என் மலர்
விருதுநகர்
விருதுநகர்:
விருதுநகர் பெருமாள் கோவில் மேல தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31). இவர் மகளிர் சுய உதவிக்குழுவில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
சதீஷ்குமார் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் சென்று பணம் வசூலிப்பது வழக்கம். அதன்படி காசிராஜா என்பவரது வீட்டில் குடியிருந்த கீதா என்ற கீதாமணி (38) வீட்டிற்கு பணம் வசூலிக்க சென்றார்.
அப்போது கீதாவும், மேலரதவீதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவரும் சதீஷ்குமாரிடம் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி உள்ளனர். மேலும் அங்கிருந்த ஒரு பெண்ணையும் காண்பித்துள்ளனர்.
ஆனால் சதீஷ்குமார் வேண்டாம் என கூறி வெளியேற முயன்றபோது அவரை வீட்டுக்குள் இழுத்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த பணப்பையையும் பறிக்க முயன்றனர்.
அங்கிருந்து தப்பிய சதீஷ் குமார் இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி காசிராஜா, வெங்கடேஷ், கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கீதா, வெங்கடேஷ் கைது செய்யப்பட்டனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் வரும் ரெயில் மார்க்கத்தில் எஸ்.ராமலிங்கபுரம் அருகே தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் சிதறி கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்து.
இதையடுத்து ராஜபாளையம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்தவர் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூர் அருகே உள்ள சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி சுமன் என்பது தெரிய வந்தது.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர் அங்கு வேலை பிடிக்காமல் 7 மாதங்களுக்கு முன்பு சுப்புலாபுரம் திரும்பி வந்துள்ளார். சொந்த ஊரில் வேலை எதுவும் கிடைக்காத நிலையில் வறுமையின் காரணமாக விரக்தியில் இருந்த சக்திசுமன் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விருதுநகர், வடமலைக்குறிச்சியைச் சேர்ந்த கருப்பசாமி, வீரமல்லன் உள்பட 4 பேர் புல்லலக் கோட்டையில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகின்றனர்.
இந்த தோட்டத்தில் வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கீழ் இயங்கும் சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் தியாகபிரியன் தலைமையிலான போலீசார் அந்த தோட்டத்திற்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 4 நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் ஒரு வக்கீல் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது தான் விருதுநகரில் வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டு இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தான் சோதனை நடத்தி வெடிகுண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
எனவே வக்கீல் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கும், விருதுநகர் தோட்டத்து பராமரிப்பாளர்களுக்கும் தொடர்பு இருக்கலாமா? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே தோட்ட குத்தகைதாரர்கள் கருப்பசாமி, வீரமல்லன் ஆகியோருக்கும், சிலருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
எனவே தேர்தல் முன் விரோதத்தில் யார் மீதாவது வீசுவதற்கு வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டு இருந்ததா? என்பது குறித்தும் விருதுநகர் புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காட்டுபுதுத் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் சாத்தூர் நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இதில் 3-வது மகன் ஹரிகரபிரபு (வயது14). வீட்டின் அருகே இருக்கும் வைப்பாற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றான். அப்போது அவன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். இதனால் தண்ணீரில் மூழ்கிய அவனை காப்பாற்ற நண்பர்கள் விரைந்தனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தீயணைப் புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆற்று பகுதி முழுவதும் தேடினர். அதற்குள் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை ஹரிஹர பிரபு உடல் ஆற்றின் கரையோரம் இருந்த முள் புதரில் சிக்கி கிடப்பது தெரியவந்தது. தீயணைப்பு துறையினர் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒரு தம்பதியரை பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 ½ கிலோ கஞ்சா, ரூ.3,630 மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.
அவர்களது பெயர் அதிவீரன்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற சிவன் (வயது 40), அவரது மனைவி சாந்தி (38) என தெரியவந்தது.
இதே போல் திருத்தங்கல் முனியசாமி காலனியைச் சேர்ந்த காமராஜ் என்ற ராஜா (23), கார்த்திகேயன் (23) ஆகியோரும் 1½ கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ரூ.1,240 பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியலிங்காபுரத்தைச் சேர்ந்த வேலம்மாள் என்பவரிடம் இருந்து வன்னியம்பட்டி போலீசார் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாத்தூர் அருகே சின்னதம்பியாபுரம், ஓ.மேட்டுப்பட்டி, ராமலிங்காபுரம், பாப்பாகுடி, நள்ளி, நல்லமுத்தன்பட்டி, அழகாபுரி, ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.
இதனைத் தொடர்ந்து தாசில்தார் சீதாலட்சுமி, தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேஷ், துணை தாசில்தார் ராஜாமணி, வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சரவணகுமார், பாண்டியராஜ் ஆகியோர் நீர் நிரம்பி மறுகால் பாயும் கண்மாய் மற்றும் குளங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர் மழையினால் கண்மாய் மற்றும் குளங்கள் நிறைந்து உள்ளன. தொடர்ச்சியாக நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது.
எனவே பொதுமக்கள் கண்மாய், குளங்கள் பக்கம் செல்ல வேண்டாம் எனவும், சிறிய குழந்தைகளை அந்த பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 36). இவர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் தனி பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று இரவு செல்வகுமார் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
குண்டாயிருப்பு பகுதியில் சென்றபோது ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் செல்வகுமார் தூக்கி வீசப்பட்டார். படுகாயங்களுடன் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென்று அந்த தனியார் வங்கி மூடப்பட்டு டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பித்தரப்பட வில்லை. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளன.
வங்கி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், டெபாசிட் பணத்தை பொது மக்களுக்கு திருப்பிக் கொடுக்கவும் கோரி ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஜமீன் சிவக்குமார் தலைமை தாங்கினார். அகில பாரத இந்து மகாசபா மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன், கங்காதரன், அகில இந்திய தேவர் கூட்டமைப்பு தலைவர் ஜெயகுமார், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சதுரகிரி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
தனியார் வங்கி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தனியார் வங்கியில் டெபாசிட் செய்திருந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் வைப்பாறு- அர்ச்சுனா ஆறுகள் சந்திக்கும் இடத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தென்மாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் இருக்கன்குடியில் உள்ள அர்ச்சுனா ஆற்று பகுதியை கடந்து தான் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஆனால் கடந்த சில தினங்களாக விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இருக்கன்குடி அணை முழு கொள்ளவை எட்டியது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அர்ச்சுனா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக ஆற்றை கடந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர். எனவே கோவிலுக்கு செல்லும் வகையில் பொதுப்பணித்துறையினர் அந்த பகுதியில் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன. ஆனாலும் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் விருதுநகர் பகுதியில் நேற்று பெய்த மழையில் வீடு இடிந்து விழுந்ததில் விவசாயி பலியானார். அதன் விவரம் வருமாறு:-
விருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 85). விவசாயியான இவரது மகன்கள் மதுரையில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக காளியப்பன் செங்கோட்டையில் தனியாக வசித்தார்.
சில நாட்களுக்கு முன்பு காளியப்பன் மதுரையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் நேற்று ஊருக்கு திரும்பினார். அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. இரவு காளியப்பன் வீட்டில் தூங்கினார்.
தொடர் மழை காரணமாக ஏற்கனவே அவரது வீட்டின் சுவர் ஈரப்பதமாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று பெய்த மழையில் சுவர் மேலும் பலவீனம் அடைந்து நள்ளிரவு நேரத்தில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காளியப்பன் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆமத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி காளியப்பன் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






