search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு இடிந்து விழுந்து விபத்து"

    ஆரணி அருகே குடிசை வீடு இடிந்து விழுந்ததில் 70 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த இரும்பேடு அருகே பழங்காமூர் காவங்கரை பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 70). கணவரை இழந்து குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குடிசை வீடு சேதமடைந்துள்ளது. நேற்று இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் மண் சுவர் இடிந்து பச்சையம்மாள் மீது விழுந்தது.

    இதில் வீடு முற்றிலுமாக தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து வந்த ஆரணி தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி உடலை மீட்டனர்.

    சம்பவம் இடத்திற்கு வந்த ஆரணி டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை அருகே தொடர்ந்து பெய்து வந்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    வல்லம்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள சின்னமுத்தாண்டிப்பட்டியை சேர்ந்தவர் சலீம். கூலி தொழிலாளி. இவரது மனைவி ‌ஷகிலாபானு. இவர்களது மகள் ரிஸ்வானாபர்வீன், மகன் அசாருதீன். இவர்கள் 4 பேரும் கூரை வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சலீம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து பெய்து வந்த மழையால் சலீம் வீட்டின் சுவர் ஈரத்தில் ஊறி போய் இருந்துள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் சிறுவன் அசாருதீன் இடிபாடுக்குள் சிக்கி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். மகனை காப்பாற்ற முடியவில்லையே.. என கூறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அசாருதீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் கோவிந்தன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (52). இவரது மனைவி நித்தியா (40). இவர்களுக்கு காவியா (18), பவித்ரா (20) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ஈஸ்வரியின் தந்தை முருகன் (75) என்பவரும் வசித்து வருகிறார்.

    ஈஸ்வரன் தனது வீட்டிலேயே கைத்தறியில் பட்டுப்புடவை நெய்யும் தொழில் செய்து வந்தார். இவரது வீடு மண்ணால் ஆன ஓட்டு வீடு ஆகும்.

    அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஈஸ்வரனின் மண் வீடு ஈரப்பதம் காரணமாக உறுதி தன்மையை இழந்து வந்தது.

    இந்நிலையில் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீட்டின் உறுதி தன்மை மேலும் வலுவிழந்தது. மழை பெய்தபோது ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென வீட்டின் ஓடுகள் சரிந்து விழும் சத்தம் கேட்டது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் இடிந்து விழுந்து அமுக்கியது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமானது. சரியான நேரத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பின்னர் ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள உறவினர் வீட்டில் சென்று இரவு தங்கினர். இதுபற்றி தெரியவந்ததும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ, பேரூராட்சி செயல் அலுவலர் ரவி, தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று ஈஸ்வரனுக்கு ஆறுதல் கூறினர்.

    மேலும் வீடு இடிந்து விழுந்ததில் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 12 பட்டு சேலைகள் தயார் செய்ய வைத்திருந்த நூல் பாவு சேதம் அடைந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×