என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
    • நிர்வாக துணை பதிவாளர் ராஜசேகரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கண்டுபிடிப்பு கவுன்சில் அமைப்பு சார்பில் புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்பு தொடர்பான கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரியின் டீன் டாக்டர் ராகேஷ் சேகல் தலைமை தாங்கினார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் துணைத்தலைவர் மற்றும் மத்திய அரசின் அடல் இன்னோவேஷன் மிஷன், கூடுதல் செயலாளர் நிதி ஆயோக் பணி முன்னாள் இயக்குனர் ரமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

    மேலும் புத்தகத்தின் முக்கியத்துவம், மனிதனின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரும் சிறிய யோசனைகள், கண்டுபிடிப்பு காப்புரிமைகள் எவ்வாறு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்கி கூறினார்.

    இக்கருத்தரங்கில் மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணு பட், மருத்துவ வளர்ச்சி மற்றும் வெளிப்புற சேவையின் இயக்குனர் ஜெயசிங், தலைமை வளர்ச்சி அதிகாரி செந்தில்குமார், நிர்வாக துணை பதிவாளர் ராஜசேகரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவை அரசு நீல புரட்சிக்காக கையெழுத்திட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கலையரங்கத்தில் மீன்வளத்துறை சார்பில் விழா நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதியில் கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இருமாநில அரசுகளும் பேச்சு வார்த்தை மூலம் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவை அரசு நீல புரட்சிக்காக கையெழுத்திட்டுள்ளது.

    42 கி.மீ. கடற்கரையை நீல பொருளாதார மண்டலமாக மாற்ற புதுவையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அந்தளவு மத்திய அரசு புதுவை மீது அக்கறையும், பாசமும் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கவர்னர் தமிழிசை பேசும்போது, முட்டை அசைவமா? சைவமா? என்ற சர்ச்சை நீடித்து வருகிறது.

    அதேபோல மீனை சாப்பிடாதோர் அசைவம் என்றும், சாப்பிடுவோர் சைவம் என்றும் சொல்கின்றனர். எனக்கு பிடித்த உணவு மீன். என்னை பொருத்த வரை மீனை சைவத்தில் சேர்க்கலாம். இதனால் மீனவர்களின் வாழ்வு மேம்படும் என்றார்.

    • குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் போலீசார் நெட்டப்பாக்கம் நெற்களம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த குமரவேல் (வயது 29) மற்றும் சதீஷ் (வயது 30) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதுபோல் மடுகரை பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த சிறுவந்தாடு பகுதியை சேர்ந்த லோகநாதன் (21), பிரகாஷ் (25) மற்றும் நெட்டப்பாக்கம் சிவபெருமான் நகரில் குடிபோதையில் ரகளை செய்த செர்ணாவூர் பகுதியை சேர்ந்த ரகு (32) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மத்திய மந்திரி எல்.முருகன் தகவல்
    • மீன்வளத்துறை மேம்பாட்டிற்காக ரூ.38 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள், கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை தொடங்கி வைத்தார். மத்திய மந்திரி எல்.முருகன் மீனவ பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 90 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகள், கிசான் அட்டைகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    உலகளவில் மீன் பொருள் ஏற்றுமதியில் 3-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டில் மீன்வளத்துறை மேம்பாட்டிற்காக ரூ.38 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

    மீன்வளத்துறையில் நீல புரட்சி ஏற்படுத்தியுள்ளோம். நடப்பு ஆண்டில் புதுவை மாநிலத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.100 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் பாரம்பரிய படகுகளில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி படகிற்கு மாற வேண்டும். இதற்கு 60 சதவீத மானியத்தை மத்திய அரசு அளிக்கிறது. 30 சதவீதம் வங்கி கடனும் வழங்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள 10 சதவீதம்தான் மீனவர்கள் செலுத்த வேண்டும்.

