என் மலர்tooltip icon

    விருதுநகர்

    வெம்பக்கோட்டை அருகே வீடுகளில் பட்டாசு தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை அருகே வீடுகளில் பட்டாசு தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் தொழிலும் ஒரு பக்கம் மும்முரமாக நடப்பதாக கூறப்படுகிறது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வெம்பக்கோட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுச்சாமி, ராமமூர்த்தி, ஜவகர் ஆகியோர் தலைமையில் தாயில்பட்டி, கோட்டையூர், பசும்பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கோட்டையூரை சேர்ந்த தங்கம்(வயது 50), முனீஸ்வரன்(52), பசும்பொன் நகரை சேர்ந்த முனீஸ்வரன்(42), கண்ணன்(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தலா 2 கிலோ சரவெடிகளை வெம்பக்கோட்டை போலீசார் கைப்பற்றினார்கள்.

    மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவனை, மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 45), டிரைவர்.

    இவரது மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 8 மற்றும் 9 வயதில் 2 மகன்கள் உள்ளனர். ராஜாராம் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போட்டார்.

    நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ராஜாராம் மனைவியிடம் சண்டை போட்டார். இதில் ஆத்திரமடைந்த மனைவி ரேவதி, அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையால் ராஜாராமை சரமாரியாக தாக்கினார்.

    தலையில் படுகாயம் அடைந்த ராஜாராம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் ராஜாராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ராஜாராமின் தாய் ராஜம்மாள் (67) அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவனை, மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
    கிருஷ்ணன்கோவிலில் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக 4 பேர் நின்றிருந்தனர். அவர்கள் கையில் பெரிய அளவிலான அட்டை பெட்டியும் இருந்தது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்களது பெயர் கோவிந்தராஜ் (வயது 35), கண்ணன் (44), கணேச மூர்த்தி (42), கோபிநாத் (29) என தெரியவந்தது.

    அவர்கள் வைத்திருந்த அட்டை பெட்டியில் பித்தளை பாத்திரங்கள் இருந்தன. இதுதொடர்பாக விசாரித்தபோது, தென்காசி மாவட்டம் கடைய நல்லூரைச் சேர்ந்த அய்யாச்சாமி (72) என்பவர் பழைய பித்தளை பாத்திரங்களை கொண்டு வந்தால் அதில் இரிடியம் இருப்பதாக கூறி மோசடியாக விற்று பணம் சம்பாதிக்கலாம் என கூறினார்.

    அதனை நம்பி பித்தளை பாத்திரங்களை கொண்டு செல்வதாக 4 பேரும் தெரிவித்தனர். மேலும் கிருஷ்ணன்கோவில் விடுதியில் அய்யாச்சாமி தங்கி இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

    இதனை தொடர்ந்து குறிப்பிட்ட விடுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக அய்யாச்சாமி உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    சிவகாசி அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணை அவரது குத்திக்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட எழுவன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 31).

    இவருக்கும், தென்காசி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூரைச் சேர்ந்த காளீஸ்வரன் (38) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    திருமணத்திற்கு பின்னர் லட்சுமி கணவர் மற்றும் குழந்தைகளுடன் கரிவலம் வந்தநல்லூரில் வசித்து வந்தார். காளீஸ்வரன் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் லட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினரும் லட்சுமியை கண்டித்தனர். இதனால் காளீஸ்வரன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை காலி செய்து விட்டு லட்சுமியின் சொந்த ஊரான எழுவன்பச்சேரி கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து விட்டார்.

    இங்கு சில நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த லட்சுமி நேற்று இரவு செல்போன் மூலம் கள்ளக்காதலனிடம் பேசி உள்ளார். இது தெரியவந்ததும் காளீஸ்வரன் மனைவியிடம் தகராறு செய்தார்.

    இருவருக்கும் இரவு 11 மணி வரை வாக்குவாதம் நீடித்தது. இதில் காளீஸ்வரன் ஆத்திரம் அடைந்து லட்சுமியை சரமாரியாக தாக்கினார். இருப்பினும் அவருக்கு கோபம் தீரவில்லை.

    வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மனைவியை கத்தியால் குத்திய காளீஸ்வரன் பின்னர் அதிர்ச்சி அடைந்தார். பயந்துபோய் அங்கிருந்து ஓடி விட்டார்.

