search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனக்கு தேவை என்றால் மாநில அந்தஸ்தை ரங்கசாமி கையில் எடுப்பார்
    X

    விழாவில் மாணவிக்கு தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா ஊக்கதொகை வழங்கிய காட்சி.

    தனக்கு தேவை என்றால் மாநில அந்தஸ்தை ரங்கசாமி கையில் எடுப்பார்

    • எதிர்கட்சி தலைவர் சிவா பேச்சு
    • படித்த இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் அவலம் புதுவையில் அரங்கேறிவுள்ளது.

    புதுச்சேரி:

    உழவர்கரை தொகுதி தி.மு.க. சார்பில், கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உழவர்கரை குண்டு சாலையில் நடந்தது.

    உழவர்கரை தொகுதி செயலாளர் கலிய. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தொகுதி அவைத் தலைவர் விஜயரங்கம் வரவேற்றார்.தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி, வக்கீல் அணி . லோககணேசன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அரிதேவன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமைக் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வக்கீல் தமிழன் பிரசன்னா, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டன.

    கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது:- –

    என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா அரசு அமைவதற்கு முன்பாக அவர்கள் முன்வைத்த தேர்தல் முழக்கம் பெஸ்ட் புதுவை என்பதாகும்..ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டை கடந்துவிட்ட நிலையில் புதுவைக்கு என்ன செய்தார்கள்?

    10 ஆயிரம் வேலைவாய்ப்புகளை நிரப்புவோம், மத்திய அரசிடம் அனுமதி பெற்றுவிட்டோம் என்றார்கள். செய்யவில்லை. படித்த இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் அவலம் புதுவையில் அரங்கேறிவுள்ளது.

    புதிய சட்டமன்ற கட்டிடம் வேண்டாமென்று கூறவில்லை. ஏற்கனவே சட்டமன்றம் கட்டுவதாக 4 முறை பூஜை போடப்பட்டது. அதுபோல் தற்போதும் ஆகிவிடக்கூடாது என்பது தான் எங்கள் எண்ணம்.கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் மாநில அந்தஸ்து தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு கவர்னர் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தாரா? முதல்- அமைச்சரும் மாநில அந்தஸ்து சம்பந்தமாக எந்தவித தொடர் நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லிக்கு அழைத்துச் செல்லுவதாக சொன்னது என்னாச்சு.?. முதல் அமைச்சரை பொருத்தவரை அவருக்கு தேவை இருக்கும்போது மாநில அந்தஸ்தை கையிள் எடுப்பார். பிறகு அதை கைவிடுவார். இதுதான் அவரது வாடிக்கை.

    இந்த ஏமாற்று வேலைகளை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பின்னோக்கி சென்றுள்ள புதுவையை மீட்டெடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். வரும் காலம் மக்களாட்சி காலமாகத்தான் இருக்கும்.

    இவ்வாறு சிவா பேசினார்.

    பொதுக்கூட்டத்தில், மாநில துணை அமைப்பாளர்கள் ஏ. கே. கல்யாணி குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், காந்தி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×