என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகரில் கிசான் கடன் அட்டை சிறப்பு முகாம் 24-ந் தேதி நடக்கிறது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பிரதமரின் கவுரவ நிதிஉதவி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு  4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம்- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 80 ஆயிரத்து 150 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    பிஎம் கிசான் பயனாளிகள் அனைவருக்கும் கிசான் கிரடிட் கார்டு  கிடைப்பதற்கு அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறப்பு வாராந்திர முகாம், மாவட்டத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் 24ந்தேதி முதல் 1ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    முகாமில் வேளாண்மைத்துறை அலுவலர்கள், கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி  மேலாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

    ஆகையால்  பிஎம் கிசான் விவசாயிகள், பயிர்காப்பீடு செய்யும் விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் கலந்து கொண்டு கிசான் கிரடிட் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தினை பெற்று, சேவை வழங்கும் வங்கிகளில்  சமர்ப்பித்து கிசான் கிரடிட் கார்டு பெற்று பயனடையலாம்.  மேற்கண்ட கிசான் கிரடிட் கார்டு மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை வங்கிகளில் கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சாத்தூர் அருகே கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
    சாத்தூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் ஆமணக்கு விளை பகுதியைச் சேர்ந்தவர் சுயம்புதாசன். இவரது மகன்கள் லிங்கேஸ் (36), சதீஷ் (34). இருவரும் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இருவரும் குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து சொந்த ஊரான ஆமணக்கு விளைக்கு குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக தங்களது காரில் புறப்பட்டு வந்தனர். காரை சதீஷ் ஓட்டினார்.

    சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானது.

    இதில் லிங்கேஸ் மகள் லியா ஆதிரா (3) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. லிங்கேஸ் மற்றும் சதீஷ் இருவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் என 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சாத்தூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து இளம்பெண் படுகாயமடைந்தார்.
    விருதுநகர் 
    சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் ரேவதி (வயது 25). மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். 

    கடந்த 2020ம் ஆண்டு இவருக்கும், சிப்பிபாறையை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.  செல்வராஜ் வெளிநாட்டில் வேலைக்கு சென்றிருந்தார். 

    இந்தநிலையில் இரு வீட்டாருக்கும் இடையே வரதட்சணை நகை தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரேவதியின் தாயார் விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் செல்வராஜ் வீட்டிற்கு சென்று பேசினர். 

    இதற்கிடையே சம்பவத் தன்று ரேவதி தனது தாயாரிடம் செல்போனில் பதற்றத் துடன் பேசியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. உடனே விஜயலட்சுமி, ரேவதியின்  பக்கத்து வீட்டில் வசிப்பவர் களை தொடர்பு கொண்டு விசாரித்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து படுகாயங்களுடன் ரேவதி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். 


    இதனால் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மகளின் நிலைமையை கண்டு கண்கலங்கினார். இது குறித்து அவர் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ரேவதியின் கணவர் செல்வராஜ், அவரது தாயார் கல்யாணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    ரேவதி தானாகவே கியாஸ் சிலிண்டரை திறந்து விபத்தை ஏற்படுத்தி கொண்டாரா? அல்லது சதி திட்டமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுகுடிக்க பணம் தராததால் கட்டிங்பிளேயரால் கள்ளக்காதலியின் கண்களை சேதப்படுத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவரம்பட்டி அழகு தேவன்குளம் சாலையை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த ராஜலட்சுமி மகள்களுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இவரது நடவடிக்கையால் வேதனை அடைந்த பெற்றோரும் அவருடன் பேசுவதில்லை.

    அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். (32). கட்டிட தொழிலாளியான இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் மனைவி தங்கமாரி 2 குழந்தைகளுடன் அழகாபுரியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மணிகண்டனுக்கும், ராஜலட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    ஆனாலும் மணிகண்டனுக்கு தொடர்ந்து மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மது அருந்தி வீட்டுக்கு வந்தார். இதனால் ராஜலட்சுமிக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று மதியம் மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதுபற்றி ராஜலட்சுமி கேட்டார். மணிகண்டன் மது குடித்து இருந்ததால் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் மணிகண்டன் மது குடிப்பதற்கு ராஜலட்சுமியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்து விட்டார்.

