என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பயங்கர ஆயுதங்கள் மற்றும் மிளகாய் பொடி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
    • வீடு புகுந்து கூட்டு கொள்ளை அடிக்க திட்டமிட்டு இருந்ததும் அதற்காக நாட்டு வெடிகுண்டை அவர்களே தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த மங்கலம் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட கோர்க்காட்டில் பிரபல தனியார் கம்பெனி உள்ளது.

    இந்த தனியார் கம்பெனி அருகில் உள்ள ஏரிக்கரையில் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யாவிற்கு தகவல் கிடைத்தது.

    உடனே அவர் போலீசாருடன் சென்று அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளிக்கவே அவர்களது உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்பொழுது ஒரு பையில் நாட்டு வெடிகுண்டும், மற்றொரு பையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் மிளகாய் பொடி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கரிக்கலாம்பாக்கம் அருகே தமிழிக பகுதியான புதுக்கடை வடபுற கீழ்வாத்தி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஜோசப் என்கிற விஜய் (வயது 23) மற்றும் இவனது கூட்டாளிகளான வில்லியனூர் தெற்கு தேரோடும் வீதி சூர்யா (23), தென்னல் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (24), தவளக்குப்பம் பைரவர் கோவிலில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற பாட்டில் மணி (19), கரிக்கலாம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரச் சேர்ந்த வேலாயுதம் என்கிற வேலு (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்களுக்கு பண தேவை அதிகம் இருப்பதால் அந்தப் பகுதியில் வழிப்பறி அல்லது வீடு புகுந்து கூட்டு கொள்ளை அடிக்க திட்டமிட்டு இருந்ததும் அதற்காக நாட்டு வெடிகுண்டை அவர்களே தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு , கத்தி மற்றும் மிளகாய் பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    • வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
    • அந்த வாலிபர் சத்யா காதில் அணிந்திருந்த கம்மலை அறுக்க முயன்றார்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே குடியிருப்பு பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு சத்யா (வயது 18) என்ற மகள் உள்ளார்.

    இவர் காரைக்காலில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.  காரைக்காலில் இருந்து சத்யா பஸ்ஸில் ஊர் திரும்பினார்.

    கிருமாம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கிய சத்யாவை இவரது தாயார் உஷா மொபட்டில் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்.

    நாகப்பனூர் - சேலியமேடு பேட் வழியாக வந்து கொண்டி ருந்தபோது எதிரே வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென மொபட்டை வழிமறித்து உஷா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயற்சி செய்தார். ஆனால் உஷா சுதாரித்துக் கொண்டார். ஆனாலும் அந்த வாலிபர்சத்யா காதில் அணிந்திருந்த கம்மலை அறுக்க முயன்றார்.

    அப்போது ரத்தம் கசிந்ததால் சத்யா கதறி னார். பின்னர் உஷாவும் சத்யாவும் தாங்கள் அணிந்திருப்பது கவரிங் நகை தான். எனவே வேண்டுமென்றால் செல்போனை எடுத்து கொண்டு எங்களை விட்டுவிடுங்கள் என்று கதறி அழுதனர்.

    இதையடுத்து அந்த வாலிபர் அவர்களிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் நடந்த சம்பவத்தை கேட்டறிந்து அந்த வாலிபரை விரட்டி சென்றனர். தன்னை பிடிக்க பின் தொடர்ந்து வருவதை கண்டதும் பதட்டத்தில் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார்.

    உடனே பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து பாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தவளக்குப்பம் காமராஜர் தெருவை சேர்ந்த சக்தி முருகன் (வயது 36) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எந்ேநரமும் இரு சக்கர வாகன போக்குவரத்தும் உள்ளது.
    • சீரமைக்க வேண்டும் என பெற்றோர்களும் பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியின் கட்டிடமானது சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும். இந்தப் பள்ளியின் முன்புற மதில் சுவர் தற்போது சேதம் அடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது.

