலைவாய்ப்பும், கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் அதிக பயன் அளிக்கும் என்று கவர்னர் தமிழிசை கோரிக்கை வைத்தார்.

    இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதாக டாக்டர் ரெட்டிஸ் குழுமத்தினர் உறுதி அளித்தனர். சாத்தியக்கூறுகள் தென்பட்டால் புதுவை முதல்-அமைச்ர் ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்து அதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்

    புதுச்சேரியில் 1,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,903 பேர் குணமடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 37 பேருக்கு தொற்றுபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 1,903 பேர் குணமடைந்துள்ளனர்.

    இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாய் நேற்று ஒரே நாளில் 34 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,359 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரியில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மே 31-ந்தேதி வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி: 

    நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், சூழ்நிலைக்கு ஏற்ப மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்து வருகின்றன. அதன்படி நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த நிலையில், புதுச்சேரியில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மே 31-ந்தேதி வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். 

    மேலும் நிலைமையை பொருத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்றும் விரிவான அரசாணை வெளியிடப்படும் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
    இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 700 ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தேவையான ஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் இல்லை.

    அதற்கான கட்டமைப்பை குறுகிய காலத்தில் உருவாக்காமல் இருந்ததால் பலர் உயிரிழந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் வெண்டிலேட்டர், ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜிப்மரில் குறைந்தபட்சம் 1000 படுக்கைகளும், அதில் 70 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகளாகவும், 30 சதவீதம் வெண்டிலேட்டர் படுக்கைகளாகவும் அமைத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

    அதேபோல், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 700 ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள படுக்கைகளில் 75 சதவீதத்தை மாநில அரசு கையகப்படுத்தி, அதன் மூலம் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு செய்வதன் மூலம் புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற முடியும்.

    புதுவையில் முழு ஊரடங்கை மாநில அரசு கடுமையாக கடைபிடிக்கவில்லை. 12 மணிக்கு மேல் மக்கள் தாராளமாக வெளியே உலவுகின்றனர். அவர்களை கேட்க ஆளில்லை. ஊரடங்கிலும் மக்கள் நடமாடுவதால் கொரோனா தொற்று குறையவில்லை. எனவே, கடுமையான முறையில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    புதுவையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் உட்பட பல லட்சம் பேர் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மு.க.ஸ்டாலின்

    மத்திய அரசு அறிவித்த 5 கிலோ அரிசியை கொடுத்துவிட்டால் மட்டும் போதாது. தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் அறிவித்து கொடுக்கிறார். அதேபோல், புதுவையில் வசதியுள்ளவர்கள், அரசு ஊழியர்கள் தவிர்த்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெருந்தன்மையோடு கூறி உள்ளனர்.

    ஆனால், ராஜீவ் காந்தியின் இழப்பு நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவரை கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அது சில அரசியல் கட்சி மற்றும் பொது நலவாதிகளின் கருத்தாக இருக்கலாம்.

    ஆனால், காங், தொண்டன் என்ற முறையில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தாக வேண்டும். அவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். இது மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

    கொரோனாவை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் அதிக அளவில் பரவி வருகிறது. புதுவையில் தற்போது அரசு ஊழியர் உள்பட 20 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    புதுச்சேரியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அதேபோல் உயிர்ப்பலியும் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த சூழ்நிலையில் கொரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை எனும் புதிய கொடிய நோய் தாக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் வடமாநிலங்களில் காணப்பட்ட இந்த நோய் தாக்கம் தற்போது தமிழகம், புதுச்சேரியிலும் புகுந்து மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.

    புதுவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் உறுதிபடுத்தும்விதமாக தகவல் தெரிவித்துள்ளார்.

    உலக சுகாதார நிறுவனம் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை புதுச்சேரிக்கு வழங்கி உள்ளது. அதை கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தார்.

    இதில் சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன் குமார், டாக்டர் ஸ்ரீராமுலு, உலக சுகாதார நிறுவன முதுநிலை மருத்துவர் சாய்ராபானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். இதுதவிர கொரோனா தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்.

    புதுவையில் தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. சிகிச்சைக்கான உபகரணங்கள் வாங்க பொதுமக்கள் உதவலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட முதல்-அமைச்சரிடம் பேசி உள்ளேன்.

    கொரோனாவை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் அதிக அளவில் பரவி வருகிறது. புதுவையில் தற்போது அரசு ஊழியர் உள்பட 20 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திடீரென்று கண்களில் வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல் போன்றவை கருப்பு பூஞ்சைக்கான நோய் அறிகுறியாகும். இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள புதுவையில் இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். கொரோனாவை தடுக்கும் ஆயுதம் தடுப்பூசி தான். கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தாமாக மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக டாக்டர்களை அணுக வேண்டும்.

