என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • முதலிடம் பெற்ற காளீஸ்வரி கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • கல்லூரி செயலாளர் செல்வராசன், முதல்வர் பாலமுருகன் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை முதுகலை 2-ம் ஆண்டு மாணவி ஜி.சக்தி கிருபா, தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய 2023-ம் ஆண்டிற்கான அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்.

    ''மானுட சேவையின் தேவை'' என்ற தலைப்பில் பேசிய அவர் மாவட்ட அளவிலான முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை பெற்றார்.

    பரிசு பெற்ற மாணவி சக்தி கிருபாவை, கல்லூரி செயலாளர் செல்வராசன், முதல்வர் பாலமுருகன், ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா மற்றும் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • குழந்தை பெற்ற பின்பு தாமரைச்செல்விக்கு ரத்த கசிவு இருந்தது. இதற்கு சிகிச்சை அளித்து வந்தோம்.
    • ரத்த கசிவு நீடித்ததால் மீண்டும் இங்கு வந்த அவருக்கு சோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோதைநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி, தொழிலாளி. இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 25). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான தாமரைச் செல்வி பிரசவத்திற்காக கடந்த 6-ந்தேதி ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆபரேசன் தாமரைச் செல்விக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் பிரசவம் முடிந்த பின்பு அவருக்கு அடிக்கடி ரத்த கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அவரை ஆஸ்பத்திரியில் தொடர்ந்து இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அதை கேட்காமல் உறவினர்கள் கடந்த 9-ந்தேதி தாமரைச் செல்வியை வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்ற பின்பும் அவருக்கு ரத்தகசிவு தொடர்ந்து நீடித்ததால் தாமரைச்செல்வி உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

    இதையடுத்து உறவினர்கள் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு விவரம் கேட்ட டாக்டர்கள், பிரசவம் பார்த்த ஆஸ்பத்திரிக்கே செல்லுமாறு கூறினர். இதனை தொடர்ந்து தாமரைச்செல்வி மீண்டும் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தாமரைச் செல்விக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் ரத்தம் உறைந்த காரணத்தால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் மீண்டும் சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் தற்போது ஆஸ்பத்திரியில் உடல்நலம் தேறி வருகிறார்.

    இதற்கிடையே குழந்தை பெற்ற பெண்ணில் வயிற்றில் கவனக்குறைவாக பஞ்சு வைத்ததாக தகவல் பரவியது. இதற்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மாரியப்பன் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-

    குழந்தை பெற்ற பின்பு தாமரைச்செல்விக்கு ரத்த கசிவு இருந்தது. இதற்கு சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் உறவினர்கள் அவரை முன்கூட்டியே அழைத்து சென்றுவிட்டனர். ரத்த கசிவு நீடித்ததால் மீண்டும் இங்கு வந்த அவருக்கு சோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்.

    வயிற்றில் மருத்துவர்கள் கவனக்குறைவாக பஞ்சு வைத்ததாக வதந்தி பரவி இருப்பது வருத்தமடைய செய்கிறது. அது முற்றிலும் தவறான தகவல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விக்னேஷ் நேற்று பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
    • சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பேட்டை ராமசாமி ராஜா தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30), டாஸ்மாக் பார் ஊழியர். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் விக்னேஷ் மது போதைக்கு அடிமையாகி மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவருக்கு வலிப்பு நோயும் இருந்து வந்தது.

    விக்னேஷ் நேற்று பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை உறவினர்கள் மீட்டபோது, அவரது கழுத்தில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரது உடலை நேற்று இரவு உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர்.

    இதுபற்றி விக்னேசின் தாய் ராமலட்சுமி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகன் விக்னேஷ் சாவில் மர்மம் உள்ளது. அவரது உடலை ரகசியமாக சுடுகாட்டுக்கு எடுத்து சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விக்னேசின் உடலை சுடுகாட்டில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் எப்படி இறந்தார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும்.

    சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகாசி அருகே 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 200 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
    • முன்னோர்கள் வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றாக தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கிடைத்து உள்ளதாக தொல்லியல் துறை இயக்குனர் தெரிவித்தார்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகளின் 9 நாட்கள் முடிவில் இதுவரை சுடுமண் புகைப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி உள்ளிட்ட 200 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்த முன்னோர்கள் வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றாக தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கிடைத்து உள்ளதாக தொல்லியல் துறை இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

    2-ம் கட்ட அகழாய்வில் இன்னும் பல குழிகள் தோண்ட இருப்பதால் முதல்கட்ட அகழாய்வில் கிடைத்ததை விட, பண்டைய கால பொருட்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    • மோட்டார்சைக்கிள் திருடியவர்களை 2 மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
    • இருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிபவர் ஆனந்தகுமார். இவர் சம்பவத்தன்று காந்திநகரில் உள்ள ஓட்டல் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    இதுதொடர்பாக அவர் அருப்புக்கோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண்காரட் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், உமா மாலினி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திருட்டு நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளை திருடியது கல்லூரணியை சேர்ந்த பெருமாள் மகன் முரளிதரன், நாகூர் கனி என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், ஆனந்தகுமாரின் மோட்டார் சைக்கிளை மீட்டனர். திருட்டு போன 2 மணி நேரத்திலேயே மோட்டார்சைக்கிளை போலீசார் மீட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
    • சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் 10 நாட்கள் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா கொண்டு வரப்பட்டு பல்வேறு சமூகத்தினரும் விழாவை கொண்டாடினர்.