    இதனை 8 சிமெண்ட் தூண்கள் மூலம் தாங்கி பிடிக்கும் முட்டுக் கொடுத்து வைத்தனர். ஆனால் இந்த பள்ளி புதுவை-கடலூர் பழைய பாதையில் அமைந்துள்ளதால் பஸ், கார் மற்றும் லாரி போக்குவரத்தும் இருந்து வருகிறது. அதோடு எந்ேநரமும் இரு சக்கர வாகன போக்குவரத்தும் உள்ளது.

    மேலும் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளும் அச்சத்தில்இருந்து வந்தனர்.

    எனவே இந்த பள்ளியின் சுற்று சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பெற்றோர்களும் பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை பொதுப்பணித்துறை சார்பில் சாய்ந்த மதில் சுவரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.     

    • அசோக்பாபு மற்றும் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினர்.
    • இலவச சீருடைகள் , பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி பா.ஜனதா சார்பில் நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் தொழி லாளர்களுக்கு இலவச சீருடைகள் , பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா நகர மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அசோக்பாபு மற்றும் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினர்.

    தொடர்ந்து பாரத பிரதமர் மோடியின் சாதனை ஆட்சியின் கையேடுகள், வீடு வீடாக சென்று ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சிகள் கேந்திர பொறுப்பாளரும் தொகுதி பொதுச் செயலாளருமான விஜயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவர் இன்பசேகர் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிகளில் தலைமை அலுவலக பொறுப்பாளர் மகேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், பச்சையப்பன், பிரவீன்குமார், மாநில மகளிர் அணி துணைத் தலைவி கீதா சிவனேசன், ஓ.பி. .சி அணி மாவட்ட துணைத் தலைவி மஞ்சுளா, மாவட்ட மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வாசுகி,

    கிளை நிர்வாகிகள் சுதாகர் ,முருகன், உதயசங்கர், முனிராஜா, சரவணன், திலகா, மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் முருகன், நிர்வாகிகள் ராஜசேகரன், மணிவண்ணன், கஜேந்திரன், மூர்த்தி, செந்தில்குமார் மற்றும் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாணவி ஒருவரை கடந்த ஓராண்டாக ஆனந்த் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கடந்த 2 வாரமாக காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பூமியான் பேட்டை பாவாணர் நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தையல்நாயகி. இவர்களது மகன் ஆனந்த் (வயது 22). கடந்த 4 ஆண்டுக்கு முன்பு சரவணன் இறந்து விட்டார். ஆனந்த் நெல்லித்தோப்பில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் டி.எம்.எல்.டி டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அதே கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவி ஒருவரை கடந்த ஓராண்டாக ஆனந்த் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பின்னர் தினமும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த 2 வாரமாக காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆனந்திடம் அந்த மாணவி பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு வந்த ஆனந்த் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தாயார் ரெட்டி யார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து ஆனந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதலி பேசாததால் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவிக்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
    • சம்பவம் குறித்து மாணவியின் தந்தை பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே பாகூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

    இதுபற்றி மாணவியின் தந்தை பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்திய போது அந்த சிறுமிக்கு அவரது தாய், சித்தி, சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் சேர்ந்து கடப்பேரிகுப்பத்தை சேர்ந்த உறவுக்கார வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமியின் தாய் லட்சுமி, மணமகன் பூபதி மற்றும் சிறுமியின் சித்தப்பா மற்றும் சித்தி உள்பட 6 பேர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கவர்னரிடம் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. மனு
    • இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனோ பெருந்தொற்று காலத்தில் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டு தற்பொழுது வரை பணிபுரிந்து வரும் மருத்துவ செவிலியர்களை பணி அமர்த்த வேண்டும்.

    தற்பொழுது புதுச்சேரி அரசில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த இடத்தில் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

    மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் இதுகுறித்து உயிர் மட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஆவன செய்வதாக உறுதியளித்தார்.

    • அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி செல்வது பதிவாகியிருந்தது.
    • 60 ரூபாய்க்காக முதியவரை 3 வாலிபர்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் முத்துகுமார்(60).

    குடிபழக்கத்தால் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட இவர் கடந்த 4 ஆண்டு களாக வெள்ளாளர் வீதியில் ஒரு கடையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். வேலை முடித்து அதே வீதியில் நடைப்பாதையில் வசித்து வந்தார்.

     முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு அவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    இது அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் காவலாளின் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு பணம் தேடியுள்ளனர். தூக்கத்திலிருந்து எழுந்த அவர் பணத்தை தர மறுத்துள்ளார்.

    ஏற்கனவே போதையில் இருந்த வாலிபர்கள் சரமாரியாக அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி செல்வது பதிவாகியிருந்தது.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரியகடை போலீசார் சி.சி.டி.வி. காட்சி மூலம் குருசுகுப்பத்தை சேர்ந்த மணிபாரதி, ஸ்டீபன், சசி ஆகியோரை கைது செய்தனர்.போதைக்காக பணம் திருடிய போது தடுத்த செக்யூரிட்டை அடித்து கொண்டதை ஒப்பு கொண்டனர்.

    கொலை செய்யப்பட்டவரின் பாக்கெட்டில் ரூ. 60 மட்டுமே இருந்தது. 60 ரூபாய்க்காக முதியவரை 3 வாலிபர்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்க இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
    • கடலோர மீன் பிடி துறைமுகம் ஆகியவைகளை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் சாகர் கவாச் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    கடலோர மாவட்டங்களில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடலோரப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் அரசு கட்டிடங்களை பாதுகாக்கும் வகையிலும்  

     2வது நாளாக லைட் ஹவுஸ், தலைமை செயலகம், கடலோர மீன் பிடி துறைமுகம் ஆகியவைகளை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்தனர்.

    தேங்காய்திட்டு துறைமுக பகுதியில் இருந்து கடலோர பாதுகாப்பு படை சூப்பிரண்டு பழனிவேல் தலைமையில் கடலோர காவல் படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் படகுகள் மற்றும் மீனவர்களின் அடையாளங்கள் குறித்தும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என சோதனை செய்தனர்.

    மீனவ கிராமங்களான வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், பூரணாங்குப்பம், நல்லவாடு உள்ளிட்ட கரையோர மீனவ கிராமங்களில் சோதனை செய்தனர். மக்கள் கூடும் இடங்களான புதிய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் ஆகியவற்றிலும் இந்த ஒத்திகையை முன்னிட்டு போலீசார்பணியில் ஈடுபட்டனர். 

    • கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
    • மரக்கன்றுநடுதல், புல்தரை, பாதுகாப்பு வேலி அமைத்தல் என ரூ.90 லட்சத்தில் பணிகள் நடத்தப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிகுப்பம் ஜெயராம் கார்டனில் வில்லிமேடுகுளம் என்ற பாரதி குட்டை சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் உள்ளது. இந்த குளத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதாரம் சீர்கெட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வந்தது.

    இந்த நிலையில் உழவர்கரை நகராட்சியின் கோரிக்கையை ஏற்று இந்த குளத்தை புனரமைக்க ரோட்டரி கிளப் புதுவை காஸ்மோஸ் முன்வந்தது.

    இதன்மூலம் குளத்தை தூர்வாருதல், பூங்காவாக மேம்படுத்துதல், சோலார் விளக்கு, நடைபாதை, அமரும் இருக்கை, மழைநீர் செல்ல வழித்தடங்கள், மரக்கன்றுநடுதல், புல்தரை, பாதுகாப்பு வேலி அமைத்தல் என ரூ.90 லட்சத்தில் பணிகள் நடத்தப்பட உள்ளது.