    இது மணிகண்டனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்த கட்டிங் பிளேயரை வைத்து அவரை சரமாரியாக தாக்கினார்.

    மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராஜலட்சுமியின் 2 கண்களையும் கட்டிங் பிளேயரால் சேதப்படுத்தினார். வலி தாங்க முடியாமல் ராஜலட்சுமி அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் மணிகண்டன் தப்பி ஓடி விட்டார். கண்களில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்த ராஜலட்சுமியை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தனர்.
    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெடிவிபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி பர்மா காலனியில் தங்கப்பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று மதியம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனை மலையைச் சேர்ந்த அரவிந்தன் (வயது 22) என்பவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக மாரனேரி போலீசார் விசாரணை நடத்தி பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கப்பாண்டி, அவரது சகோதரர்கள் ஈஸ்வரன், ராஜேஸ்வரன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பட்டாசு விபத்து ஏற்பட அஜாக்கிரதையாக இருந்ததாக ஆலை மேலாளர் ராஜேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    விபத்தில் பலியான அரவிந்தன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவிலைச் சேர்ந்த அன்னக்கிளி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அரவிந்தன் வெடிவிபத்தில் இறந்த சம்பவம் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி பர்மா காலனியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது. அந்த அறையில் வேலை செய்துகொண்டிருந்த அரவிந்த் என்ற தொழிலாளி இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் கட்டிட இடிபாடிற்குள் சிக்கி கருகிய நிலையில் கிடந்த வாலிபர் அரவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த துயரமான செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக கூறிய முதலமைச்சர், வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
    வத்திராயிருப்பு அருகே ஆதிதிராவிடர் நல விடுதியில் சப்கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
    வத்திராயிருப்பு 

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட சுந்தர பாண்டியம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மாணவர் விடுதி உள்ளது. 

    இங்கு சிவகாசி சப்-கலெக்டர் பிருத்திவிராஜ் திடீரென வந்து ஆய்வு மேற் கொண்டார். விடுதி கட்டடம், சமையல் அறை மற்றும் அரிசி, பருப்பு இருப்பு அளவு ஆகியவற்றை அவர் சரிபார்த்தார்.  பின்னர் விடுதி மாணவர்களுடன் அமர்ந்து காலைஉணவு சாப்பிட்டார். 

    மேலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுக்கு பள்ளிமுடித்து விடுதிக்கு வந்தபிறகு  மாலை வேளையில் விளையாடுவதற்கும், பின்னர் செய்திதாள் வாசிப்பதற்கும் உரியஏற்பாடு செய்யுமாறு விடுதி காப்பாளருக்கு உத்தரவிட்டார்.

    விடுதி மற்றும் விடுதி சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க கேட்டுக் கொண்டார். மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். 

    இந்த ஆய்வின்போது வத்திராயிருப்பு தாசில்தார்  உமாமகேஸ்வரி,  துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் காளிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
    விருதுநகரில் ஓவியப்பயிற்சி முகாம் நாளை நடக்கிறது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் வாயிலாக  6 வயது முதல் 16 வயதுவரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைப்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    சிவகாசி அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை களில் பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைகளில் பகுதி நேரமாக இந்தபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தன்று  ஓவிய பயிற்சி பட்டறை நடத்தவும்,  சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஓவியபயிற்சி முகாம் சிவகாசி மாநகராட்சி அண்ணாவி தோட்டம் ஏ.வி. டி. உயர்நிலைப்பள்ளியில் நாளை 21ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5  மணிவரை நடைபெறுகிறது. மதியம் 3  மணிக்கு மாணவர் கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப் பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும்.

