என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கடலில் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் மீன் பிடிக்க வலையை வீசிய போது மீன்களுடன் பெருமாள் சிலை ஒன்று சிக்கியது.
    • தகவல் அறிந்து வந்த காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை சின்ன காலாப்பட்டை சேர்ந்த ராமச்சந்திரன் தலைமையில் அவரது மகன்கள் ராபின், ராபர்ட் ஆகியோர் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

    கடலில் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் மீன் பிடிக்க வலையை வீசிய போது மீன்களுடன் பெருமாள் சிலை ஒன்று சிக்கியது. அகலத்தில் 1½ அடியும் நீளத்தில் அரை அடியும் கொண்ட பெருமாள் தலை மட்டும் கிடைத்துள்ளது.

    சிலையை பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்தனர். சிலையை அந்த பகுதி மக்கள் பார்த்து சென்றனர். தகவல் அறிந்து வந்த காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து சிலையை போலீசாரிடம் பஞ்சாயத்தார் ஒப்படைத்தார்.

    அந்த பகுதியை சேர்ந்த மீனவ முதியோர் தங்களுடைய முன்னோர் வழிபட்ட பெருமாள் கோவில் கடலுக்குள் இருப்பதாகவும் கடலுக்குள் சங்கு எடுக்க மூழ்கியவர்கள் பார்த்ததாகவும் குதிரையுடன் பெருமாள் சிலை இருப்பதாக தெரிவித்தார்.

    தங்களுடைய முன்னோர்களும் மூதாதையர்களும் வழிபட்ட பெருமாள் கோவில் கடலுக்கு அடியில் இருப்பதை தற்போது கிடைத்துள்ள சிலை உறுதி செய்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    • போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி இரவு ஸ்டீபன், அவரின் சகோதரர் செந்தில் ஆகியோரை ரமேஷ் கத்தியால் குத்தினார்.
    • கொலை செய்யப்பட்ட ரமேஷ் அதிக குடிபழக்கம் காரணமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கொம்பாக்கம் பாப்பாஞ்சாவடி முதல் தெருவை சேர்ந்தவர் தும்பி என்ற ரமேஷ் (42). இளநீர் விற்கும் கூலி தொழிலாளியான ரமேஷ் முருங்கப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    முதலியார்பேட்டை ஏ.எப்.டி. மில் சாலையில் பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபு அலுவலகம் உள்ளது. அதன் அருகே ரமேஷ் இளநீர் விற்பது வாடிக்கை. நேற்று இரவு 7.30 மணிக்கு ரமேசும், முதலியார்பேட்டை இந்திரா நகர் காமராஜர் வீதியை சேர்ந்த ஸ்டீபனும், எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு அமர்ந்து மது அருந்தினர்.

    அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஸ்டீபன் வீட்டுக்கு சென்று கத்தியுடன் திரும்பினார். போதையில் இருந்த ரமேசை அவர் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.

    அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ரமேசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்தை சீனியர் எஸ்.பி. நாராசைதன்யா, எஸ்.பி. ரவிக்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கைப்பற்றினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி இரவு ஸ்டீபன், அவரின் சகோதரர் செந்தில் ஆகியோரை ரமேஷ் கத்தியால் குத்தினார்.

    இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் ரமேசை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கடந்த ஏப்ரலில் ரமேஷ் ஜாமினில் வெளிவந்தார். இந்த முன்விரோதம் காரணமாக ஸ்டீபன், ரமேசை கொலை செய்தது தெரியவந்தது. முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ரமேஷ் அதிக குடிபழக்கம் காரணமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுக்கு முன்பு சி.டி. விற்பனை செய்த வழக்கில் ஜாமின் தரவில்லை என்பதால் கோர்ட்டில் அநாகரீகமாக நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மாதம் இவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • பணி மூப்பு அடிப்படையில் தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளிகளில் புதுவையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    காரைக்காலில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் புதுவை பிராந்தியத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தங்களை மீண்டும் சொந்த பிராந்தியமான புதுவைக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் இவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதனிடையே, அரசின் கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய பணியிட மாறுதல் கொள்கையை வெளியிட்டது. இதற்கு ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பணி மூப்பு அடிப்படையில் தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    புதிய இடமாற்றல் கொள்கையில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை வளாகத்தில் ஒன்று கூடினர். அப்போது பணியிட மாறுதல் விவகாரத்தில் சம்மேளனமும், கூட்டமைப்பும் இணைந்து, கூட்டாக போராட்டக்குழுவை உருவாக்கி போராடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை கோரிமேட்டில் உள்ள அப்பாபைத்தியசாமி கோவில் வளாகத்தில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று திரண்டனர். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி அங்கு இல்லை.

