என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராஜபாளையத்தில் டாஸ்மாக் பார் ஊழியர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை
- விக்னேஷ் நேற்று பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
- சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பேட்டை ராமசாமி ராஜா தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30), டாஸ்மாக் பார் ஊழியர். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் விக்னேஷ் மது போதைக்கு அடிமையாகி மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவருக்கு வலிப்பு நோயும் இருந்து வந்தது.
விக்னேஷ் நேற்று பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை உறவினர்கள் மீட்டபோது, அவரது கழுத்தில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரது உடலை நேற்று இரவு உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர்.
இதுபற்றி விக்னேசின் தாய் ராமலட்சுமி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகன் விக்னேஷ் சாவில் மர்மம் உள்ளது. அவரது உடலை ரகசியமாக சுடுகாட்டுக்கு எடுத்து சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விக்னேசின் உடலை சுடுகாட்டில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் எப்படி இறந்தார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும்.
சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






