search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜேந்திர பாலாஜி
    X
    ராஜேந்திர பாலாஜி

    ஆள் கடத்தல் வழக்கு- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் முறையீடு

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவின் விவரங்களை பார்த்தபின்பு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
    விருதுநகர்:

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சென்றார். வழியில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் அவருக்கு அ.தி. மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அ.தி.மு.க.வினரிடையே திடீர் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபட்டனர். இதில் வி. ராமலிங்கபுரம் அ.தி.மு.க. கிளை செயலாளர் வீராவு ரெட்டி என்பவர் தாக்கப்பட்டார். இதில் சிலர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வீராவு ரெட்டி, சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில், வரவேற்பு நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரனுடன் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னை காரில் தூக்கி போடுமாறு ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அவரது ஆதரவாளர்கள் என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி தாக்கினார்கள். பின்னர் கீழே இறக்கி விட்டு தன்னை அவர்கள் மிரட்டியதாக தெரிவித்திருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மணி என்ற ஹரிஹர சுதன், பாண்டியராஜ், மணி, மாரிக்கனி உள்பட 11 பேர் மீது வழிமறித்து தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், அவதூறாக பேசுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் கூடுதலாக ஆள் கடத்தல் வழக்கை சேர்த்துள்ளனர்.

    இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, புகார்தாரர் கடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது தொடர்பான வழக்கு ஏன் பதிவு செய்யப்படவில்லை? என்று கேட்டார்.

    இதுதொடர்பாக அரசு தரப்பு வக்கீல் திருமலையப்பன், ராஜேந்திர பாலாஜி மீது கொலை மிரட்டல் மட்டுமல்லாது ஆள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.

    இதையடுத்து ராஜேந்திர பாலாஜி வக்கீல் முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார். இதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி முன்ஜாமின் மனுவை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) தனசேகரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன்ஜாமின் வழங்கும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி முறையீடு செய்தார்.

    அப்போது அவர், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். ஆகவே, இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் முறையிட்டார்.

    அதற்கு நீதிபதி, அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலோ, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடமோ முறையிடலாம் என தெரிவித்தார்.

    மதுரை ஐகோர்ட்


    அதற்கு மனுதாரர் தரப்பில், இன்று தலைமை நீதிபதி அமர்வு விடுமுறை என்பதால், மதுரை ஐகோர்ட்டில் முறையிடுவதாக ராஜேந்திர பாலாஜி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து நீதிபதி, முன்ஜாமின் கோரிய மனுவின் விவரங்களை பார்த்தபின்பு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

    Next Story
    ×