    இத்திட்டத்தை புதுவை மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடல்பாசிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தடை காலத்தில் கடல்பாசி வளர்க்க மீனவ பெண்கள் முன்வர வேண்டும். இதற்கும் மத்திய அரசு உதவ தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்,

    எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, கல்யாணசுந்தரம், பாஸ்கர், லட்சுமிகாந்தன், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, மீன் வள மற்றும் மீன்வர் நலத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர். துறை செயலர் நெடுஞ்செழியன், வரவேற்றார். இணை இயக்குனர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.

    • அரசின் பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை.
    • பெரிய மார்க்கெட் கட்டிடத்தை பழமை மாறாமல் கூடுதல் வசதிகளுக்கு மட்டும் புதிய கட்டுமானத்தை செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     பெரிய மார்க்கெட் கட்டுமான பணியை 6 மாதத்தில் முடித்து விடுவோம், அதுவரை வேறு இடத்திற்கு செல்லுங்கள் என வியாபாரிகளிடம் அரசு சொல்வது ஏமாற்று வேலையாகும். அரசின் பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை.

    இப்படிப்பட்ட நிலையில் அரசு சொல்வதை நம்பி பெரிய மார்க்கெட்டை காலி செய்து விட்டால் வியாபாரிகளும் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்க ளும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்க கூடிய நிலை ஏற்படும் என அஞ்சுகிறார்கள்.

    எனவே அரசு வியாபாரி களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்தும் அவர்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த வேணடும். வியாபாரிகளுக்கு பாதிப்பு வராத வகையிலும், பாரம்பரியமான பெரிய மார்க்கெட் கட்டிடத்தை பழமை மாறாமல் கூடுதல் வசதிகளுக்கு மட்டும் புதிய கட்டுமானத்தை செய்ய வேண்டும்.

    மேலும் தற்போது அங்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் குறித்து முழுமையான அனைத்து விவரங்களும் பெற்று அவர்களுக்கே அந்த இடத்தை மீண்டும் ஒப்படைக்கும் வகையில் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • கவர்னரிடம் அ.தி.மு.க. மனு
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீட்டை வழங்க உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கவர்னர் தமிழிசையை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் ஆண்டு தோறும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெறுவதால் விரல் விட்டு எண்ணக்கூடிய மாணவர்கள் மட்டுமே தகுதி அடிப்படையில் மருத்துவ கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆண்டும் நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள 100-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பெற்றிருந்தும் ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியில் சேரும் சூழ்நிலை உள்ளது.

    சென்டாக் மருத்துவக் கவுன்சிலில் மொத்தமுள்ள 389 அரசின் மருத்துவ இடங்களில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினால், அரசு பள்ளியில் படித்த சுமார் 28 மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.

    எனவே, இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெறும் சென்டாக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீட்டை வழங்க உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சந்திப்பின் போது மாநில அவை தலைவர் அன்பானந்தம்,மாநில இணைச் செயலாளரும் . முன்னாள் கவுன்சிலருமான கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார் , மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு கட்டுப்பாட்டு அறை வளாகத்தை சுற்றிலும் ரூ.15 லட்சத்து 49 ஆயிரத்து 675 செலவில் மதில் சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மூ.புதுக்குப்பம் சுனாமிநகரில் தார்சாலை, குடிநீர் குழாய் அமைக்க ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் ஏற்பாடு செய்து அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து பாகூர் துாக்குபாலம் முதல் வண்ணாங்குளம் சாலையை ரூ. 9 லட்சத்து 30 ஆயிரம் செலவில் தார்சாலை அமைக்கவும், குருவிநத்தம் இலுப்பை தோப்பு குடியிருப்பு பகுதியில் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்து 400 செலவில் சிமெண்ட் சாலை அமைக்கவும், பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு சார்பில், குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு கட்டுப்பாட்டு அறை வளாகத்தை சுற்றிலும் ரூ.15 லட்சத்து 49 ஆயிரத்து 675 செலவில் மதில் சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

    இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலை பொறியாளர்கள் பிரதிப்குமார், புனிதவதி, பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர் ஜெயரமணன், தி.மு.க. தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினர்.
    • மத்திய அரசு நமக்கு எவ்வளவு திட்டங்களை வழங்குகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினர்.

