என் மலர்tooltip icon

    விருதுநகர்

    அனுமதியின்றி மண் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர் இதை தொடர்த்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே குருமூர்த்திநாயக்கன்பட்டியில் உள்ள ஓடையில் கிராவல் மண் அள்ளுவதாக ஆமத்தூர் கிராம நிர்வாக அதிகாரி உமா கணேசனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் வருவாய் ஆய்வாளர் மலர்கொடி மற்றும் ஆமத்தூர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு எவ்வித அரசுஅனுமதியும் பெறாமல் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஒரு டிராக்டரில் மண் அள்ளிக்கொண்டு இருந்ததை கண்டு விசாரணை மேற்கொண்டார். 

    இதனை தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் ஜே.சி.பி. எந்திரத்தையும், டிராக்டரையும் பறிமுதல் செய்ததோடு ஜே.சி.பி. டிரைவர் சேர்வைகாரன்பட்டியை முனீஸ் குமார் (வயது 21), டிராக்டர் டிரைவர் மத்திய சேனையை சேர்ந்த மாரிசாமி (33) மற்றும் ஜே.சி.பி. உரிமையாளர் மத்திய சேனையை சேர்ந்த கருப்பசாமி, டிராக்டர் உரிமையாளர் மத்தியசேனையை சண்முக கருப்புசாமி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், டிரைவர்கள் முனீஸ்குமார், மாரிச்சாமியை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த கணவன், மனைவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பெத்தையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 57). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நாச்சியார் (45).

    மாரியப்பன் நேற்று வேலை முடித்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் சிலிண்டர் காலியானது தெரியவந்தது. இதையடுத்து அவர் வேறு சிலிண்டர் மாற்றினார்.

    இரவு கணவன்-மனைவி இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் கியாஸ் கசியும் வாடை வந்தது. இதனை உணர்ந்த நாச்சியார் கணவரை எழுப்பி இதுபற்றி கூறினார்.

    பின்னர் இருவரும் சமையல் அறைக்கு வந்தனர். அங்கு கியாஸ் கசிந்து இருப்பது தெரியவந்தது. உடனே மாரியப்பன் ரெகுலேட்டரை சரி செய்தார். பின்னர் மாரியப்பன் மின் விளக்கு சுவிட்சை போட்டார். அப்போது அறையில் ஏற்கனவே கியாஸ் பரவி இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் மாரியப்பன் மற்றும் நாச்சியார் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    இதற்கிடையே அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயத்துடன் கிடந்த கணவன்-மனைவியை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் சிவகாசி தீக்காய தடுப்பு பிரிவு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    கொரோனா தொற்றை தவிர்க்க அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பலரும் மாஸ்க் அணிந்து சென்று வருகின்றனர். அவர்கள் உறவினர்களை சந்தித்தால் கூட யாரென்று அறிய முடியாத நிலை பலருக்கு ஏற்படுகிறது. மாஸ்கை கழற்றினால்தான் ஆள் அடையாளம் தெரியும் அளவுக்கு நிலவுகிறது.

    இந்த நிலையில் மாஸ்க் அணிந்து நகை பறிப்பு சம்பவத்திலும் சிலர் ஈடுபட தொடங்கி உள்ளனர். பெண் வியாபாரியிடம் வாலிபர் ஒருவர் மாஸ்க் அணிந்து வந்து நகை பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அஜித் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 46). இவர் வீட்டோடு சிறிய அளவில் கடை நடத்தி வருகிறார்.

    காலையில் கடையை திறப்பதற்காக சித்ரா வாசலில் நின்றார். அப்போது அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மாஸ்க் அணிந்தபடி நடந்து வந்துள்ளார்.

    தனக்கு தெரிந்தவர் யாராவது இருக்கலாம் என கருதிய நேரத்தில் அந்த வாலிபர் திடீரென சித்ரா கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா உதவிக்கு உறவினர்களை அழைத்து கூச்சலிட்டார்.

    ஆனால் காலை நேரம் என்பதால் யாரும் உடனடியாக வரவில்லை. அதற்குள் நகை பறித்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார். அந்த வழியாக ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிய சித்ரா கொள்ளையனை விரட்டி சென்றார். ஆனால் அவன் இருட்டுக்குள் மறைந்து விட்டான்.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் சித்ரா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாநில அளவில் கொரோனா நோய் எதிர்ப்பாற்றல் சக்தி கணக்கீட்டில் விருதுநகர் மாவட்டம் முதல் இடம் பெற்றுள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட தகுதியுள்ள 15 லட்சம் பேர் இருக்கும் வகையில் இதுவரை 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 64 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 22.5 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. அதாவது மீதமுள்ளோருக்கும் தடுப்பூசி போட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களிடையே நோய் எதிர்ப்பாற்றல்சக்தி குறித்த கணக்கெடுப்பு நடத்தியது. இதில் விருதுநகர் மாவட்டம் 84 சதவீதம் பேர் எதிர்ப்பாற்றல் சக்தி பெற்றுள்ளதாக தெரியவந்த நிலையில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.