    இதனால் போலீசார் அவர்களை காத்திருக்கும்படி கூறினர். அவர்கள் வீட்டின் முன் முற்றுகையிட்டு காத்திருந்தனர். விழா முடிந்து வந்த முதலமைச்சரை சந்தித்து பேசினர்.

    அப்போது அவர்கள் பணிமூப்பு அடிப்படையில் தான் இடமாற்றம் செய்ய வேண்டும், அதற்கு முன்பாக புதிய ஆசிரியர்களை நியமித்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.

    அதற்கு முதலமைச்சர் கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பேசும்படி கூறினார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அவர்கள் நாளை கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை
    • இப்பழக்க வழக்கங்களால் ஏற்படுகின்ற விளைவு என்ன என்பதை பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி  நடந்தது.

    ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவையில் இப்போது போதை பொருட்களுக்கு இளம் வயது பிள்ளைகள் அடிமையாகி வருகின்றனர். அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் என்னவென்று தெரியாமல் அவர்கள் தங்களது வாழ்க்கையை வீணாக்கி வருகின்றனர். படிக்க வேண்டிய இளம் வயதில் தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி வருவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    தீய பழக்கவழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம். எத்தனை கட்டுப்பாடுகளை நாங்கள் கொண்டு வந்தாலும், இதுபோன்ற விழிப்புணர்வு மிகவும் முக்கியம். இப்பழக்க வழக்கங்களால் ஏற்படுகின்ற விளைவு என்ன என்பதை பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    பெற்றோர்கள் அறிந்து கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதற்குரிய நிலையில் மாற்றிக் கொள்ள வேண்டும். இதனால் உடல்நலம் கெடுவதோடு, போதை பொருட்களுக்கு அடிமையான பிள்ளைகள் செய்கின்ற குற்றங்களானது, அவர்களே தங்களை அறிந்து கொள்ளாத நிலையில செய்வதை சில நேரங்களில் உணர முடிகிறது.

    போதை பொருட்கள் மூலம் ஏற்படுகின்ற உணர்வு என்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது. அந்த நிலையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் இருப்பதாக மற்றவர்கள் கூறுவது மிகவும் வருத்தப்பட வேண்டிய உண்மையாகும்.

    அப்படிப்பட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்ற இளம் வயது பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த குற்றங்களால் நம்முடைய நாட்டின் வளர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று சிந்திக்கக் கூடிய நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். படிக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் படிக்க வேண்டும்.

    காவல்துறையின் இந்த பேரணி பயனுள்ளதாக இருக்கும். போதை பொருட்கள் மூலம் ஏற்படுகின்ற தீய பழக்கவழக்கங்களை தடுப்போம். இதனை விழிப்புணர்வு பேரணி மூலம் அறிவுறுத்துவோம். இது கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒன்று என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்தி, அதன்மூலம் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளான இளம் வயதினரை திருத்த வேண்டும்.