    மேலும், கலந்து கொள் ளும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி பொருட்கள், பயிற்சி சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். இந்த வாய்ப்பினை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலையார்வமிக்க மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    நரிக்குடி அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா வீரசோழன் அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 27). இவர் அங்குள்ள மயானத்தில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறை யில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    இந்த கொலை தொடர் பாக கொலையாளிகளை பிடிக்க திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், நரிக்குடி இன்ஸ் பெக்டர் ராம நாராயணன், சப்-&இன்ஸ்பெக்டர்கள் தமிழழகன், துரைசிங்கம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை போலீசார் ஆனந்தராஜ் கொலை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட தகராறில் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்ட தாக தெரிகிறது. இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் தரக்குடியை சேர்ந்த முத்துஇருளாண்டி (19) வசந்த பாண்டி (21), சிலம்பரசன் (42) சசிகுமார் (26) ஆகிய 4பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் கொலை தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மேற்கு மாவட்ட மருத்துவ முகாம் நடந்தது.
    ராஜபாளையம் 

    ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மேற்கு மாவட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.  

    முகாமை மாணிக்கம்தாகூர் எம்.பி. தொடங்கி வைத்து சுகாதார அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:&

    மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கி ரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது இந்தியாவின் திடமான நிலையை உறுதி செய்கிறது.  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற விலைவாசி உயர்வால் மக்கள் எண்ணத்தை இந்த இடைத்தேர்தல்கள் பிரதிபலிக்கிறது. இது வரும் காலங்களிலும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

    தமிழக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்கவேண்டிய ஆளுநர் ரவி தற்போது தடைக்கல்லாக இருப்பது வருந்தத்தக்கதாகும். தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத்தில் பேசும்போது  ஆளுநருக்கும், எங்களுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை என விளக்கமாக பேசியுள்ளார்.  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை ஆளுநர் ரவி மறுஆய்வு செய்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

     யு.பி.எஸ்.சி. தலைவராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவரை நியமிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் முடிவாகதான் அமையும்.  இளையராஜா நல்ல ஒரு இசையமைப்பாளர். அரசியல் சார்பிலான கருத்துக்களை கூறியுள்ளார். இசைஞானியின் இசையை மட்டுமே ரசிப்போம்.

    - இவ்வாறு அவர் கூறினார். 

    முன்னதாக மருத்துவ முகாமை தொழிலதிபர் பழனி குரு ஆறுமுகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சிவகாசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சிவலிங்கம் முகாம் குறித்து விளக்க உரையாற்றினார். வட்டார மருத்துவ அதிகாரி கருணாகர பிரபு வரவேற்றுப் பேசினார். சத்திரப்பட்டி தொழிலதிபர் ஆறுமுகம், பெற்றோர் ஆசிரியர் சங்க சார்பில் ஞானகுரு, பள்ளி யின் தலைமையாசிரியர் முத்துக்குமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் கைப்பந்து, ஐவர் பூப்பந்து போட்டி நடந்தது.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான ஜவர் பூப்பந்து போட்டி மற்றும் விருதுநகர் மாவட்ட கைபந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. 

    ஜவர் பூப்பந்து போட்டியில் 17மாவட்டகளும், வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் 11அணிகள் கலந்து கொண்டன.  இரு போட்டிகளுக்கு பள்ளிகளின் செயலர் ஹரிஹரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளிகளின் தலைவர் ஹரிஹரசுப்பிர மணியன், குன்னூர் அரசு வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன், வத்திராயிருப்பு டாக்டர் ஆல்வின் முன்னிலை வகித்தனர். தலைமை யாசிரியர் ராஜசேகரன் வரவேற்றார்.  