    11-வது நாள் பூக்குழி திருவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் தீக்குண்டத்தில் எண்ணெய், நெய் ஊற்றி வழிபாடு செய்தனர். மாலையில் திரவுபதி அம்மன், கிருஷ்ணர், அர்ஜுனர் சமேதராய் சப்பரத்தில் எழுந்தருளி தீ மிதிக்கும் பக்தர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் முன்பு உள்ள தீ குண்டத்தை வந்தடைந்தனர். குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

    டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும், சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி கவின் கிருஷிகா தேர்வானார். இதனால் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ராக்கெட் தொழில்நுட்பங்கள் பார்வையிட இஸ்ரோ நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இதற்காக இளம் விஞ்ஞானி திட்டம் அமல்படுத்தியது. இது இஸ்ரோ நிதி உதவியுடன் பள்ளி மாணவர்களின் கல்விக்கான பயிற்சி திட்டம் ஆகும். இதற்கான தேர்வு ஆன்லைனில் ஸ்பேஸ் க்விஸ் என்ற தேர்வு நடத்தப்பட்டது.

    இதில் சத்யா வித்யாலயா பள்ளி மாணவி எஸ்.ஆர். கவின் கிருஷிகா தேர்வானார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோ நிர்வாகம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை மாணவி கவின் கிருஷிகாவுக்கு மே 14-ந் தேதி முதல் 26-ந் தேதி பார்வையிடவும், பயிற்சி பெறவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • போக்சோ வழக்கில் சிறுமியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • ஆனந்தன் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் பெத்துசெட்டிபட்டியை ேசர்ந்தவர் ஆனந்தன் (வயது44). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்.28-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து வச்சக்கா ரப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆனந்தன் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசன் (20) என்பவர் ஆனந்தன் மகளை கடத்தி சென்று திருமண ஆைச காட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.

    போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்காக ஆனந்தன் தனது மகளை அழைத்து சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, தமிழரசன் மற்றும் தனது நண்பர் வீரபாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து வழக்கை வாபஸ் வாங்க கூறி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆனந்தன் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்சு டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள சவ்வாஸ்புரத்தை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது32). இவர் செங்கல்பட்டில் 108 ஆம்புலன்சு டிரைவராக பணிபுரிகிறார். இந்த நிலையில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தார்.

    அப்போது கருப்பசாமி என்பவர் மருதுபாண்டியிடம், உனது மனைவிக்கும், உறவினரான விஜயகுமாருக்கும் பழக்கம் இருக்கிறது என்று கூறினார். பொது இடத்தில் கருப்பசாமி அருகில் இருந்தபோதே விஜயகுமாரிடம் மருதுபாண்டி இதுகுறித்து கேட்டார். ஆனால் விஜயகுமார் அதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக சென்று விட்டார். தான் கூறியதை விஜயகுமாரிடம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி தனது நண்பர் ராமர் என்பவருடன் சேர்ந்து மருதுபாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த மருதுபாண்டி அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    • குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மங்காபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 45). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பலமுறை வீட்டை விட்டு வெளியே சென்று 2, 3 நாட்களில் திரும்பி வந்து விடுவாராம்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தபோது ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா மலையின் பின்புறம் உள்ள முனியாண்டி கோயில் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி மாதா ஸ்ரீவில்லி புத்தூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படுகாயத்துடன் 2 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி ரோடு பூலாவூரணியில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 30-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த பட்டாசு ஆலைகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை ஆலை திறக்கப்பட்டு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஒரு அறையில் தரை சக்கரம் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.

    இதில் இடையன்குளத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 32), தங்கவேல் (55), கருப்பம்மாள் (50) உள்பட 4 பேர் பணியாற்றி வந்தனர். மதியம் பட்டாசு தயாரிப்புக்காக மருந்து கலவை தயார் செய்யப்பட்டது. அப்போது திடீரென மருந்துகள் உரசி தீப்பற்றியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அங்கு ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சிறிது நேரத்தில் அந்த அறை மற்றும் அருகில் இருந்த மற்றொரு அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.

    இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த கருப்பசாமி, தங்கவேல் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயம் அடைந்த கருப்பம்மாள் உள்பட 2 பேரை சக தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய்கள் ஒரு ஆட்டை இழுத்து சென்று விட்டன.
    • இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் ஆகும்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள கண்ணகுடும்பன் பட்டியை சேர்ந்தவர் பன்னீர்வேல் (வயது 73). இவரது மகனுக்கு சொந்தமான நிலத்தில் 23 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று காலை 4 மணிக்கு தொழுவத்துக்கு சென்று ஆடுகளுக்கு தீவனம் அளித்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். மீண்டும் 6 மணி அளவில் அங்கு சென்றார்.

    அப்போது அங்கு 3 நாய்கள் தொழுவத்துக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியபடி இருந்தன. இவர் அங்கிருந்த கம்பை எடுத்து அந்த நாய்களை விரட்ட முயன்றார். அந்த நாய்கள் பன்னீர்வேலை பார்த்து குறைத்து கடிக்க வந்தன. சுதாரித்துக் கொண்ட பன்னீர்வேல் கம்பால் அடித்து நாய்களை விரட்டியடித்தார். அப்போது அந்த நாய்கள் ஒரு ஆட்டை இழுத்து சென்று விட்டன.

    அதன்பின்னர் ஆடுகளை பார்த்தபோது பல ஆடுகள் கடித்து குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தன. ஒவ்வொரு ஆடாக அவர் சென்று பார்த்தார். அதில் 11 ஆடுகள் இறந்தது தெரிய வந்தது. மேலும் 11 ஆடுகள் காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் ஆகும்.

    இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அருகில் கோழி பண்ணை வைத்திருக்கும் இளங்கோ மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான நாய்கள்தான் ஆடுகளை கடித்து குதறியது என தெரியவந்தது.

    இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பன்னீர்வேல் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×