    இந்த பழக்க வழக்கத்திற்கு இளைஞர்களை ஆளாக்கும் குற்றவாளிகழை அறவே ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்வாதி சிங், பக்தவச்சலம், மாறன், ராஜேஷ், இன்ஸ்ெபக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே தொடங்கிய பேரணி வழுதாவூர் சாலை, மூலகுளம், ரெட்டியார்பாளையம், வில்லியனூர் பைபாஸ், ரெட்டியார்பாளையம், இந்திரா காந்தி சதுக்கம், 100 அடி சாலை, கடலூர் சாலை, முருங்கபாக்கம் சந்திப்பு, மரப்பாலம் சந்திப்பு, முதலியார்பேட்டை, உப்பளம் சாலை, கடற்கரை சாலை வழியாக சென்று காந்தி சிலையில் நிறைவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    • சம்பவத்தன்று முத்துகுமரன் ஓட்டலுக்கு சென்று டிபன் வாங்கி வருவதாக கூறி சென்றார்.
    • மனைவி விஜி தனது கணவர் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஆரணி வீதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது55). இவருக்கு விஜி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    முத்து குமரன் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று காலை முத்துகுமரன் ஓட்டலுக்கு சென்று டிபன் வாங்கி வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் எங்கும் முத்துகுமரன் இல்லை. இதையடுத்து அவரது மனைவி விஜி தனது கணவர் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு ஒதுக்கீட்டை பெறாதது ஏன்.? என்ற குற்றச்சாட்டுக்கு கவர்னர் பதிலளிக்க வேண்டும்.
    • கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் தன்னுடைய மேலதிகாரி உத்தரவுபடி தான் அனுமதி கொடுத்ததாக கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோரின் பொறுப்பற்ற தன்மையாலேயே அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, கவர்னர் அறிவித்தபடி தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை அனுமதி பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும், செல்வகணபதி எம்.பிக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தமுள்ள 650 இடங்களில் சட்டப்படி 50 சதவீதமான 325 இடங்களை அரசு ஒதுக்கீடாக அறிவித்திருக்க வேண்டும்.

    ஆனால் தற்போது 36.4 சதவீதம் மட்டுமே பெறப்பட்டு 239 இடங்கள் அரசு ஒதுக்கீடாக அறிவிக்கப் பட்டுள்ளது.

    தனியார் மருத்துவ கல்லூரியில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டை பெறாதது ஏன்.? என்ற குற்றச்சாட்டுக்கு கவர்னர் பதிலளிக்க வேண்டும்.

    கோவில் நிலம் அபகரிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் தன்னுடைய மேலதிகாரி உத்தரவுபடி தான் அனுமதி கொடுத்ததாக கூறியுள்ளார்.

    எனவே அந்த மேல் அதிகாரிகள் யார்? அவர் மீது நடவடிக்கை எடுக்காது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிகண்டன் சுயநினைவின்றி மயங்கி கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் மணிகண்டன்(வயது32). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் தினமும் சம்பாதிக்கும் பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து செலவழித்து வந்தார்.

    அதுபோல் சம்பவத்தன்று இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். ஆனால் சாப்பிடாமல் தூங்கி விட்டார். மறுநாள் காலையில் பார்த்த போது மணிகண்டன் சுயநினைவின்றி மயங்கி கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை ஆட்டோவில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் மணிகண்டன் இறந்து போனதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது சகோதரி பார்வதி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்

    புதுச்சேரி:

    திருபுவனைஅருகே உள்ள வெள்ளாழங்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்ட வள்ளி தெய்வானை முருகப்பெருமான் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கடந்த 23-ந் தேதி தொடங்கியது.

    கணபதி ஹோமம் நடத்தப்பட்டு முதல் காலையாக சாலை பூஜையும் மற்றும் 2-ம் காலயாக பூஜை, 3-ம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதில் அப்பகுதி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து தீபாரதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தான சரவண சிவாச்சாரியார் மற்றும் வெள்ளாழங்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    தொடர்ந்து இக்கோவிலில் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது.

    • கும்பலுக்கு வலைவீச்சு
    • அதிர்ச்சியடைந்த கணேஷ் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தி யால்பேட்டை முத்தைய முதலியார்பேட்டை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 44).

    சுய தொழில் செய்து வருகிறார். இவரிடம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஊழியர்களான தேவசீலன், ஈஸ்வர் ஆகியோர் தொடர்பு கொண்டு தொழிலை விரிவாக்க எந்த ஆவணமும் இன்றி கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனனர். இதனை நம்பிய கணேசும் அவர்களிடம் ரூ.40 லட்சம் கடன் கேட்டுள்ளார்.

    உடனே அவர்கள் கடன் தருவதாக கூறி, கடனுக்கான இன்சூரன்ஸ் மற்றும் சில காரணங்களுக்காக ரூ.2 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். அவர்கள் கேட்டதுபோல 2 தவணைகளாக அவர் ரூ.2 லட்சத்தை செலுத்தியுள்ளார். 1 வாரத்தில் ரூ.40 லட்சம் கிடைத்துவிடும் என அவர்கள் கூறியுள்ளனர்.

