search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourists allow"

    வெள்ளம் தணிந்ததால் களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.
    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழை வலுவடைந்ததால் அருவி மற்றும் நீரோடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்ட வண்ணம் இருந்தது. இதுபோல திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது.

    சப்பாத்தில் உள்ள பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் திருமலை நம்பி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்பி வர முடியாமல் தவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை, போலீசார் கயிறு கட்டி மீட்டனர். இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி களக்காடு புலிகள் காப்பகத்தை மூட, களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வன பாதுகாவலருமான அன்வர்தீன், களக்காடு துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவிட்டனர்.

    அதன்படி களக்காடு புலிகள் காப்பகம் கடந்த 10-ம் தேதி மூடப்பட்டது. இதையடுத்து தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோவில் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில் நம்பியாற்றில் வெள்ளம் தணிந்ததை அடுத்து, திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேற்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே தலையணையில் வெள்ளம் தணிந்ததால் இன்று காலை களக்காடு புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது.

    தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது. இதையொட்டி களக்காடு தலையணை, திருக்குறுங்குடி வனத்துறை நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    ×