search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்த மாஸ்க் கொள்ளையன்

    அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    கொரோனா தொற்றை தவிர்க்க அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பலரும் மாஸ்க் அணிந்து சென்று வருகின்றனர். அவர்கள் உறவினர்களை சந்தித்தால் கூட யாரென்று அறிய முடியாத நிலை பலருக்கு ஏற்படுகிறது. மாஸ்கை கழற்றினால்தான் ஆள் அடையாளம் தெரியும் அளவுக்கு நிலவுகிறது.

    இந்த நிலையில் மாஸ்க் அணிந்து நகை பறிப்பு சம்பவத்திலும் சிலர் ஈடுபட தொடங்கி உள்ளனர். பெண் வியாபாரியிடம் வாலிபர் ஒருவர் மாஸ்க் அணிந்து வந்து நகை பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அஜித் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 46). இவர் வீட்டோடு சிறிய அளவில் கடை நடத்தி வருகிறார்.

    காலையில் கடையை திறப்பதற்காக சித்ரா வாசலில் நின்றார். அப்போது அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மாஸ்க் அணிந்தபடி நடந்து வந்துள்ளார்.

    தனக்கு தெரிந்தவர் யாராவது இருக்கலாம் என கருதிய நேரத்தில் அந்த வாலிபர் திடீரென சித்ரா கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா உதவிக்கு உறவினர்களை அழைத்து கூச்சலிட்டார்.

    ஆனால் காலை நேரம் என்பதால் யாரும் உடனடியாக வரவில்லை. அதற்குள் நகை பறித்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார். அந்த வழியாக ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிய சித்ரா கொள்ளையனை விரட்டி சென்றார். ஆனால் அவன் இருட்டுக்குள் மறைந்து விட்டான்.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் சித்ரா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×