என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் அருகே டிராக்டர் வாங்கிய கடன் தவணையை கட்ட முடியாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள விழுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 44). விவசாயியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி 2 டிராக்டர்களை வாங்கியுள்ளார். அதன் பின் விவசாயம் சரியாக நடைபெறவில்லை. இதனால் பன்னீர்செல்வத்தால் கடன் தவணையை சரியாக செலுத்த முடியவில்லை.

    இதில் விரக்தி அடைந்த பன்னீர்செல்வம் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (69). நோய்க் கொடுமை காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்சுழி அருகே உள்ள பி. புதுப்பட்டியை சேர்ந்தவர் லிங்கம் (35). இவர் 2 திருமணம் செய்திருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக 2 மனைவிகளும் பிரிந்து சென்றுவிட்டனர். இதில் விரக்தி அடைந்த லிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கூமா பட்டியைச் சேர்ந்த கணேசன் (32). இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த கணேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதேபோல் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (48) என்பவரும் நோய் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்கு சென்றார் என்பதை கண்டறிய அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருதுநகர்:

    அ.தி.மு.க. ஆட்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியும், அவரது உதவியாளர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

    ராஜேந்திர பாலாஜி எங்கு சென்றார் என்பதை கண்டறிய அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் கார் டிரைவர் ராஜ்குமார், சகோதரியின் மகன்களான வசந்தகுமார், ரமணன் ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் வைத்து 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரும் விசாரணை மேற்கொண்டார். இதனை அறிந்த ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள் திருத்தங்கல் போலீஸ் நிலையத்தின் முன்பு திரண்டனர். மோசடி வழக்கில் தொடர்பு இல்லாத அவர்களை விசாரணைக்கு அழைத்து வந்தது ஏன்? என்று போலீசாரிடம் கேட்டனர்.

    மேலும் அவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து ராஜேந்திர பாலாஜி சகோதரியின் மகன்கள் மற்றும் டிரைவரிடம் திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அவர்கள் 3 பேரும் மாவட்ட குற்றப்பிரிவுக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டனர். ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    மழை குறைந்ததால் தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    தளவாய்புரம்:

    சேத்தூர் அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அணைக்கட்டுப்பகுதி உள்ளது. இதனருகே சுற்றுலா பயணிகள் குளிக்க அருவி இருக்கிறது. இது சேத்தூர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கொரோனா சமயத்தில் சுற்றுலா பயணிகள் சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது தொடர் மழை காரணமாக இங்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

    தற்போது மழை பெய்யாததால் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனையடுத்து சேத்தூர் பகுதி வனவர் கார்த்திக் ராஜா வனத்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:-

    சுற்றுலா பயணிகள் தற்போது சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மட்டும் சாஸ்தா கோவில் அருவி பகுதிக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இங்கு இவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தேவதானம் சாஸ்தா கோவில் அருவியில் குளிக்க அனுமதி அளித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருமணம் செய்வதாக கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (26) என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று ரமேஷ் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பிய அந்த சிறுமியை ரமேஷ் குச்சம்பட்டியில் உள்ள நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கு ஒரு வாரம் இருவரும் தங்கியுள்ளனர். அப்போது ரமேஷ் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதற்கிடையில் ரமேஷ் வேலைக்கு செல்வதாக அந்த சிறுமியிடம் கூறி விட்டு அங்கிருந்து தப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனக்கு நேர்ந்த அவலநிலை குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்த ரமேசை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வயிற்று வலி காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மாயூரநாதர்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி துரை செல்வி (வயது28). இவர்களுக்கு விசித்ரா என்ற 8 வயதில் மகள் உள்ளார்.

    துரைச்செல்வி நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி தாங்க முடியாத காரணத்தால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து தீயை அணைத்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை துரை செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    விருதுநகர்:

    ராஜபாளையம் அருகே உள்ள சம்பந்தப்புரத்தைச் சேர்ந்தவர் நபிஸா பிவி. இவரது பேத்தி சையது அலி பாத்திமா (19). இவர் கடையநல்லூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    நபிஷா பிவி தனது பேத்தியை மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சையத் அலி பாத்திமா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    சிவகாசி அருகே உள்ள எம். புதுப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 29). இவர் கடந்த 9ந் தேதி திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் தொடர்பு கொள்ளவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. இது குறித்து அவரது மனைவி அழகு லட்சுமி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை தேடி வருகின்றனர்.


    மார்கழி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு வனத்துறை கேட் அடைக்கப்பட்டது.

    மார்கழி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுந்தரமகாலிங்கம் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    பக்தர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை அடிவாரம் பகுதிக்கு செல்ல அவதி அடைந்தனர். வருகிற 19-ந் தேதி வரை பக்தர்கள் சதுரிகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராஜபாளையம்:

    மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3000 வழங்கவும், கடுமையான ஊனமுற்றோருக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்கக் கோரி ராஜபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

    நகர தலைவர் சரவணன் தலைமையில் மாவட்ட பொருளாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணி, நகர செயலாளர் பாக்கியராஜ், நகர பொருளாளர் வீரமணி, ஒன்றிய செயலாளர் கணேசன் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    முற்றுகைப் போராட்டம் நடத்திய 40 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்திரிக்கோலால் குத்திய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பால்மணி (வயது49). இவரது மனைவி பரிபூரணம் (45) . இவர்களுக்கு ஜான்சிமேரி, சரண்யா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    பால்மணி, தனது மனைவி பரிபூரணம் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுவது வழக்கம்.

    நேற்று மதியம் மீண்டும் பால்மணி, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மனைவியின் தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அக்கம், பக்கத்தினர் பரிபூரணத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிபூரணம் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்ய வேந்தன் வழக்குப்பதிவு செய்து பால்மணியை தேடி வருகிறார்.
    அனுமதியுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் மழையின் காரணமாகவும், நீரோடை பகுதிகளில் நீர்வரத்து அதிகம் இருந்ததாலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதாலும், நீரோடைகளில் நீர்வரத்து குறைவாக இருப்பதாலும் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி நாளை (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கோவில் நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அனுமதியுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணிந்து கோவிலுக்கு வரவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகாசி அருகே விபத்தில் 4 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள முனீஸ்நகரை சேர்ந்தவர் வீரபொம்மு (வயது 22). இவர் சிவகங்கை சட்டகல்லூரியில் படித்து வருகிறார். இவர் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த பாண்டியன் மகள் கார்த்திகா (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருத்தங்கல் ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்த கண்ணன் மகன் கருத்தப்பாண்டியின் வாகனம் வீரபொம்மு வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வீரபொம்மு, கார்த்திகா, கருத்தப்பாண்டி மற்றும் அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த சிவகார்த்திக் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வெம்பக்கோட்டை அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி பெட்டிக்கடைகளில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி கடைகளில் சோதனை நடத்தினார். அப்போது சண்முகவேல் (வயது 52) என்பவரின் கடையில் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்தனர். அதேபோல தாயில்பட்டியை சேர்ந்த சுதர்சன் (32), வெற்றிலையூரணியை சேர்ந்த முத்து (42) ஆகியோரிடமிருந்து தலா 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களையும் கைது செய்தனர்.
    ×