என் மலர்
விருதுநகர்
சிவகாசி பகுதியில் உள்ள காலண்டர் உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி-18-ந் தேதியன்று புதிய டிசைன்களை வெளியிட்டு வெளியூர் வியாபாரிகளிடம் இருந்து ஆர்டர்கள் பெறுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று சிவகாசியில் உள்ள முக்கிய காலண்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் புதிய வகை காலண்டர்கள் அறிமுக விழா மற்றும் ஆர்டர் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொண்டு புதிய வகை காலண்டர்களுக்கு ஆர்டர் கொடுத்தனர்.
காலண்டர்கள் உற்பத்தி குறித்தும், விலை உயர்வு குறித்தும் கற்பகா ஜெய்சங்கர் கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய காகிதம் மற்றும் அட்டைகள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு காலண்டர்கள் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அதனால் 2021-ம் ஆண்டு காலண்டர்கள் விற்பனை செய்யப்பட்ட விலையை விட 20 முதல் 25 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு உள்ளது.
கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளில் தற்போது அதிகரித்து வருவதால் மூலப்பொருட்கள் வருகை இன்னும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் மூலப்பொருட்களில் விலை இன்னும் உயரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் காலண்டர்கள் விலை இந்த ஆண்டு 25 சதவீதம் வரை நிச்சயம் உயர்த்தப்பட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். இந்த ஆண்டு தற்போது வரை 14 வகையான காலண்டர்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அவர்கள் தரும் புதிய ஆர்டர்களையும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் கொடியேற்ற விழா களை இழந்தது.
பட்டாசாரியர்கள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் அலுவலக ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
சென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடைமுறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர விழாவில் 5-ம் திருநாள் 7-ம் தேதியும், கருட சேவை 9-ம் தேதியும் நடைபெறும்.
முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் 11-ம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல் இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆண்டாள்-ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.
விருதுநகரில் பழமை வாய்ந்த சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் இருந்து வருகிறது. கோவிலில் சுவாமி திருவீதி உலாவிற்கு வெள்ளி மயில் வாகனம் மற்றும் பிரதோஷ நந்தி செய்வதற்கான பணி நேற்று தொடங்கியது. 70 கிலோ வெள்ளியால் ரூ.90 லட்சம் மதிப்பில் வெள்ளிமயில் வாகனம் மற்றும் பிரதோஷ நந்தி செய்யப்படுகிறது.
இதற்கான மரத்திலான செய்த வடிவமைப்பில் நேற்று வெள்ளித்தகடு பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. கும்பகோணம் அருகே உள்ள செம்பனார்கோவிலை சேர்ந்த முருக ஸ்தபதி இந்த வாகனங்கள் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார்.
இந்த வெள்ளி வாகனங்கள் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்நகர் பஞ்சுப்பேட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர். தொடக்க விழாவில் பஞ்சுப்பேட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகி ராமதாஸ் மற்றும் என்ஜினீயர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளதாவது:-
கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் சமையல் எண்ணெய்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலை எண்ணெய் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தை விட கடந்த ஜூலை மாதத்தில் 19.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல கடுகு எண்ணெய் விலை 39.03 சதவீதமும், வனஸ்பதி 46.1 சதவீதமும், சோயா எண்ணெய் 48.57 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய் 51.62 சதவீதமும், பாமாயில் 44.2 சதவீதமும் அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெய் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்ட போதிலும் சமையல் எண்ணெய் விலைகள் குறைந்தபாடில்லை. விலையைக் குறைக்க கச்சா பாமாயில் மீதான வரி கடந்த ஜூலை 31 முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
கச்சா பாமாயில் மீதான பயன்பாட்டிற்கான வரி விகிதத்தை 30.25 சதவீதமாக குறைத்துள்ளது. முன்பு 35.75 சதவீதமாக இருந்தது. இதேபோல் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதானவரி 45 சதவீதத்திலிருந்து 37.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற பருப்பு வகைகளில் இருப்பு வைக்க உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பருப்பு வகைகளின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் அய்யனார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி சொக்கலிங்காபுரத்தில் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆலையில் வெடிவிடிபத்து ஏற்பட்டது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் மீனம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 60) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சிலர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வாழைக்குளம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்ரீதேவி சிங்கம்மாள்புரத்திற்கும், பூவாணி கிராமத்தில் பணியாற்றிய பாலமுருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுனுக்கும், படிக்காசுவைத்தான் பட்டியில் பணியாற்றிய அழகர் ராஜ் அத்திகுளம் செங்குளத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்குப் பகுதியில் பணியாற்றிய ராஜகுரு மம்சாபுரத்திற்கும், அத்திகுளம் செங்குளத்தில் பணியாற்றிய இந்திராகாந்தி வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கும்,
மம்சாபுரத்தில் பணியாற்றிய பெரியசாமி பொன்னாங்கண்ணி க்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுனில் பணியாற்றிய கந்தராஜ் வாழைக்குளத்திற்கும், பொன்னாங்கண்ணியில் பணியாற்றிய வில்லியாழ்வார் படிக்காசு வைத்தான்பட்டிக்கும், சிங்கம்மாள்புரத்தில் பணியாற்றிய சங்கர் பூவாணிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் ரைஸ்மில்லில் உள்ள வளாகத்தில் அறையை இனாம் கரிசல்குளத்தைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (வயது 36) என்பவர் மசாலா பாக்கெட் விற்பனை செய்வதாக கூறி வாடகை அடிப்படையில் ரைஸ்மில் வணிக வளாக உரிமையாளர் பாபுவிடம் பேசி கடை நடத்தி வந்துள்ளார்.