    மீனவ மக்கள் கேட்ட அத்தனை திட்டங்களையும் அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு நமக்கு எவ்வளவு திட்டங்களை வழங்குகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    நேரடி வங்கி பரிமாற்றத்தால் அவர்கள் வழங்குகின்ற நிறைய திட்டங்கள் நமக்கு தெரிவதில்லை. திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதே நமது எண்ணம். நாங்கள் எதிர்பார்த்த நிதியை விட கூடுதல் நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைத்து, அதன் மூலம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பினால் பல வீடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கற்கள் கொட்ட வேண்டும் என்றுகேட்கின்றனர். இதை ஆய்வு செய்யும் பணி ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை மூலம் விரைவில் கடல் அரிப்பை தடுக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி, காரைக்காலில் மீன்பிடி துறைமுகம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். மாகியில் மீன்பிடித் துறைமுகப் பணி முடிக்கப்படாமல் உள்ளது. அதனை முடிக்கவும், ஏனாம் பகுதி மீனவ மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    கடல் அரிப்பை தடுப்பதற்கான நிதி உள்பட அனைத்து நிதியும் நமக்கு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மனைவி மற்றும் குடும்பத்தினர் கண் எதிரே மின்னல் தாக்கி அபி‌‌ஷேக் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    • புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30). இவர் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

    இவர் தனது மனைவி சுஷ்மிதா மற்றும் குடும்பத்தினர்-உறவினர்கள் 10 பேருடன் புதுவைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார்.

    இவர்கள் புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பகுதியில் தனி வீடு எடுத்து தங்கி புதுவையில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சென்று வந்தனர். நேற்று மாலை அவர்கள் தங்களது 2 கார்களில் புதுவை அருகே பூ.புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றனர்.

    கடற்கரையில் அபிஷேக் தனியாக நடைபயிற்சி சென்றார். மற்றவர்கள் கடல் அலையில் காலை நனைத்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக அபிஷேக் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சுருண்டு விழுந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிஷேக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவி மற்றும் குடும்பத்தினர் கண் எதிரே மின்னல் தாக்கி அபிஷேக் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பகுதி வாரியாக கடைகளை கட்ட வலியுறுத்தல்
    • மார்க்கெட் கட்டுமானப் பணி நடைபெறும் இடைப்பட்ட காலத்தில் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் மைய பகுதியான ரங்கப்பிள்ளை வீதி நேரு வீதி இடையில் பெரியமார்க்கெட் உள்ளது.

    இங்கு 500-க்கும் மேற்பட்ட நிரந்தர கடை களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடிக்காசு கடை களும் உள்ளது. நாளுக்குநாள் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மார்க்கெட் நெரிசல் மிகுந்த பகுதியாக மாறியுள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு உள்ளது.

    இதை கருத்தில்கொண்டு மார்க்கெட்டை முழுமையாக இடித்துவிட்டு, ரூ.36 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மார்க்கெட்டை நவீனப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    மார்க்கெட் கட்டுமானப் பணி நடைபெறும் இடைப்பட்ட காலத்தில் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்திருந்தனர்.

    இதற்காக ரோடியர் மில் திடலுக்கு தற்காலிகமாக பெரிய மார்க்கெட்டை மாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் வருவாய் இழப்பு நேரிடும்.