    கைப்பந்து முதல்போட்டியை தி.மு.க. ஒன்றியச் செயலாளர் முனியாண்டி தொடங்கி வைத்தார். ஐவர் பூப்பந்தாட்ட முதல்போட்டியை பள்ளிகளின் செயலர் ஹரிஹரசுப்பிரமணியன். தலைவர் ஹரிஹரசுப்பிர மணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

    நிதிக்கமிட்டி தலைவர் சுந்தரராஜன், வத்திராயிருப்பு துணை வட்டாட்சியர் காளிராஜன், மாவட்ட உடற்கல்வி ஆய் வாளர் ஜெயக்குமார் இன்ஸ் பெக்டர் பாலாஜி, மாவட்ட கைப்பந்து கழக துணைத்தலைவர் சீனிவாசகம், சென்னை ஐ.சி.ஏப். முருகேசன் ஆகியோர் பேசினர். 

    மாவட்ட கைப்பந்துகழக தலைவர் துரைசிங் நிறைவு போட்டியில் பரிசு வழங்கினார். ஐவர் பூப்பந்தாட்ட போட்டியில் இந்து மேல்நிலைப்பள்ளி ஏ பிரிவு மாணவர்கள் முதல்பரிசை பெற்றனர். 

    ஈரோடு மாவட் டம் சவக்கட்டுபாளையம் பள்ளி மாணவர்கள் 2ம் இடத்தையும், ஏ.ஆர்.சி. மயிலாடுதுறை பள்ளி மாணவர்கள் 3ம் இடத்தையும், இந்து மேல் நிலைப்பள்ளி பி பிரிவு மாணவர்கள் 4ம் இடத்தையும், மதுரை திரு.வி.க. பள்ளி மாணவர்கள் 5ம் இடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர்கள் ரமணி, ராமசுந்தர் நன்றி கூறினர்.
    விருதுநகர் நகர, ஒன்றிய அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
    விருதுநகர்

    அ.தி-.மு.க.வில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. 3வது கட்டஅமைப்பு தேர்தல்கள்  தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக பலரும் வேட்புமனுதாக்கல் செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனுக்கள் பெறப்பட்டன.

     இதனைத்தொடர்ந்து தற்போது புதிய நிர்வாகிகள் பட்டியலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

    அதன்படி விருதுநகர் நகர செயலாளராக முகம்மது நெய்னார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவைத்தலைவராக ஜெயபாண்டி, இணைச் செயலாளராக மாரீஸ்வரி, துணை செயலாளர்களாக ஜோதிராணி, கண்ணன், பொருளாளராக ஸ்ரீதரன், மாவட்ட பிரதிநிதிகளாக அன்னலட்சுமி, சக்திவேல் சுரேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

     இதேபோல் மேற்குமாவட்டத்திற்கு உட்பட்ட  ஒன்றிய நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
    ஒன்றிய செயலாளர்களாக தர்மலிங்கம் (விருதுநகர் கிழக்கு), கண்ணன் (மேற்கு),  மச்சராஜா (வடக்கு) அறிவிக்கப் பட்டுள்ளனர்.

    அவைத்தலைவர்களாக பாலகிருஷ்ணன் (கிழக்கு), பாலமுருகன் (மேற்கு), சுந்தரபாண்டியன் (வடக்கு) ஆகியோரும், இணைச் செயலாளர்களாக அனுசுயா (கிழக்கு), ராஜேஸ்வரி  (மேற்கு), நாகலட்சுமி (வடக்கு) ஆகியோரும் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

    பொருளாளராக ராஜேந்திரன் (கிழக்கு), செல்வகுமார் (மேற்கு) பாண்டியராஜன் (வடக்கு) அறிவிக்கப்பட்டு உள்ளனர். துணைச் செயலாளர்களாக காளீஸ்வரி, வேலுச்சாமி (கிழக்கு), கனகவள்ளி, செந்தில்குமார் (மேற்கு), நாச்சியம்மாள், அன்புராஜ் (வடக்கு).

    மாவட்ட பிரதிநிதிகளாக ரேவதி, சுப்பையா, நடராஜன் (கிழக்கு), பேச்சியம்மாள், கணேசமூர்த்தி, சுப்புராஜ் (மேற்கு), ராஜாத்தி, சின்னச்சாமி, கண்ணன் (வடக்கு) நியமிக்கப்பட்டுள்ளனர்.
    ×