    இதற்கிடையில் ஆபத்தான நிலையில் கிடந்த லட்சுமி கள்ளக்காதலனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் லட்சுமியின் உறவினர்களிடம் இதுபற்றி தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடம் சென்று பார்த்தபோது லட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து அவரது அண்ணன் முத்துச்சாமி ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் முருகேசுவரி மற்றும் போலீசார் விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய காளீஸ்வரனை தேடி வருகின்றனர்.

    விருதுநகரில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 17-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு சென்று வரும்போது அந்த பகுதியைச் சேர்ந்த திருமணமான வாலிபர் முனியராஜ் பேச்சு கொடுத்துள்ளார்.

    அவ்வப்போது அவர் சிறுமியிடம் 2-வது திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறி உள்ளார். சிறுமியும் நம்பினார். இதனை சாதகமாக பயன்படுத்தி சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் சந்தேகப்பட்டனர். இதுபற்றி அவரிடம் கேட்டுள்ளனர்.

    அப்போதுதான் முனியராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததும், அதன் காரணமாக சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.

    இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் விசாரணை நடத்தி முனியராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    சிவகாசி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    திருத்தங்கல் போலீசார் சத்யாநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரெங்கன்(வயது 18) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    ராஜபாளையத்தில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தில் உள்ள கயிற்றில் தூக்குப்போட்டு காவலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 85). இவர் அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இறந்து விட்டார். 2 மகன்களும் தனியாக வசித்து வருகின்றனர்.

    மாரியப்பன் அவ்வப்போது மகன்களை சந்தித்து பணம் வாங்கி செல்வது வழக்கம். கடந்த 2 நாட்களாக அவர் மகன்களை பார்க்க வரவில்லை. இதனால் அவரை தேடியபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தில் உள்ள கயிற்றில் தூக்குப்போட்டு மாரியப்பன் தற்கொலை செய்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மகன் மலைக்கனி (62) புகாரின் பேரில் சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பக்கோட்டை பகுதியில் வீட்டில் பட்டாசு தயாரித்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை அருகே உள்ள வெற்றிலையூரணி, விஜயகரிசல்குளம், அரசரடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, வேல்சாமி ஆகியோர் தலைமையில் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த விஜயகரிசல்குளத்தை சேர்ந்த கணேசன் (வயது 45), வெற்றிலையூரணியைசேர்ந்த முனியசாமி (40), ஜெயராஜ் (42), சுப்புராஜ் (50), கண்ணன் (35) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்து தலா 20 கிலோ சரவெடிகளைபறிமுதல் செய்தனர். அதேபோல தாயில்பட்டி அருகே உள்ள கீழகோதைநாச்சியார்புரத்தில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வீடுகளில் சோதனை நடத்தினார். அப்போது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கொடியரசு (வயது 50), கண்ணன் (36), வெள்ளை மருது (40) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தலா 20 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுவரை சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 32 பேர் வெம்பக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் நகராட்சி சுகாதாரத்துறை, வருவாய் துறையுடன் இணைந்து சம்மந்தபுரம் 8-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் ஆகியோரின் அறிவுரைப்படி மாவட்டத்தில் முதன்முறையாக 100 சதவீத தடுப்பூசி போட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன், நகர் நல அலுவலர் சரோஜா சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஆரியங்காவு வரவேற்றார். 8-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயசெல்வி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டைகர் சம்சுதீன் குலுக்கலில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். துப்புரவு ஆய்வாளர்கள் பழனிகுருகாளி, சுதாகரன், பிரபாகரன், பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.
    சேத்தூர் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தளவாய்புரம்:

    சேத்தூர் அருகே சோலைசேரி நாடார் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 70). இவர் ராஜபாளையத்தில் உள்ள மரக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை கொலை செய்து விட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட கோவிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி செந்திலா.

    மனைவியின் நடத்தையில் விஜயகுமார் சந்தேகப்பட்டதால் அடிக்கடி இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் செந்திலா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதற்கிடையில் விஜயகுமாருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெயவீரன்-மாரியம்மாள் (53), மகன் ஜெகதீசனுக்கும் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில் ஜெகதீசனை கத்தியால் விஜயகுமார் குத்தனார்.

    இதுதொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த அவர், ஜெகதீசனின் தாயார் மாரியம்மாளிடம், தனது மனைவி பிரிந்து சென்றதற்கு நீ தான் காரணம் என கூறி தகராறில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஜெயவீரன் வீட்டின் மாடியில் தூங்கினார். மாரியம்மாள் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டது.