    முழு ஊரடங்கு மட்டுமே கொரோனாவை தடுத்து விடாது. முழு ஊரடங்கால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே அத்தகைய நிலைக்கு செல்லாமல் இருக்க மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இந்தக் கூட்டணியின் தலைவர் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    இதற்கிடையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த மே 9-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே சமயம் புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தற்காலிக சபாநாயகரை நியமிக்கும் கடிதத்தை ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

    அண்மையில் கொரோனா சிகிச்சை முடிந்து ரங்கசாமி வீடு திரும்பிய நிலையில், துணை நிலை ஆளுநர் தற்போது லட்சுமி நாராயணனை தற்காலிக சபாநாயகராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதுதொடர்பாக, புதுச்சேரி சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி மாநில 15-வது சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக முதல்வர் பரிந்துரையின் பேரில், ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க. லட்சுமி நாராயணனை துணைநிலை ஆளுநர் நியமித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    கொரோனா வந்தவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் நாள்தோறும் ஒருவர் அல்லது 2 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புடன் சிகிச்சைக்காக வருகின்றனர்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுவையில் நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சராசரியாக நாள்தோறும் 25-க்கும் மேற்பட்டோர் இறந்து வருகின்றனர்.

    தொற்றை தடுக்க அரசின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அரசே கையகப்படுத்தி கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதித்து வருகிறது.

    கொரோனா நோயாளிகளை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்குவதாக தகவல்கள் வெளியானது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று பாதித்த சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் அதிகம் இருப்பதாக தகவல் வெளியானது.

    அதீத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்ட்ராய்டு மருந்து எடுப்பவர்கள், பல நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள், சில தெரபிகள் எடுத்துக்கொள்வோருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

    தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 9 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் புதுவையிலும் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் தொடங்கியுள்ளது. புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 5 நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் கண் பார்வையை இழந்துள்ளனர்.

    நாள்தோறும் புதுவை, தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

    இதுகுறித்து கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் கூறியதாவது:-

    கொரோனா வந்தவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் நாள்தோறும் ஒருவர் அல்லது 2 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புடன் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    இதுவரை 14 நோயாளிகள் வந்துள்ளனர். நோயின் தாக்கம் அதிகரித்து சிகிச்சைக்கு வரும்போதே 5 பேருக்கு பார்வையில்லை.

    கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியே, கண்ணில் பரவி ரத்தக்குழாய்களை சிதைக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவு, சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்களை இந்நோய் தாக்குகிறது.

    ஸ்டீராய்டு அதிகமாக எடுப்பவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைகிறது. அவர்களின் உடலில் பூஞ்சை வளர்ந்து கண் பார்வையை பாதிக்கிறது. சிகிச்சைக்காக புதுவையை சேர்ந்தவர்கள் 3 பேர் வந்துள்ளனர்.

    தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பலர் நோய் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருகின்றனர். தமிழகம்-புதுவையில் இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் அறிகுறிகளை தெரிந்து கொள்வது கஷ்டம். கண்ணை சுற்றி வீக்கம், வாய், மூக்கில் ரத்தம் வந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்று எண்டாஸ் கோப் பார்த்தால் நோயின் தாக்கம் தெரியும். எல்லா கொரோனா நோயாளிகளுக்கும் கரும்பூஞ்சை தொற்று வராது.

    சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களை பெருமளவில் தாக்கும். அவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீண்டகால நோய்களுடன் உள்ளவர்களுக்கு புதுவை சுகாதாரத்துறை சார்பில் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொடர் நோய்களான ரத்த கொதிப்பு, சர்க்கரை, இருதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் தவறாமல் மருந்தை உட் கொண்டு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

    இருதய ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், இருதய ரத்தக் கோளாறுக்கு ஸ்டன்ட் வைத்துள்ளவர்கள் தவறாமல் ஆஸ்பிரின் மற்றும் ரத்தம் உறையாமல் இருப்பதற்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவறாமல் தாங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் இன்சுலின் ஊசி மற்றும் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண் டும்.

    இதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கருப்பு பூஞ்சை போன்ற உயிர் கொல்லி நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் இதனை உணர்ந்து தடுப்பூசியை உடனே போட்டுக் கொண்டு தங்களையும் தங்கள் பாசத்துக்கு உரிவர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    தேவை இல்லா பயணங்களை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×