என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • பஸ் நிறுத்தம் அருகே வரும் போது திடீரென என்ஜினீனில் புகை வெளியேறியது.
    • பயணிகள் மாற்று பஸ் மூலம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திண்டிவனம்:

    சென்னையில் இருந்து நெய்வேலிக்கு அரசு விரைவு பஸ் 18-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பஸ் நிறுத்தம் அருகே வரும் போது திடீரென என்ஜினீனில் புகை வெளியேறியது.

    புகையானது பஸ் முழுவதும் பரவிய நிலையில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கினர். பின்னர் பயணிகள் மாற்று பஸ் மூலம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மதுஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. சார்பில் கலந்துகொள்வதாக வதந்தி.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. நேற்று மாலை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் விழுப்புரம் சைபர்கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரனிடம் புகார் மனு கொடுத்தார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள மதுஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. சார்பில் நான் கலந்து கொண்டு பேசப்போவதாக சில கருத்துக்களை பேஸ்புக், எக்ஸ், வாட்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இது முழுக்க முழுக்க தவறான, பொய்யான தகவல் ஆகும்.

    திட்டமிட்டே என்மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே இதுபோன்ற குற்ற செயல்களை செய்துள்ளனர். இந்த பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் என் மீது எத்தனையோ பொய் வழக்கு, எனக்கு கொலை மிரட்டல் விடுப்பது, அச்சுறுத்தும் செயல்கள் நடந்துள்ளது.

    இதுவரை விழுப்புரம், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட இடங்களில் 23 புகார்களை கொடுத்துள்ளேன். ஆனால் தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்மீது தொடா்ந்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

    • பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
    • கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி அவரின் உருவசிலைக்கு டாக்டர் ராமதாஸ் மரியாதை செலுத்தி அவரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பா.ம.க. அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை பேசிக்கொண்டுள்ளனர்.

    பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் தி.மு.க.செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. இதை தெரிந்து கொள்ள கூட முதலமைச்சருக்கு ஆர்வமில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பா.ம.க. போராடிவருகிறது.

    பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை..

    1987-ம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெற்றோம். 114 சமூகம் 6.7 விழுக்காடு, வன்னியர் சமூகம் 14.1 விழுக்காடு ஆகும். இது தொடர்பாக சமீபத்தில் அரசு வெளியிட்டது பொய்கணக்குதான். கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார். தியாகிகள் தினமான இன்று நாங்கள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

    அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர்கூட வன்னியர் கிடையாது. எதிலும் பிரதிநிதித்துவம் இல்லை. 23 வன்னியர்கள், 21 பட்டியல் இன எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் உள்ளனர். மற்ற சமூக எம்.எல்.ஏ.க்களில் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை எண்ணி பார்க்கவேண்டும். அடையாள அரசியல் செய்யவேண்டும். இன்று பெரியார் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாஸ்மாக்குக்கு அதிக வருவாய் ஈட்டியதற்காக ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு கலைஞர் விருது அளிக்கப்பட்டதோ என அவர் கேள்வி எழுப்பினார்.

    • மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    • தளபதி மாநாடு நடத்துவதற்கு எந்த தேதியை அறிவிக்கிறாரோ அந்த நாள் எங்களுக்கு வெற்றி திருநாள்.

    விக்கிரவாண்டி:

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

    அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இந்த அறிவிப்புக்கு பிறகு கட்சியின் முதல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் தீவிரம் காட்டினார்.

    இதற்காக முதல் கட்டமாக அவர், கடலூரில் உள்ள பிரபல ஜோதிடர் சந்திரசேகரிடம் கட்சி கொடி மற்றும் மாநாடு நடத்த தேதி ஆகியவை குறித்து கேட்டதாக தெரிகிறது.

    அதன்படி, நடிகர் விஜய் கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி, முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை, கொடியின் விளக்கம், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விளக்குவதாக அறிவித்தார். இது விஜய் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து சேலம், திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாநாடு நடத்துவதற்கான இடத்தை பார்வையிட்டனர்.

    இதனால் மாநாடு எங்கு நடைபெறும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இப்படி இருக்கும் பட்சத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் வருகிற 23-ந் தேதி மாநாடு நடத்துவதற்கு பாதுகாப்பு அளித்திட அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி அக்கட்சியினர் மனு அளித்தனர். இதையடுத்து 21 கேள்விகள் பட்டியலிடப்பட்டு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு கடந்த 2-ந் தேதி விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கடிதம் அனுப்பியிருந்தார்.

    தொடர்ந்து போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கான பதிலை கடிதமாக புஸ்சி ஆனந்த் கடந்த 6-ந் தேதி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேசிடம் அளித்தார். அதன் பிறகு மாநாட்டுக்கு அனுமதி வழங்கி 33 நிபந்தனைகளுடன் கூடிய கடிதம் ஒன்றை கடந்த 8-ந் தேதி காவல்துறை வழங்கியது.