    திடுக்கிட்டு எழுந்த ஜெயவீரன் அவசரமாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மாரியம்மாள் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அருகில் விஜயகுமார் அரிவாளுடன் நின்றிருந்தார்.

    தனது மனைவி பிரிந்து சென்றதற்கு காரணமாக இருந்ததால் மாரியம்மாளை வெட்டிக்கொன்றதாக கூறி விட்டு விஜயகுமார் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த தகவலின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய விஜயகுமாரை தேடி வருகின்றனர்.
    கிராக்ளிங் ட்ரீ பட்டாசு புஸ்வானம் ரகத்தை சேர்ந்தது. இதனை பற்றவைத்ததும் சிறு சிறு சத்தத்துடன் சில்வர் வண்ணத்தில் ஒளி சிந்தும்.
    சிவகாசி:

    இந்தியாவில் பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கி வரும் சிவகாசியில் பெரிய மற்றும் சிறிய அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன.

    இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். நாட்டின் 80 சதவீத பட்டாசு தேவையை சிவகாசி நிறைவு செய்கிறது.

    இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே பட்டாசு உற்பத்திகள் தீவிரப்படுத்தப்பட்டன. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சுற்றுச்சூழல் பாதிப்பின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் புதிய ரக பட்டாசுகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.

    குறிப்பாக சிவகாசியில் புதிய ரக வெடிகள் அறிமுகப்படுத்தப்படும். அதிக சத்தத்துடன் வெடிக்கும் இந்த வகை பட்டாசுகள் இளைஞர்களிடையே வரவேற்பை பெறும். ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும், உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவு காரணமாகவும் வெடிகள் தயாரிப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் புதிய ரக வெடிகள் அரிதாகவே விற்பனைக்கு வருகின்றன. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒளிகளை சிந்தும் பல்வேறு ரக பட்டாசுகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதில் ஆலை உரிமையாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று புதிய தொழில்நுட்பத்தில் மாசு ஏற்படாத வகையில் பட்டாசு தயாரிக்கும் முறையை அறிந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சிவகாசியில் பல வண்ணங்களை சிந்தும் ஒளி ரக பட்டாசு தயாரிப்பு மும்முரமாக நடந்தது. புஸ்வானம், தரைச்சக்கரம் கம்பி மத்தாப்பு, ராக்கெட் வெடிகள், சாட்டை, மெர்குரி போன்றவை அதிக அளவில் புதிய தொழில்நுட்பங்களை தயாரித்து அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ரக பட்டாசுகள்

    இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்பை பெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பல வண்ணங்களில் ஒளிசிந்தும் புதிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும் புதிய பட்டாசுகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டன. அதன் அடிப்படையில் பல்வேறு கட்ட பரிசோதனைகள் அடிப்படையில் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    கலர் சேஞ்சிங் பாட்ஸ், கலர் சேஞ்சிங் வீல், கிராக் கிளிங் ட்ரீ, ஸ்பின்னர் மவுஸ் என புதிய பட்டாசுகளுக்கு பெயரிடப்பட்டுள்ளன. இதில் கலர் சேஞ்சிங் பாட்ஸ் என்ற ரகம் புஸ்வானம் வகையை சேர்ந்தது. இதை பற்ற வைத்தவுடன் முதலில் பச்சை வண்ணத்திலும், அடுத்து சிவப்பு வண்ணத்திலும் ஒளியை சிந்தும்.

    ஸ்பின்னர் மவுஸ் பட்டாசு சங்கு சக்கர வகையை சேர்ந்தது. தரையில் சுழலும் போது இந்த பட்டாசு பச்சை, சிவப்பு ஒளியை மாறி மாறி வெளியிடும். சேஞ்சிங் வீல் பட்டாசும் இதே வகையை சார்ந்தது.

    கிராக்ளிங் ட்ரீ பட்டாசு புஸ்வானம் ரகத்தை சேர்ந்தது. இதனை பற்றவைத்ததும் சிறு சிறு சத்தத்துடன் சில்வர் வண்ணத்தில் ஒளி சிந்தும்.

    மேற்கண்ட 4 புதிய ரக பட்டாசுகளும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இதனை வெடிக்கலாம்.

    இதேபோல் வெடி ரகங்களிலும் புதிய வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒலியின் அளவு 125 டெசிபல்களுக்கு மேல் இருக்காமல் வெடி ரகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.


    ×