என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கணவரின் குடிப்பழக்கத்தால் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 7 மாதத்தில் தற்கொலை

    ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 7 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சகானா என்ற சகானா பாத்திமா (வயது 24). நர்சிங் முடித்துள்ள இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது உறவினரான கூடலிங்கம் என்பவரை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.

    திருமணமான சில நாட்களில் கூடலிங்கம் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    மதுப்பழக்கத்தை கைவிடுமாறு சகானா கூறியும் கூடலிங்கம் கேட்கவில்லை. இந்த நிலையில் கூடலிங்கம் பழனி முருகன் கோவிலுக்கு மாலை போடப் போவதாகவும், இனிமேல் மது குடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார். ஆனால் அன்றும் கூடலிங்கம் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சகானா விரக்தி அடைந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சகானா தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் பார்த்து உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.
    Next Story
    ×