search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழிசை சவுந்தரராஜன்
    X
    தமிழிசை சவுந்தரராஜன்

    2டிஜி மருந்தை பரிசோதனைக்காக புதுவை கொண்டு வந்த கவர்னர்

    புதுவை உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஓரிரு வாரத்தில் 2டிஜி மருந்து கிடைக்கும் என புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    தெலுங்கானா மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்ற கவர்னர் தமிழிசை விமானம் மூலம் புதுவை வந்தார்.

    ஐதராபாத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய முககவசங்கள், கவச உடைகள், பிராண வாயு செறிவூட்டிகள், கிருமிநாசினி ஆகிய பொருட்களை கவர்னர் தமிழிசை தன்னுடன் எடுத்து வந்தார். அவற்றை சுகாதாரத்துறையிடம் கவர்னர் ஒப்படைத்தார்.

    பின்னர், கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெலுங்கானாவில் 10 பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியேற்புக்கு ஒப்புதல் தர சென்றிருந்தேன். தெலுங்கானாவுக்கும், புதுவைக்கும் பல தொண்டு நிறுவனங்களிடம் இருந்து உதவிகள் பெற்றேன்.

    தெலுங்கானாவுக்கு தரும்போது புதுவைக்கும் தர கோரி பெற்றேன்.

    2டிஜி மருந்து பரிசோதனைக்கு கொண்டு வந்துள்ளேன். 10 நாட்களுக்கு தரப்படும் இந்த மருந்து சாப்பிட்டால் 4-வது நாளிலேயே ஆக்சிஜன் வெண்டிலேட்டர் துணையின்றி சுவாசிக்க இயலும்.

    புதுவை உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஓரிரு வாரத்தில் 2டிஜி மருந்து கிடைக்கும். தெலுங்கானா வாழ் அரியானா மக்கள் தெலுங்கானா செஞ்சிலுவை சங்கத்துக்கு நன்கொடை தந்தனர்.

    புதுவைக்கும் தரக்கோரினேன். புதுவை செஞ்சிலுவை சங்கத்துக்கு ரூ. 5 லட்சம் அளித்தனர்.

    ஸ்புட்னிக் தயாரிக்கும் ரெட்டிஸ் ஆய்வகம் 3 இடங்களில் தெலுங்கானாவில் உற்பத்தி செய்ய உள்ளனர். புதுவையில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவ கோரினேன். முயற்சி செய்வதாக கூறியுள்ளார்கள். தடுப்பூசி மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தும்.

    இதுபற்றி முதல் அமைச்சரிடமும் விவாதிக்க உள்ளேன்.

    புதுவை அரசுடன் இணைந்து கொரோனா கட்டுப்பாட்டு, மாநில வளர்ச்சி ஆகியவற்றிலும் எனது பங்கு இருக்கும். கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைப்பதில்லை என்ற குறையை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம்.

    செவிலியர்களுக்கு தரம் குறைந்த பாதுகாப்பு உடை வழங்கப்படுவதாக புகார் வந்தது. குறை இருந்தால் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தால் சரி செய்யப்படும். வெளியே சொல்வதை விட ஆய்வுக்கு நான் சென்ற போதே செவிலியர்கள் சொல்லியிருக்கலாம். அரசை களங்கப்படுத்துவதை விட களத்தில் இருக்கும் அதிகாரியிடம் சொல்லலாம்

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார். 

    Next Story
    ×