என் மலர்tooltip icon

    விருதுநகர்

    கடந்த 7 நாட்களாக ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
    விருதுநகர்:

    ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த 17-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க முதலில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    ஆனால் ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார்? என்பது பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கூடுதலாக மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்பது கண்டறிய அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்த கட்சி நிர்வாகிகள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் பலர் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். தனிப்படை போலீசார் விருதுநகர், மதுரை, கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர் வேறு மாநிலங்களுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது.

    அதன் அடிப்படையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்தனர். அங்கு அவர்கள் முகாமிட்டு தேடி வருகின்றனர். ஆனால் ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய முடியவில்லை.

    இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு “லுக்-அவுட்” நோட்டீசு வழங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களிலும் பக்கத்து மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களிலும் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

    இதன்மூலம் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 7 நாட்களாக அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

    சாத்தூர் பகுதியில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக திருவிருந்தான்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி (வயது 38) என்பவரை கைது செய்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    காரியாபட்டி அருகே செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி கே. செவல்பட்டியில் குடியிருந்து வருபவர் மாணிக்கம் (வயது 27). இவர் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை செவல்பட்டி விலக்கு அருகே இரவு நேரத்தில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மாணிக்கத்திடம் இருந்த செல்போனையும், கழுத்தில் கிடந்த கவரிங் செயினையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர். இதுகுறித்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், ஆனந்தஜோதி ஆகியோர் நடத்திய விசாரணையில் காரியாபட்டி அருகே உள்ள முடியனூர் கிராமத்தை சேர்ந்த ராக்கேஷ் (22), பெருமாள் (26) ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் நலன்காக்க கால்நடைகள் இருக்கும் பகுதிக்கே சென்று மருத்துவ முகாம் நடத்தும் சிறப்பு வாய்ந்த திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என்றார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் தொகுதி புத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடை துறை துணை இயக்குநர் கோவில்ராஜ் முன்னிலை வகித்தார்.

    தங்கப்பாண்டியன் எம். எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், “மக்களை தேடி மருத்துவம்“ என்ற திட்டம் மூலம் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் நலன்காக்க கால்நடைகள் இருக்கும் பகுதிக்கே சென்று மருத்துவ முகாம் நடத்தும் சிறப்பு வாய்ந்த திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என்றார்.

    அதனைத் தொடர்ந்து முகாமை பார்வையிட்டு கால்நடைகளுக்கு மருந்துகளையும், உணவுகளையும் வழங்கினார். மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்தவர்களுக்கு பரிசுகளை எம்.எல்.ஏ. வழங்கினார்.

    உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, கவுன்சிலர் நவமணி, தி.மு.க. பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, ஒன்றிய துணை செயலாளர் நல்லுச்சாமி, கிளை செயலாளர்கள் பாலகணேஷ், கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பட்டாசு தொழிலை நிச்சயம் தமிழக அரசு காக்கும் என்று சிவகாசியில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் உறுதி அளித்தனர்.
    சிவகாசி:

    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 1,482 பேருக்கு ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று சிவகாசி கம்மவார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, எப்போது எல்லாம் ஆபத்து வருகிறதோ, அப்போது எல்லாம் மு.க.ஸ்டாலின் உதவிகரம் நீட்டுவார். இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் பட்டாசு தொழில் காக்க இந்த அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

    நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது, நானும், தங்கம் தென்னரசுவும் இந்த மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவோம். இந்த மாவட்டத்தில் முக்கிய தொழிலான பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி உள்ளோம். நிச்சயம் இந்த தொழில் அழிவில் இருந்து காக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் 1,482 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது மேடைக்கு பேராப்பட்டியை சேர்ந்த அசோக்குமார் தனது பெண் குழந்தையுடன் வந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் பெயர் வைக்க வலியுறுத்தினார். தமிழரசி என்ற பெயரை அமைச்சர் வைத்தார். நிகழ்ச்சியில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் மாவட்ட ஊராட்சி முகமை திலகவதி, தனி தாசில்தார் ஆனந்தராஜ், யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத் தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் உசிலை செல்வம் (பள்ளப்பட்டி), நாகராஜன் (விஸ்வநத்தம்), லீலாவதி சுப்புராஜ் (சித்துராஜபுரம்), தி.மு.க. பிரமுகர்கள் வனராஜா, தங்கராஜ், உதயசூரியன், காளிராஜன், சபையர் ஞானசேகரன், காங்கிரஸ் பிரமுகர்கள் சேர்மத்துரை, பைபாஸ் வைரக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    ராஜபாளையத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தங்கப்பாண்டியன எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 631 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

    இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ராஜம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சிங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
    விருதுநகர் மாவட்டத்தில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் 661 மையங்களில் நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டத்தில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் 661 மையங்களில் நடைபெற்றது. இதில் 18,437 பேருக்கு முதல் தவணைத்தடுப்பூசியும், 30,093 பேருக்கு 2-வது தவணைதடுப்பூசியும் ஆக மொத்தம் 48,530 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 21 லட்சத்து 77 ஆயிரத்து 927 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனப்பட்டி தெருவை சேர்ந்த காஜாமைதீன் (வயது 49) என்பவர் ஆத்துகடைத்தெருவில் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டு இருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டு மற்றும் லாட்டரி விற்ற ரூ.700-ம் பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 7 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சகானா என்ற சகானா பாத்திமா (வயது 24). நர்சிங் முடித்துள்ள இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது உறவினரான கூடலிங்கம் என்பவரை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.

    திருமணமான சில நாட்களில் கூடலிங்கம் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    மதுப்பழக்கத்தை கைவிடுமாறு சகானா கூறியும் கூடலிங்கம் கேட்கவில்லை. இந்த நிலையில் கூடலிங்கம் பழனி முருகன் கோவிலுக்கு மாலை போடப் போவதாகவும், இனிமேல் மது குடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார். ஆனால் அன்றும் கூடலிங்கம் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சகானா விரக்தி அடைந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சகானா தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் பார்த்து உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.
    பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று மார்கழி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு அதிகாலையிலேயே குவிந்தனர்.

    இதையடுத்து காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவில் பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் பரிசோதனை செய்தனர். இதையடுத்து மலைப்பாதை வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். பக்தர்களுக்கு காலை 10 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் வனத்துறை கேட் மூடப்பட்டது. பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பவுர்ணமி சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீரோடை பகுதிகளில் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மது மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உள்ளே கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
    தளவாய்புரம்:

    தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

    சேத்தூர் அருகே 10 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் தேவதானம் சாஸ்தா கோவில் அருவி உள்ளது. இது சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

    இந்த அருவி சேத்தூர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் கொரோனா சமயத்தில் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வனத்துறை இந்த அருவிக்கு வாரத்தில் சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உள்ளே செல்ல அனுமதி அளித்தது.

    இதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்தனர்.

    இவர்களை வனத்துறை தங்களது வாகனம் மூலம் உள்ளே அழைத்து சென்றனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு உள்ளே செல்ல அனுமதி கிடைத்ததால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் உள்ளே சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இந்த அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மது மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உள்ளே கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் இங்கு உள்ளே செல்ல அனுமதி தந்த தமிழக அரசுக்கும், வனத்துறைக்கும் சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்தனர்.
    சாத்தூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை செய்த சம்பவம் குறித்து கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் புதுசூரங்குடியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 25). இவருக்கும், வெம்பக்கோட்டை சிவலிங்காபுரத்தை சேர்ந்த மதன்குமார் (27) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

    அப்போது 30 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தொழில் தொடங்க கூடுதல் வரதட்சணை கேட்டு மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மகாலட்சுமியை சித்ரவதை செய்தனர்.

    இதுதொடர்பாக அவர் சாத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்படி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணையாக ரூ. 1 லட்சம், நகைகள் வாங்கிவரும்படி வற்புறுத்தியதாகவும், அதனை தர மறுத்தால் விவாகரத்து செய்துவிடுவோம் என்றும் கூறியதாக மகாலட்சுமி போலீசில் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் மதன்குமார், அவரது தந்தை செல்வராஜ், தாயார் மாரியம்மாள், சகோதரி நிர்மலாதேவி, அவரது கணவர் சேர்மக்கனி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சாத்தூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 51), இவரது மகள் துரைசெல்வி (28). இவர் கணவருடன் மாயூர்நாதபுரத்தில் வசித்து வந்துள்ளார். இதில் துரைசெல்வி குடும்ப பிரச்சினை காரணமாக தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சுந்தரராஜ் கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×