என் மலர்tooltip icon

    விருதுநகர்

    பிரதோ‌ஷமான இன்று மலையேற அதிகாலை முதலே ஏராளமானோர் தாணிப்பாறை அடிவாரத்திற்கு திரண்டனர். காலை 7 மணிக்கு அவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
    விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    சதுரகிரி மலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் மலையேறும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவிலில் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடந்து வந்தன.

    கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அதன்படி, இன்று பிரதோ‌ஷம், 20-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    இன்று முதல் 21-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். காலை 7 மணி முதல் 10 மணிக்குள் மலையேற அனுமதி வழங்கப்படும். இரவு கோவிலில் தங்க அனுமதி இல்லை. மாலை 4 மணிக்குள் மலையடி வாரத்திற்கு பக்தர்கள் வந்து சேர வேண்டும்.

    பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    பிரதோ‌ஷமான இன்று மலையேற அதிகாலை முதலே ஏராளமானோர் தாணிப்பாறை அடிவாரத்திற்கு திரண்டனர். காலை 7 மணிக்கு அவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வனத்துறையினரும், போலீசாரும் பக்தர்களின் உடமைகளை சோதனை செய்து அனுமதித்தனர்.

    பிரதோ‌ஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆராதனைகள் நடந்தன.

    தற்போது கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சதுரகிரிமேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்தால் கோடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

    எனவே மலை மேல் உள்ள ஓடைப்பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்புடன் கடக்க வனத்துறையினர், போலீசார், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    இதையும் படிக்கலாம்...
    சத்திரப்பட்டி அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி தொடங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு என தனி, தனியாக பள்ளி இயங்கி வருகிறது. இந்த இரு பள்ளிகளும் அருகருகே உள்ளன.

    இந்த பள்ளிகளில் சத்திரப்பட்டி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவர்களும் வந்து கல்வி பயில்கின்றனர். இந்த பள்ளியில் மாணவ-மாணவிகள், விளையாடுவதற்கு மைதானம் அமைக்கப்படவில்லை. தற்போது அரசு பள்ளியில் ஆங்கில மொழி கல்வியும் தொடங்கப்பட்டு விட்டது. இதனால் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து ெகாண்ேட செல்கிறது.

    விளையாட்டு பாடப்பிரிவுகள் நடத்த விளையாட்டு மைதானம் இல்லை. கிராமத்தில் இருந்து படிக்க வரும் மாணவ-மாணவிகள் விளையாட்டு திறமை அதிகம் உள்ளவர்கள் ஆவா. ஆனால் அவர்களின் திறமையை வெளிப்படுத்த முறையான பயிற்சி எடுக்க மைதானம் இல்லை.

    பள்ளியின் எதிரே மைதானம் அமைக்க இடம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரண்டு பள்ளிகளுக்கும் மைதானம் அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகரில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், இதுதொடர்பாக மத்திய இணைமந்திரி அஜய்மிஸ்ராவை நீக்கம் செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்நகர் பழைய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி, தமிழக விவசாயசங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் விஜய முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் உருவப் படத்தை எரிக்க முயன்றனர். இதனால் உருவப்படத்தை பறிக்க முயன்ற போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்து வேனில் ஏற்றி மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் பழைய பஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகாசி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி புலிப்பாறைப்பட்டியை சேர்ந்தவர் குள்ளப்பன் (வயது 60). இவர் நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் படுத்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மனைவி லட்சுமி, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் குள்ளப்பனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இந்த சம்பவம் குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து குள்ளப்பன் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் நகராட்சி சாலையில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் காளிதாஸ் (வயது 42). இவரது கடையில் 10 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த இந்நகர் பஜார் போலீசார் காளிதாசை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    காரியாபட்டி அருகே பணம் கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அண்ணாநகர் மேற்கு தெருவை சேர்ந்த களஞ்சியம் (வயது 55) என்ற பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் ஹரிஹரன் (32) என்பவர் திருமணமாகாமல் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது..