ஆனால் நவநீதகிருஷ்ணன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அறையில் பதுக்கி வைத்துள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தனிப் படைக்கு தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் மில் வளாகத்தில் அந்த அறையை போலீசார் சோதனை செய்தனர். அங்கு 158 மூட்டைகளில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்களும் ரூ.7 லட்சத்து 48 ஆயிரமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம், ஆய்வாளர் கீதா மற்றும் போலீசார் உடன் இருந்தனர். சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி. நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் கீதா, சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் பகுதியில் வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள ராஜகோபுரத்தில் செடி கொடிகள் வளர்ந்து உள்ளன.
இதனை அகற்றும் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மஞ்சப்பூ தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் முனீஸ்வரன் (வயது 39) ஈடுபட்டிருந்தார்.
அப்போது கோபுரத்தின் மீது ஏறி செடி, கொடிகளை வெட்டி அகற்றிவிட்டு அதன் வேரில் டப்லோ என்னும் மருந்தினை ஊற்றிக் கொண்டு இருந்தார்.
அப்போது முனீஸ்வரன் நிலைதடுமாறி கோபுரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடலில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த 4 நாட்களாக சிகிச்சையில் இருந்த முனீஸ்வரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றகோரியும், அ.தி.மு.க. மீது காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதை கண்டித்தும் விருதுநகரில் இன்று 70 இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருத்தங்கல்லில் முன்னாள் அமைச்சர்-மாவட்டச் செயலாளர் ராஜேந்திரபாலாஜி தனது வீட்டின் முன்பு பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், எதிர் கோட்டை சுப்பிரமணியன் மற்றும் அ.தி.மு.க.வினர் திரளாக இதில் பங்கேற்றனர்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன், மாலைப்பேட்டை தெருவில் உள்ள தனது அலுவலகம் முன்பு கட்சியினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
சத்தியரெட்டியபட்டியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், அவரது மனைவி யூனியன் துணைத் தலைவர் முத்துலட்சுமி ஆகியோரும், பெத்தநாச்சி நகரில் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் ஆகியோரும், பாவாலி சாலையில் நகரச் செயலாளர் முகமது நயினார், முன்னாள் யூனியன் தலைவர் கலாநிதி ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் 16 இடங்களில் அ.தி.மு.க.வினர் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரபிரபா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்தையா மற்றும் கட்சியினர் இதில் பங்கேற்றனர்.
ராஜபாளையம் நகர அ.தி.மு.க. செயலாளர் ராணா பாஸ்கர்ராஜ் மற்றும் இளம்பெண்கள் பாசறை நகர இணைச் செயலாளர் ஷீலா பாஸ்கரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் என்.கண்ணன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சசிகுமார் ஆகியோர் தமது இல்லங்களில் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,437 உயர்ந்தது. இதுவரை 44,653 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 24 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 244 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 541 ஆக உயர்ந்துள்ளது. 196 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 19 பேர் சிகிச்சை மையங்களிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் வைரம். இவரது மகன் பாலகுரு (வயது 21). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாலகுரு சிவகாசி திருப்பினார். பின்னர் அவர் பெங்களூரு செல்லவில்லை. இந்த நிலையில் தீராத வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நோய் குணமாகாததால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






