என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
வெடிகுண்டுகளுடன் பதுங்கிய கொள்ளை கும்பல் 5 பேர் கைது
- பயங்கர ஆயுதங்கள் மற்றும் மிளகாய் பொடி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
- வீடு புகுந்து கூட்டு கொள்ளை அடிக்க திட்டமிட்டு இருந்ததும் அதற்காக நாட்டு வெடிகுண்டை அவர்களே தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த மங்கலம் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட கோர்க்காட்டில் பிரபல தனியார் கம்பெனி உள்ளது.
இந்த தனியார் கம்பெனி அருகில் உள்ள ஏரிக்கரையில் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யாவிற்கு தகவல் கிடைத்தது.
உடனே அவர் போலீசாருடன் சென்று அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளிக்கவே அவர்களது உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.
அப்பொழுது ஒரு பையில் நாட்டு வெடிகுண்டும், மற்றொரு பையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் மிளகாய் பொடி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கரிக்கலாம்பாக்கம் அருகே தமிழிக பகுதியான புதுக்கடை வடபுற கீழ்வாத்தி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஜோசப் என்கிற விஜய் (வயது 23) மற்றும் இவனது கூட்டாளிகளான வில்லியனூர் தெற்கு தேரோடும் வீதி சூர்யா (23), தென்னல் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (24), தவளக்குப்பம் பைரவர் கோவிலில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற பாட்டில் மணி (19), கரிக்கலாம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரச் சேர்ந்த வேலாயுதம் என்கிற வேலு (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்களுக்கு பண தேவை அதிகம் இருப்பதால் அந்தப் பகுதியில் வழிப்பறி அல்லது வீடு புகுந்து கூட்டு கொள்ளை அடிக்க திட்டமிட்டு இருந்ததும் அதற்காக நாட்டு வெடிகுண்டை அவர்களே தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு , கத்தி மற்றும் மிளகாய் பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