    இந்த மேம்பாட்டு பணிகளுக்கான தொடக்க விழா  நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், ரோட்டரி கிளப் காஸ்மோஸ் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மூலநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் முன்னாள் எம்.எல்.ஏ. தனவேலு தலைமையில் நடைபெற்றது.
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பிரமோற்சவ விழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து தினமும் காலை மாலை அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடைபெற்று இரவில் வண்ண விளக்குகளால் சாமி வீதி உலாவும் நடந்து வருகிறது.

    நேற்று வேதாம்பிகை அம்மன்-மூலநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் முன்னாள் எம்.எல்.ஏ. தனவேலு தலைமையில் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். முதல்-அமைச்சர் ரங்கசாமி செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த தேர் திருவிழாவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், தாசில்தார் பிரதிவீராஜ் தலைமையில் இன்ஸ் பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்பட 100 -க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் தீயணைப்பு வீரர்கள், தாலுக்கா, கொம்யூன் பஞ்சாயத்து, மின்துறை, சுகாதார துறை ஊழியர்களும் பணிகளில் ஈடுபடுத்த உள்ளனர்.

    • கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்
    • மாபெரும் பேரணியை வரும் 6-ந் தேதி நடத்தி முதல்- அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுக் கணக்கிலும், மாதக் கணக்கிலும் சம்பளம் வழங்கப்படவில்லை.

    பாசிக் 115, பாப்ஸ்கோ 68, அமுதசுரபி 31, ரேஷன்கடை 55, கே.வி.கே. 45, பாண்டெக்ஸ் 47, பாண்பேப் 60, ஹவுசிங்போர்டு 52, ஏஎப்டி 12 மாதம் என சம்பளம் வழங்கப்படவில்லை. பணி ஓய்வில்சென்றவர்களுக்கு பணிக்கொடையும் வழங்க வில்லை.

    இதனால் இங்கு பணிபுரிந்த ஊழியர்களின் குடும்பங்கள் பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றன.

    இதை கண்டித்து பல கட்டபோராட்டங்களை ஊழியர்கள் சங்கத்தினர் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அனைத்து ஊழியர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை மாநாடு நடத்தமுடிவு செய்யப்பட்டது.

    இதன்படி புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் கோரிக்கை மாநாடு இன்று சுதேசி மில் அருகே நடத்தப்பட்டது.

    மாநாட்டிற்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, எதிர்கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ. இந்தியகம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம் ஆகியோர் சி றப்புரையாற்றினர்.

    மாநாட்டில் புதுவை அரசு சார்பு நிறுவனங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்புக்குழு அமைத்து கலந்துபேசி தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியை வரும் 6-ந் தேதி நடத்தி முதல்- அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

    மாநாட்டில் பாசிக் சங்கம் முத்துராமன், ரமேஷ், பாப்ஸ்கோ சங்கம் ரமேஷ், ஜெய்சங்கர், துரைசெல்வம், பாஸ்கர பாண்டியன், அமுதசுரபி சிவஞானம், பிரபு, விற்பனைக்குழு சண்முகம், கே.வி.கே. யோகேஷ், கதிரேசன், ரேஷன்கடை சங்கம் முருகானந்தம், பிரேம் ஆனந்த், பி.ஆர்.டி.சி. ராஜேந்திரன், திருக்குமரன், பாண்டெக்ஸ் அழகப்பன், சிவக்குமார், பி.ஆர்.டி.சி.சக்திசிவம், பாஸ்கரன், வீட்டுவசதி வாரியம் அண்ணாதுரை, ராஜா, பாண்டெக்ஸ் முருகன், நெடுஞ்செழின், பாண்பேப் அண்ணாமலை, ராமதாஸ், பஞ்சாலை தொழிலாளர் சங்கம் ஏழுமலை, ஜெயசதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏ.ஐ.டி.யூ.சி. கவுரவ தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, அரசு ஊழியர் சம்மேளனம் பிரேமதாசன் வாழ்த்தி பேசினர். 

    ×