    இதற்காக தடுப்பூசி முகாம் நடத்த ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் 1,052 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த முகாம்கள் அனைத்தும் வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படுவதால் அனைத்து பொது மக்களும் எளிதாக மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட வாய்ப்புள்ளது.

    தற்போதைய நிலையில் 1 லட்சத்து ஆயிரம் தடுப்பூசி மருந்துடோஸ் கையிருப்பு உள்ள நிலையில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழக அரசு அதிகபட்ச தடுப்பூசி மருந்தை நமக்கு வழங்கியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே நாளை மாவட்ட மக்கள் அனைவரும் தங்கள் அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

    இதன்மூலம் இம்மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விருதுநகர் அருகே குப்பையை எரித்த போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து துப்புரவு பெண் பணியாளர் பரிதாபமாக பலியானார்.

    விருதுநகர்:

    சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 37). இவர் புதுக்கோட்டை பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 6-ந் தேதி மாரியம்மாள் வீட்டின் அருகே கிடந்த குப்பைகளை சேகரித்து பின்புறம் குவித்து தீ வைத்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் எரியவில்லை. இதையடுத்து அவர் மண்எண்ணையை ஊற்றி தீ மூட்டியதாக தெரிகிறது. இதில் எதிர்பாராத விதமாக மாரியம்மாளின் சேலையில் தீப்பிடித்தது.

    கண் இமைக்கும் நேரத்தில் உடல் முழுவதும் தீ பரவியது. வலியால் அலறித்துடித்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர்-ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம்பெண்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    சாத்தூர் எம்.சுப்பையா புரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 29). ஒடிசாவைச் சேர்ந்த இவர் கோயமுத்தூரில் உள்ள மில்லில் வேலை பார்த்தபோது இவருக்கும், தேனியைச் சேர்ந்த மல்லிகாவுக்கும் (28) காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    தற்போது கணவன்- மனைவி சுப்பையாபுரத்தில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் மல்லிகா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை ரஞ்சித்குமார் கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் இது தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் மல்லிகா திடீரென மாயமானார்.

    இது குறித்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகள் வைஷ்ணவி (19). சம்பவத்தன்று இவர் வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைஷ்ணவியை தேடிவருகின்றனர்.

    சிவகாசி அருகே கண்மாயில் மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ்குமார் மணல் கடத்தல் குறித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை கண்மாய் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு மண் அள்ளும் எந்திரத்தின் உதவியுடன் சிலர் கண்மாயில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த அழகாபுரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 32), கருப்பசாமி பாண்டியன்(23), மாணிக்கராஜா(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

    இந்த வழக்கு தொடர்பாக மணல் அள்ள பயன்படுத்திய லாரியின் உரிமையாளர்கள் போத்திராஜா, அழகர்சாமி, லாரி டிரைவர் தங்கேஸ்வரன், கருப்பசாமி, ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மணல் அள்ள பயன்படுத்திய மணல் அள்ளும் எந்திரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பா.ஜனதா தலைவர் எச். ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவர் எச். ராஜா. இவர் அடிக்கடி இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களை கடுமையாக பேசி சர்ச்சையில் சிக்குகிறார். அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டிருந்தார்.

    இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வீட்டு பெண்களை அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு எச். ராஜாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தொடர்ந்து சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத எச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

    இன்றுதான் பா.ஜனதா தலைமை எச். ராஜாவை தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமித்திருந்தது.
    விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய அரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் அதே பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார்.

    இவரது ஆலைக்கு அழகு மூர்த்தி (40) என்பவர் சரக்கு வாகனத்தில் ரேசன் அரிசியை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்த தகவலின் பேரில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்ணன், அழகு மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவர்கள் மீது ஏற்கனவே ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக 2 வழக்குகள் உள்ளன.

    இதையடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டிக்கு பரிந்துரைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்படி அரிசி ஆலை அதிபர் கண்ணன், அழகு மூர்த்தி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    விருதுநகர் கே.கே.எஸ்.என். நகரைச் சேர்ந்தவர் முத்து பாண்டி (37). இவர் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து பாண்டியை கைது செய்தனர்.