    இதற்கிடையில் முதல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த பல்வேறு கெடுபிடி போடப்பட்டதால், அதற்கான பணிகள் தொடங்காமல் உள்ளது. மேலும் 23-ந் தேதி திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா? என்ற சூழல் உருவானது.

    இது ஒருபுறம் இருக்க விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஜய் கட்சியினர் சுவர் விளம்பரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று தொண்டர்களுக்கு நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனால் மாநாடு தேதி தள்ளிப்போவது உறுதியானது.

    இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் கூறுகையில், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் 27 பேரிடம் மாநாடு நடத்த செப்டம்பர் 23-ந் தேதி வரை ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. மொத்தம் 85 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் ஒப்பந்த காலம் 23-ந் தேதியுடன் முடிவடைவதால், ஒப்பந்த தேதியை நீட்டிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது என்றனர்.

    மேலும் நடிகர் விஜய்யின் ஜாதகப்படி மாநாட்டை அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் 27-ந்தே திக்குள் நடத்தலாம் (அதாவது ஐப்பசி முதல் வாரத்தில்) என ஜோதிடர் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீண்டும் கடலூர் ஜோதிடரை இந்த வாரத்தில் சந்திக்க உள்ளதாகவும், அதன் பிறகு மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து மாவட்டத் துணைத் தலைவரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான பனையபுரம் வடிவேல் கூறியதாவது:-

    தளபதியின் தமிழக வெற்றி கழக கட்சியின் அரசியல் முதல் மாநாடு எங்களது மாவட்டத்தில் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்த எங்கள் தளபதிக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.

    எங்கள் தளபதி மாநாடு நடத்துவதற்கு எந்த தேதியை அறிவிக்கிறாரோ அந்த நாள் எங்களுக்கு வெற்றி திருநாள். அன்று மாநாட்டு வெற்றி திருவிழாவை எங்கள் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம். எங்கள் தளபதியின் உத்தரவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 6 பவுன் தங்க நகைகளை ஒருநகை பெட்டியில் வைத்து தனது கைப்பையில் வைத்திருந்தார்.
    • நகைகள் கிடைக்காததால் அதற்கு முன்பு பஸ் நிறுத்தப்பட்ட இடத்தை போலீசார் விசாரித்தனர்.

    திண்டிவனம்:

    சீர்காழி அடுத்த திருவெண்காடு பகுதி சேர்ந்தவர் ராஜன் இவரது மனைவி மெர்லின் (27). இவர் தனது இரு கை குழந்தைகளுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீடான சென்னையில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு கலந்து கொண்ட பின் நேற்று முன்தினம் தனது சகோதரர் வசந்த் (19) மற்றும் தனது இரு கை குழந்தைகளையும் அழைத்து கொண்டு அரசு பஸ்சில் சீர்காழிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    சுப நிகழ்ச்சியில் தான் அணிந்திருந்த நெக்லஸ் கம்மல் மற்றும் தனது குழந்தைகள் அணிந்திருந்த பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட சுமார் 6 பவுன் தங்க நகைகளை ஒருநகை பெட்டியில் வைத்து தனது கைப்பையில் வைத்திருந்தார். பஸ் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடக்கும் பொழுது தனது குழந்தைக்கு பால் பாட்டில் எடுப்பதற்காக தனது கை பையை திறந்த போது அதிலிருந்து நகை பெட்டி காணாமல் போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பஸ் டிரைவர் அவர்களை அங்கு இறக்கி விடாமல் பஸ் வழியில் எங்கும் நிற்காது. அடுத்ததாக பண்ருட்டியில் தான் நிற்கும் எனக் கூறி பண்ருட்டிக்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கிருந்த போலீஸ் நிலையத்தில் தங்க நகைகள் திருடப்பட்ட தகவலை தெரிவித்தனர். தகவலின் பேரில் பஸ்சில் இருந்த பயணிகளிடம் பண்ருட்டி போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் நகைகள் கிடைக்காததால் அதற்கு முன்பு பஸ் நிறுத்தப்பட்ட இடத்தை போலீசார் விசாரித்தனர். விசாரித்ததில் இதற்கு முன்பாக திண்டிவனம் பஸ் நிலையத்தில் நின்ற போது 4 பயணிகள் மட்டுமே கீழ இறங்கினர் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீசார் பெண் பயணியிடம் திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கு புகார் அளிக்குமாறு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். காலை 7 மணிக்கு நகைகளை பறிகொடுத்த அந்த பெண் பயணி நண்பகல் 1 மணியளவில் திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு வந்தடைந்தார். அதனை தொடர்ந்து அந்த பயணி தான் பறிகொடுத்த நகைகள் விபரங்களை திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தெரிவித்து புகார் அளித்துச் சென்றார்.

