என் மலர்
புதுச்சேரி

கொலையுண்ட ரமேஷ்.
பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு வாலிபர் வெட்டிக்கொலை- மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் பயங்கரம்
- போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி இரவு ஸ்டீபன், அவரின் சகோதரர் செந்தில் ஆகியோரை ரமேஷ் கத்தியால் குத்தினார்.
- கொலை செய்யப்பட்ட ரமேஷ் அதிக குடிபழக்கம் காரணமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம் பாப்பாஞ்சாவடி முதல் தெருவை சேர்ந்தவர் தும்பி என்ற ரமேஷ் (42). இளநீர் விற்கும் கூலி தொழிலாளியான ரமேஷ் முருங்கப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
முதலியார்பேட்டை ஏ.எப்.டி. மில் சாலையில் பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபு அலுவலகம் உள்ளது. அதன் அருகே ரமேஷ் இளநீர் விற்பது வாடிக்கை. நேற்று இரவு 7.30 மணிக்கு ரமேசும், முதலியார்பேட்டை இந்திரா நகர் காமராஜர் வீதியை சேர்ந்த ஸ்டீபனும், எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு அமர்ந்து மது அருந்தினர்.
அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஸ்டீபன் வீட்டுக்கு சென்று கத்தியுடன் திரும்பினார். போதையில் இருந்த ரமேசை அவர் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ரமேசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
சம்பவ இடத்தை சீனியர் எஸ்.பி. நாராசைதன்யா, எஸ்.பி. ரவிக்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கைப்பற்றினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி இரவு ஸ்டீபன், அவரின் சகோதரர் செந்தில் ஆகியோரை ரமேஷ் கத்தியால் குத்தினார்.
இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் ரமேசை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கடந்த ஏப்ரலில் ரமேஷ் ஜாமினில் வெளிவந்தார். இந்த முன்விரோதம் காரணமாக ஸ்டீபன், ரமேசை கொலை செய்தது தெரியவந்தது. முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ரமேஷ் அதிக குடிபழக்கம் காரணமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுக்கு முன்பு சி.டி. விற்பனை செய்த வழக்கில் ஜாமின் தரவில்லை என்பதால் கோர்ட்டில் அநாகரீகமாக நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






