என் மலர்
விருதுநகர்
- பெண் தற்கொலை வழக்கில் கணவர் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
- இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சமையன் (வயது 27). இவரது மனைவி வைரலட்சுமி (27). இவர்களுக்கு 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சமையன், அவரது தந்தை நாகராஜ்(52), தாய் யசோதை (45) ஆகிய 3 பேரும் சேர்ந்து வைரலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். இதனால் விரக்தியடைந்த வைர லட்சுமி கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சமையன், அவரது தந்தை நாகராஜ், தாய் யசோதை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.
அதில் சமையன், அவரது தந்தை நாகராஜ், தாய் யசோதை ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி திருவிழா நாளை தொடங்குகிறது.
- 10 நாட்கள் நடைபெறும் பகல் பத்து உற்சவம் ஜனவரி 1-ந் தேதி வரை நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ேகாவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மார்கழி திருவிழா நாளை (23-ந் தேதி) பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
அன்றைய தினம் மாலை 5மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆண்டாள் பிறந்த வீட்டிற்கு வருகின்றனர். அங்கு அவருக்கு பச்சை காய்கறிகள் பரப்பி வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பிறந்த வீட்டிற்கு வந்த ஆண்டாள் வேதபிரான் பட்டர் திருமாளிகையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன் பிறகு பகல்பத்து மண்டபத்திற்கு செல்கிறார். 10 நாட்கள் நடைபெறும் பகல் பத்து உற்சவம் ஜனவரி 1-ந் தேதி வரை நடக்கிறது. 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை தொடர்ந்து ராப்பத்து திருவிழா தொடங்குகிறது.
11-ந் தேதி வரை ராப்பத்து உற்சவம் ராப்பத்து மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் ஆண்டாள்,ரெங்கமன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். வருகிற 7-ந் தேதி பிரியாவிடை உற்சவம் நடைபெறுகிறது.
உச்சநிகழ்ச்சியாக மார்கழி நீராட்ட எண்ணெய் காப்பு உற்சவ விழா 8-ந் தேதி எண்ெணய் காப்பு மண்டபத்தில் தொடங்குகிறது. இந்த விழா 15-ந் தேதி வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- விருதுநகரில் மத்திய அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
- தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
விருதுநகர்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல். தேர்விற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 4500 பணி காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதி ஆகும். இந்த தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் கடந்த 6-ந் தேதி முதல் நேரடியாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.
- இந்த நிகழ்வில் 1,135 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உள் புகார்கள் குழு மாணவர்கள் ஆலோசனை குழு மற்றும் வேலைவாய்ப்பு குழு ஆகிய குழுக்கள் இணைந்து ''கல்வி மற்றும் வாழ்க்கை ஒழுக்கத்தின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பிலான வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தி னராக ரெக்சோனா நம்பிக்கை கல்வி பயிற்சியாளர் சுதா, கலந்து கொண்டார்.
மாணவர் ஆலோசனை குழு உறுப்பினர் மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.துணை முதல்வர் மற்றும் உள் புகார்கள் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவிகளின் கல்வி மற்றும் வாழ்க்கை ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். இன்றைய சூழ்நிலையில், மாணவிகள் எவ்வாறு தங்களது கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, தன்னை தொழிற்துறையில் நுழை வதற்கு திறன்களை மேற்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களது இருதரப்பட்ட வாழ்க்கை சூழலை எதிர்கொள்வதற்கான யுக்திகளையும், நேர்த்திகளையும் பயிற்று வித்தார்.
வேலைவாய்ப்பு குழு பொறுப்பாளர் சங்கீதா நன்றி கூறினார். இந்த நிகழ்வில் 1,135 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- இரவில் தங்கவோ, நீரோடைகளில் குளிக்கவோ அனுமதி இல்லை.
- காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) முதல் 24-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. அமாவாசை, பிரதோஷத்தையொட்டி இந்த அனுமதி வழங்கப்படுகிறது.
காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது. அதேபோல், காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
இரவில் தங்கவோ, நீரோடைகளில் குளிக்கவோ அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாளில் பலத்த மழை அல்லது நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகமானால் அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.
- நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- இந்த தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23 -ம் கல்வியாண்டில் பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றிய விவரம், தங்கத்தினை உரசியும், உரசாமலும் தரம் அறியும் முறை, வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறைச் சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏதுவாக சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியினை முடித்தவர்கள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு மற்றும் ஆபரணக் கடை மற்றும் நகை வணிகம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த பயிற்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் பயிலும் வகையில் இந்த பயிற்சியானது சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
பயிற்சியின் கால அளவு 100 மணி நேரம் (10 வாரம்) பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரத்து 543 ஆகும். பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள கிட் பாக்ஸ் (நகை மதிப்பீட்டு பெட்டி) இலவசமாக வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு முதல்வர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், சிவசக்தி திருமண மண்டபம். எஸ்.ஆர்.நாயுடு நகர், பி.ஆர்.சி. டிப்பே எதிர்புறம், சாத்தூர் என்ற முகவரியிலோ அல்லது 04562-260293, 88071 59088 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- இந்த சோதனையின்போது 35 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விருதுநகர்
சென்னை தொழிலாளர் துறை ஆணையர், அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் எடையளவு சட்டத்தின் கீழ் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 15 வியாபாரிகள் மீதும், எடையளவுகள் மறு முத்திரையிடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 17 வியாபாரிகள் மீதும், தராசின் எடையினை சரிபார்க்க வியாபாரிகள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக் கற்கள் வைத்திருக்காத 3 வியாபாரிகள் மீதும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறைச்சி மற்றும் மீன் கடைகளில் எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு மீண்டும் வருகிற 25-ந் தேதி நடைபெறும். எனவே இறைச்சி மற்றும் மீன்கடை வியாபாரிகள் தங்களது எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திைர ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.
நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562-225130 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), 1/13சி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.இந்த சிறப்பாய்வில் சிவகாசி தொழிலாளர் துணை ஆய்வாளர் முத்து மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்களான தயாநிதி, உமாமகேசுவரன், செல்வராஜ். திருமதி.அ.பாத்திமா, துர்கா, முருகன், முருகவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.
- வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த சிவகாசி பா.ஜ.க. நிர்வாகி முன்ஜாமீன் மனு செய்யப்பட்டது.
- அதில் இந்த வழக்கிற்கும், தனக்கும் தொடர்பில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காகவே தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விருதுநகர்
சிவகாசி நகர பா.ஜ.க. செயலாளர் பாண்டியன் இவரின் மகனுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக சிவகாசி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தலைவர் கலையரசன் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.11 லட்சம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு ரெயில் வேயில் வேலை கிடைக்க வில்லை. இதையடுத்து துறை முகத்தில் வேலை வாங்கி தருவதாக சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த வேலையும் கிடைக்கவில்லை.
பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவில் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் கலையரசன் கைது செய்யப்பட்டார். சுரேஷ்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு சுரேஷ்குமார் சிவகாசி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில் இந்த வழக்கிற்கும், தனக்கும் தொடர்பில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காகவே தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும், அதனால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- விருதுநகர் மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்ஸ்-அப் மூலம் குறை தீர்க்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
- குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-
அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு சேவைகளில், மாவட்டத்திற்கு தேவை யான முக்கியமான அரசு சேவைகளின் தகவல்கள், இணையதள முகவரிகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அறிந்து பயன்பெறும் வகையில், இந்தியாவிலேயே முதன்மு றையாக விருதுநகர் மாவட்டத்தில் ''விரு'' (VIRU) தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை பொதுமக்களுக்கு தேவையான அரசு தகவல்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 94884 00438 என்ற எண்ணிற்கு "HI" என்று அனுப்புவதன் மூலம் இந்த சேவையுடன் தொடர்பு கொண்டால், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சேவைகளான உங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரை தேட, புதிய வாக்காளராக பதிவு செய்ய, வாக்காளர் பட்டியலில் நீக்கம், இடமா ற்றம், திருத்தம் செய்ய, நகல் வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி பதிவு செய்ய என சேவைகளின் பட்டியல்கள் காண்பிக்கப்படும்.
மேலும் மின்னணு வாக்காளர் அட்டையினை பதிவிறக்கம் செய்ய, உங்களுடைய வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குச்சாவடி நிலை அலுவலரை தெரிந்து கொள்ள, முதல்வரின் தனிப்பிரிவு-முதல்வரின் முகவரி, எங்கிருந்தும் எந்த நேரத்திலும் நிலவு டமை ஆவணங்கள் -பட்டா, சிட்டா, அ-பதிவேடு மற்றும் புலப்படம், இணையவழி சான்றிதழ் சேவைகள், முக்கிய உதவி எண்கள், அறிவிப்புகள், திட்டங்கள், செய்தி வெளியீடு, தமிழக அரசுத்துறைகளின் சமூக வலைதள பக்கங்கள், இணையதள முகவரிகள் என சேவைகளின் பட்டியல்கள் காண்பிக்கப்படும்.
அந்த பட்டியலில் தங்களுக்கு தேவையான சேவையின் ஆங்கில வரிசை எழுத்தை உள்ளீடு செய்து தேர்ந்தெடுத்து பயன் பெறலாம். இந்த சேவையை பொதுமக்கள் 24 மணி நேரமும், எந்த இடத்தில் இருந்தும் தங்கள் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை எண்ணை விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பயனாளிகள் தங்கள் கைப்பேசியில் பதிவு செய்துள்ளனர். இந்த சேவையில் பொதுமக்கள் பயன்பாடு குறித்து தொடர்ந்து கண்காணிப்பதற்கும், அதற்கேற்றவாறு சேவை களை வழங்குவதற்கும் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து தரப்பட்ட பொதுமக்கள் இந்த விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காதல் திருமணம் செய்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோடு பகுதியை சேர்ந்தவர் மதன் (24). இவர் உறவினர்களின் எதிர்ப்பை மீறி வேறு இனத்தை சேர்ந்த காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மனைவியுடன் திருமணம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த உறவினர்கள் ஜெயபாலன், சுந்தரமகாலிங்கம், காளியப்பன், ஆனந்த், கணேசன் மற்றும் 9 பேர் மதனை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மதன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது.
- முன்னாள் பேராயர் ஜோசப், கிறிஸ்துவின் பிறப்பு குறித்து பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது.
சபைகுரு அருள்தனராஜ் தலைமை தாங்கினார். பாடகர் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களை இசையுடன் பாடினர். மதுரை -ராமநாதபுர முன்னாள் பேராயர் ஜோசப், கிறிஸ்துவின் பிறப்பு குறித்து பேசினார். இதில் உதவி குருக்கள் மற்றும் திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.
- பெண்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
- வத்திராயிருப்பு போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி எழில்நகர் பகுதியை சேர்ந்தவர் எட்டிராஜ் (54).வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி நாகேஷ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பாதிப்பால் நாகேஷ்வரி அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசிட் எடுத்து குடித்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகேஷ்வரி இறந்தார். இதுகுறித்து எட்டிராஜ் அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே ஆகாசம்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் (70). சில ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பால்ராஜின் மகன் தங்கசாமி அளித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






