என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருதுநகர் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 11 செம்மறி ஆடுகள் பலி
- நாய்கள் ஒரு ஆட்டை இழுத்து சென்று விட்டன.
- இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் ஆகும்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள கண்ணகுடும்பன் பட்டியை சேர்ந்தவர் பன்னீர்வேல் (வயது 73). இவரது மகனுக்கு சொந்தமான நிலத்தில் 23 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று காலை 4 மணிக்கு தொழுவத்துக்கு சென்று ஆடுகளுக்கு தீவனம் அளித்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். மீண்டும் 6 மணி அளவில் அங்கு சென்றார்.
அப்போது அங்கு 3 நாய்கள் தொழுவத்துக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியபடி இருந்தன. இவர் அங்கிருந்த கம்பை எடுத்து அந்த நாய்களை விரட்ட முயன்றார். அந்த நாய்கள் பன்னீர்வேலை பார்த்து குறைத்து கடிக்க வந்தன. சுதாரித்துக் கொண்ட பன்னீர்வேல் கம்பால் அடித்து நாய்களை விரட்டியடித்தார். அப்போது அந்த நாய்கள் ஒரு ஆட்டை இழுத்து சென்று விட்டன.
அதன்பின்னர் ஆடுகளை பார்த்தபோது பல ஆடுகள் கடித்து குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தன. ஒவ்வொரு ஆடாக அவர் சென்று பார்த்தார். அதில் 11 ஆடுகள் இறந்தது தெரிய வந்தது. மேலும் 11 ஆடுகள் காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் ஆகும்.
இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அருகில் கோழி பண்ணை வைத்திருக்கும் இளங்கோ மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான நாய்கள்தான் ஆடுகளை கடித்து குதறியது என தெரியவந்தது.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பன்னீர்வேல் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