    இந்த நிலையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முத்துப்பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.

    அவரது உத்தரவின் பேரில் தற்போது முத்துப்பாண்டி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தாயில்பட்டி:

    தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர் பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தவிட்டு ராஜ் (வயது 40) என்பவரது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரை கைது செய்து அவரிடம் இருந்த 20 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் வெற்றிலையூரணியில்‌ நடைபெற்ற சோதனையில் பிச்சைக்கனி (40), தமிழ்செல்வன் (45) ஆகியோரிடமிருந்து 25 கிலோ சரவெடிகளையும் வெம்பக்கோட்டை போலீசார் கைப்பற்றி அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    அதேபோல வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி தாயில்பட்டி பஸ்ஸ்டாப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வெற்றிலையூரணியை சேர்ந்த பிரேம்நாத் (55) கையில் இருந்த சாக்கு பையை சோதனையிட்டபோது 10 கிலோ சரவெடியும், கலைஞர் காலனியை சேர்ந்த கருப்பசாமியிடம் (வயது 48) 15 கிலோ சரவெடியும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சரவெடிகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவின் விவரங்களை பார்த்தபின்பு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
    விருதுநகர்:

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சென்றார். வழியில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் அவருக்கு அ.தி. மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அ.தி.மு.க.வினரிடையே திடீர் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபட்டனர். இதில் வி. ராமலிங்கபுரம் அ.தி.மு.க. கிளை செயலாளர் வீராவு ரெட்டி என்பவர் தாக்கப்பட்டார். இதில் சிலர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வீராவு ரெட்டி, சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில், வரவேற்பு நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரனுடன் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னை காரில் தூக்கி போடுமாறு ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அவரது ஆதரவாளர்கள் என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி தாக்கினார்கள். பின்னர் கீழே இறக்கி விட்டு தன்னை அவர்கள் மிரட்டியதாக தெரிவித்திருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மணி என்ற ஹரிஹர சுதன், பாண்டியராஜ், மணி, மாரிக்கனி உள்பட 11 பேர் மீது வழிமறித்து தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், அவதூறாக பேசுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் கூடுதலாக ஆள் கடத்தல் வழக்கை சேர்த்துள்ளனர்.

    இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, புகார்தாரர் கடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது தொடர்பான வழக்கு ஏன் பதிவு செய்யப்படவில்லை? என்று கேட்டார்.

    இதுதொடர்பாக அரசு தரப்பு வக்கீல் திருமலையப்பன், ராஜேந்திர பாலாஜி மீது கொலை மிரட்டல் மட்டுமல்லாது ஆள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.

    இதையடுத்து ராஜேந்திர பாலாஜி வக்கீல் முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார். இதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி முன்ஜாமின் மனுவை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) தனசேகரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன்ஜாமின் வழங்கும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி முறையீடு செய்தார்.

    அப்போது அவர், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். ஆகவே, இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் முறையிட்டார்.

    அதற்கு நீதிபதி, அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலோ, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடமோ முறையிடலாம் என தெரிவித்தார்.

    மதுரை ஐகோர்ட்


    அதற்கு மனுதாரர் தரப்பில், இன்று தலைமை நீதிபதி அமர்வு விடுமுறை என்பதால், மதுரை ஐகோர்ட்டில் முறையிடுவதாக ராஜேந்திர பாலாஜி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து நீதிபதி, முன்ஜாமின் கோரிய மனுவின் விவரங்களை பார்த்தபின்பு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

    கணவரின் குடி பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள நயினாபுரம் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 28). இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு முனீஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் மகள்கள் உள்ளனர்.

    முனீஸ்வரன் அடிக்கடி மது குடித்து வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. வாழ்க்கையில் வெறுப்படைந்த கிருஷ்ணவேணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கினார்.

    உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணவேணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தந்தை கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியாபுரத்தைச் சேர்ந்தவர் முனீஸ்குமார் (27). தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சர்மிளா (21). இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.

    முனீஸ்குமார் அடிக்கடி மது அருந்தி வந்ததை சர்மிளா கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த முனீஸ்குமார் வி‌ஷம் குடித்து மயங்கினார்.

    ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனீஸ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சுழி அருகே உள்ள இருஞ்சிறையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (40), கட்டிட தொழிலாளி. இவர் அடிக்கடி குடித்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த அவர் முஸ்லிம் தெருவில் உள்ள தனது பழைய வீட்டிற்கு சென்று வி‌ஷம் குடித்து மயங்கினார். திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×