    கடைகளின் பொருட்க ளுக்கு பாதுகாப்பு இருக்காது. குறித்து காலத்தில் பணிகளை முடித்து மீண்டும் கடைகளை ஒப்படைக்க ஆண்டுக் கணக்கில் காலதாமதம் ஏற்படும். எனவே ஒட்டு மொத்தமாக இடிக்காமல், பகுதி, பகுதியாக கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதை வலியுறுத்தி இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியமார்க்கெட்டில் உள்ள மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் அடைத்து வியாபாரிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் வியாபாரிகள் அனைவரும் திருவள்ளுவர் நகரில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்துக்கு மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொறுப் பாளர்கள் சிவகுருநாதன், சுப்பிரமணி, பாலாகுமார், குருசாமிநாயுடு, முருகன், அருள், சுரேஷ், ஆறுமுகம், உதயகுமார், செல்வம், செல்வக்குமார், ஜெயவேல், ரமா, மலர், மணி, இப்ராகிம், கந்தசாமி, கணபதி, ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்த னர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செய லாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பெரிய மார்க்கெட்டை ஒட்டு மொத்தமாக இடிப்பதை கைவிட்டு தேவையற்ற சில பகுதிகளை இடித்து கடைகளை கட்டி வியா பாரிகளுக்கு வழங்க வேண்டும். பழைய கடை களை இடிக்காமல் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும். கழிப்பறைகளை இடித்துவிட்டு நவீன கழிப்பிடங்களாகவும், உட்புற சாலைகளை சீரமைத்தும் தர வேண்டும்.

    இந்த பணிகளை மேற்கொள்ள இடையூறாக இருக்கும் கடைகளை நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகத்தில் தற்காலிகமாக கடை அமைத்து செயல்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர். மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் கடைகளை திறந்த வியாபாரத்தை மேற்கொண்டனர்.

    • செயற்குழு உறுப்பினர் ராமச் சந்திரன்,மூத்த தலைவர் முருகன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
    • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி புதுவை நகரக்குழு சார்பில் காந்திவீதி- முத்துமாரியம்மன் கோவில் வீதி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நகர செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ராமச் சந்திரன்,மூத்த தலைவர் முருகன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.

    நிர்வாகிகள் கலியமூர்த்தி, பிரபுராஜ், சரவணன், ஜோதிபாசு, மணவாளன், வீரமணிகண்டன், தாட்சாயிணி, மது, ரஞ்சித், பாரி, சுப்பிரமணியன், மனோகர், விஜி, வனஜா கண்டன உரையாற்றினர்.

    மார்க்சிஸ்ட்டு மாநில செயலாளர் ராஜாங்கம் சிறப்புரையாற்றினார். மணவாளன் நன்றி கூறினார்.

    புதுவை அரசு ரேஷன்க டைகளை திறந்து அத்தி யாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.

    குடும்பதலைவிக்கு ரூ.ஆயிரம், சிலிண்டருக்கு ரூ.300 மானியம், பெண்களுக்கு இலவச பஸ் வசதியை செய்துதர வேண்டும். ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • பத்திரப்பதிவுத் துறையில் இருக்கும் அனைத்து உயர் அதிகாரிகளையும் மாற்றம் செய்ய வேண்டும்

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படுகிறது. இதை தடுக்க நில அபகரிப்பு தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காமாட்சியம்மன் கோவில் நிலம் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதகுறுடத்த சார்பதிவாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பதிவாளர், நில அளவைத்துறை இயக்குனர், பதிவு அதிகாரியை போலீசார் தேடுகின்றனர். இவர்கள் ஜாமீன்கோரி ஐகோர்ட்டில் மனு செய்துள்ளனர். புதுவை அரசு இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும். இந்த நிலையில் 2021 முதல் 2023 வரை சுமார் 20 ஆயிரம் பட்டா விபரங்கள் கம்ப்யூட்டரிலிருந்து மாயமாகியிருக்கிறது.

    ஊழலின் உறைவிடமாக பத்திரப் பதிவுத்துறை உள்ளது. எனவே பத்திரப்பதிவுத் துறையில் இருக்கும் அனைத்து உயர் அதிகாரிகளையும் மாற்றம் செய்ய வேண்டும் என ஒரு மாதம் முன்பே இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியது. இந்த ஒரு மாத காலகட்டத்தில் 2 வருட பட்டா விபரங்கள் மாயமாகியிருக்கின்றன.

    மெகா ஊழலாக உருவெடுத்துள்ள பத்திரப்பதிவு, நில அளவைத் துறை முறைகேடுகளை மத்திய புலனாய்வுத்துறை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×