    இந்த நிலையில் அதிகாலை 3 மணி வரை ஹரிகரன் டி.வி. பார்த்துள்ளார். இதை பார்த்த தாயார் களஞ்சியம் டி.வி.யை அணைத்து விட்டு தூங்குமாறு கூறியுள்ளார். அப்போது ஹரிஹரன் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று களஞ்சியத்திடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது, “அண்ணனுக்கு மட்டும் இடத்தை விற்று பணம் கொடுத்து இருக்கிறாய், எனக்கும் பணம் கொடுக்க வேண்டும்” என்று களஞ்சியத்திடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர், களஞ்சியத்தை துணியை வைத்து முகத்தில் அழுத்தி கொன்று விட்டு கம்பியை எடுத்து கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் களஞ்சியம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    களஞ்சியம் வீட்டிலிருந்து வெளியே வராததால் நேற்று சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் மல்லாங்கிணறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது களஞ்சியம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    பின்னர் போலீசார், களஞ்சியம் உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் ஹரிஹரனை பிடித்து விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எஸ்.பாப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). இவர் சிகிச்சைக்காக தனது மோட்டார்சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக நத்தம்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் விழுந்ததில் அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம்பட்டி போலீசார் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்தங்கல் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த பெண்ணை கணவர் கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் அங்குசாமி. இவரது மகள் பாண்டீஸ்வரி (வயது 23). இவர்களுக்கும், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த பாண்டீஸ்வரி, பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த ராஜூ என்ற அங்கால் ராஜூவை திருமணம் செய்தார். பின்னர் இருவரும் கோயமுத்தூர் சென்று வசித்து வந்தனர்.

    ஆனால் கடந்த 2 வாரத்திற்கு முன்பு ராஜூவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாண்டீஸ்வரி தந்தை வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த சூழலில் திருத்தங்கல் வந்த ராஜூ, மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் பாண்டீஸ்வரி அதற்கு மறுத்து விட்டார்.

    இதனைத் தொடர்ந்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதாகவும், விசாரணைக்கு வர வேண்டும் என்றும் ராஜூ கூறிச்சென்றார்.

    அதன்படி பாண்டீஸ்வரி தனது தந்தை அங்குச்சாமியுடன் போலீஸ் நிலையம் சென்றார். ஆனால் அங்கு புகார் எதுவும் வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அதன் பிறகு பாண்டீஸ்வரி, அங்குச்சாமி வீட்டுக்கு திரும்பி வந்தபோது ராஜூ வழிமறித்து வாக்குவாதம் செய்தார். ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டீஸ்வரி கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவர் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம், சிவஞானபுரம் பஞ்சாயத்து 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ராமு என்பவருக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

    விருதுநகர்:

    உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

    விருதுநகர் மாவட்டம், சிவஞானபுரம் பஞ்சாயத்து 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ராமு உள்பட பலர் போட்டியிட்டனர். இதில் ராமுவுக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் காயத்ரி அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக காயத்ரி வீட்டில் கூறிச் சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் குடும்பத்தினர் தேடியும் காயத்ரி பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை கருப்பசாமி மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார்.

    அதில் காயத்ரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகவும், அவர் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காயத்ரியை தேடி வருகின்றனர்.

    சிவகாசி சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் கல்பனாதேவி (19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், வழக்கம் போல் காலை கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள விழுப்பனூரைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் பிரேமா. இவருக்கும், தேனியைச் சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஜெயப்பிரியா என்ற மகள் இருந்தார்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா அவரை பிரிந்து தந்தை வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு ஜெயப்பிரியா அருகில் உள்ள கோவிலில் கொடுத்த பிரசாதத்தை சாப்பிட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் மறுநாள் காலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பதறிபோன தாய் மற்றும் உறவினர்கள் சிறுமியை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஜெயப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த தகவல் அவரது தந்தை சுகுமாருக்கு தெரிவிக்கப்பட்டது. விழுப்பனூர் வந்த அவர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    அப்போது அவர், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார். இந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தொழிலாளி மண்எண்ணை கேனுடன் வந்து விருதுநகர் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 63), செங்கல் சூளை தொழிலாளி.

    இவருக்கும், அவரது சகோதரர்களுக்கும் நடைபாதை பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதில் மற்றொரு கருப்பையாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

    இந்த நிலையில் நடைபாதையை எதிர்தரப்பினர் அடைத்து விட்டனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையம், துணை சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவற்றில் தொழிலாளி கருப்பையா மனு கொடுத்துள்ளார்.

    ஆனால் அவரது மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தொழிலாளி கருப்பையா வந்தார்.

    கூட்டரங்கில் கலெக்டர் மேகநாதரெட்டி பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று கொண்டிருந்தார்.அவர் முன்பு வந்த கருப்பையா தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதனை கவனித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு கருப்பையாவை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த தீப்பெட்டியை பறித்தனர். பின்னர் கருப்பையாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளித்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மனு கொடுக்க வருபவர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதையும் மீறி கருப்பையா மண்எண்ணை கேனுடன் வந்து விருதுநகர் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×