    ஆனால் பல நாட்கள் ஆகியும் பணம் வரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த நிறுவனம் மூடப்பட்டதாக கூறப்ப டுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இதேபோல் பலரிடமும் அந்த நிறுவனத்தின் மற்ற ஊழியர்கள் பேசி, பணத்தை ஏமாற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் பாட்சா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவசீலன், ஈஸ்வர் மற்றும் சிலரை தேடிவருகின்றனர்.

    • எதிர்கட்சி தலைவர் சிவா பேச்சு
    • படித்த இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் அவலம் புதுவையில் அரங்கேறிவுள்ளது.

    புதுச்சேரி:

    உழவர்கரை தொகுதி தி.மு.க. சார்பில், கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உழவர்கரை குண்டு சாலையில் நடந்தது.

    உழவர்கரை தொகுதி செயலாளர் கலிய. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தொகுதி அவைத் தலைவர் விஜயரங்கம் வரவேற்றார்.தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி, வக்கீல் அணி . லோககணேசன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அரிதேவன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமைக் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வக்கீல் தமிழன் பிரசன்னா, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டன.

    கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது:- –

    என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா அரசு அமைவதற்கு முன்பாக அவர்கள் முன்வைத்த தேர்தல் முழக்கம் பெஸ்ட் புதுவை என்பதாகும்..ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டை கடந்துவிட்ட நிலையில் புதுவைக்கு என்ன செய்தார்கள்?

    10 ஆயிரம் வேலைவாய்ப்புகளை நிரப்புவோம், மத்திய அரசிடம் அனுமதி பெற்றுவிட்டோம் என்றார்கள். செய்யவில்லை. படித்த இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் அவலம் புதுவையில் அரங்கேறிவுள்ளது.

    புதிய சட்டமன்ற கட்டிடம் வேண்டாமென்று கூறவில்லை. ஏற்கனவே சட்டமன்றம் கட்டுவதாக 4 முறை பூஜை போடப்பட்டது. அதுபோல் தற்போதும் ஆகிவிடக்கூடாது என்பது தான் எங்கள் எண்ணம்.கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் மாநில அந்தஸ்து தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு கவர்னர் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தாரா? முதல்- அமைச்சரும் மாநில அந்தஸ்து சம்பந்தமாக எந்தவித தொடர் நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லிக்கு அழைத்துச் செல்லுவதாக சொன்னது என்னாச்சு.?. முதல் அமைச்சரை பொருத்தவரை அவருக்கு தேவை இருக்கும்போது மாநில அந்தஸ்தை கையிள் எடுப்பார். பிறகு அதை கைவிடுவார். இதுதான் அவரது வாடிக்கை.

    இந்த ஏமாற்று வேலைகளை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பின்னோக்கி சென்றுள்ள புதுவையை மீட்டெடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். வரும் காலம் மக்களாட்சி காலமாகத்தான் இருக்கும்.

    இவ்வாறு சிவா பேசினார்.

    பொதுக்கூட்டத்தில், மாநில துணை அமைப்பாளர்கள் ஏ. கே. கல்யாணி குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், காந்தி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    • பா.ஜனதா தொகுதி தலைவர் இன்பசேகர் தலைமை தாங்கினார்.
    • கிளை தலைவர் பிேராம்குமார், கேந்திர பொறுப்பாளர் கமல கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகளின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் வீடு வீடாக சென்று சாதனைகளை விளக்கி மீண்டும் மோடி பிரதமராக வேண்டி சாதனை குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பா.ஜனதா தொகுதி தலைவர் இன்பசேகர் தலைமை தாங்கினார்.

    மூத்த நிர்வாகி பழனிவேல் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் கலந்து கொண்டு மோடியின் அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். கிளை தலைவர் பிேராம்குமார், கேந்திர பொறுப்பாளர் கமல கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கிருஷ்ணாநகர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி
    • குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பொது சுகாதார கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி குடிநீர் உட்கோட்ட வடக்கு பிரிவுக்குட்பட்ட கிருஷ்ணாநகர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கிருஷ்ணாநகர் முழுவதும், சூரியகாந்தி நகர், வசந்த நகர், செந்தாமரைநகர், தேவகிநகர், சங்கரதாஸ் சுவாமிகள்நகர், எழில்நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×