    விக்கிரவாண்டி டோல்கேட்டில் நகைகளை பறிகொடுத்த இடத்தில் பெண் பயணியை இறக்கி விட்டிருந்தால் அங்கிருந்த விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் அவர் நடந்த விபரங்களை தெரிவித்து இருப்பார். ஆனால் பஸ் டிவைரோ பஸ் வழியில் எங்கும் நிற்காது என்று கூறி மனிதாபிமானம் அற்ற முறையில் அவரை அங்கிருந்து பண்ருட்டியில் இறக்கி விட்டு சென்றுள்ளார். இதுபோல மனிதாபிமானம் அற்ற முறையில் பணிபுரியும் அரசு பஸ் டிரைவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர். 

    • 35 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான போராட்டங்களை பா.ம.க.நடத்தியுள்ளது.
    • அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசிடம் மதவாத கட்சியான பா.ஜ.க., மற்றும் சாதியவாத கட்சியான பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கு மது ஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி இல்லை என்று திருமாவளவன் கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    தமிழக கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான். இதைப்பற்றி பேச தகுதியான கட்சி பா.ம.க.தான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பா.ம.க. போராடிவருகிறது. ராஜாஜி, ஓமந்தூராரும் மதுவிலக்கை சென்னை மாகாணத்தில் கொண்டு வந்தனர். இதை தி.மு.க.ரத்து செய்தபோது கொட்டும் மழையில் 94 வயதில் ராஜாஜி , கருணாநிதி வீட்டுக்கே சென்று மது விலக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஆனாலும் மது விலக்கை ரத்து செய்துவிட்டு இன்று தி.மு.கவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள் . 35 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான போராட்டங்களை பா.ம.க.நடத்தியுள்ளது. பா.ம.க மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. டாஸ்மாக் திறந்தபோது 7200கடைகளை 4800ஆக குறைத்தது பா.ம.க.தான். இதற்கான சட்டப்போராட்டங்களை பா.ம.க.தான் செய்தது. காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டத்கை 10 மணி நேரமாக குறைத்தது பா.ம.க. தான். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கு என பா.ம.க. அறிவித்த பின்பே மற்ற கட்சிகள் வலியுறுத்த தொடங்கியது. அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி.
    • மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ள மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு தொடர்பாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி. 2014-ல் மக்கள் நல கூட்டணியில் பயணித்த போது மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தினோம்.

    கள்ளக்குறிச்சியில் 69 பேர் உயிரிழந்தனர். தி.மு.க.வை மிரட்ட மாநாட்டு நடத்துவதாக சிலர் கூறுகிறார்கள். அப்போதுதான் தி.மு.க.விடம் அதிக சீட்டு பேரம் பேச முடியும் என பேசுகிறார்கள். சிலர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என பேசுகிறார்கள்.

    மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம். மாநாடு நடத்த வேண்டும் என எனக்கு சொல்லிக்கொடுத்தது மக்கள். தேர்தல் நேரத்தில் மட்டுமே அது குறித்து சிந்திப்பேன். எனக்கு இப்போது தேர்தல் கணக்கு இல்லை.

    தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கூட்டணி, சீட்டு குறித்து சிந்திப்பேன். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அரசியல் கட்சி. மற்ற நேரங்களில் இது அம்பேத்கர் கட்சி, பெரியார் கட்சி.

    மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடுள்ள காந்தி பிறந்தநாளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்கிறது.

    பெண்களை மாநாட்டுக்கு அதிகம் அழைத்து வர வேண்டும். லட்சக்கணக்கான பெண்கள் கலந்துக்கொள்ள வேண்டும். மது ஒழிப்பு பெண்களின் குரலாக இருக்க வேண்டும். இது கட்சியின் மாநாடு அல்ல அனைவருக்குமான பொது கோரிக்கை யாரும் பங்கேற்கலாம் என கூறினேன்.

    மதுவை ஒழிப்போம் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க., இடசாரிகள், வி.சி.க.வுக்கு முழுமையான உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய பிரச்சினை.

    காவிரி விவகாரத்தில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என பேசுகிறோம். அது போல் மது ஒழிப்பை எல்லோரும் ஒரே குரலில் பேச வேண்டும். மது குடிக்கும் இடத்தில் எப்படி சாதி இல்லையோ, அப்படியே மது ஒழிக்கவும் சாதி வேண்டாம்.

    பா.ம.க., பா.ஜ.கவுடன் அணி சேர முடியாது. பா.ஜ.க.கட்சியில் பல நண்பர்கள் உள்ளனர். பா.ம.க. மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.

    வெளிப்படையாக தி.மு.க.வுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். மதுவிலக்கு தொடர்பாக தேசிய கொள்கையை வரையறை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. மதுவிலக்கு தொடர்பாக அரசியலமைப்பு சில வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

    47-வது உறுப்பில் மதுவிலக்கு கொள்கையை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. அதன் அடிப்படையில் கோரிக்கை வைக்கிறோம்.

    ஒரு தேசிய கொள்கையை வரையறுக்கு மத்திய அரசைதி.மு.க. வலியுறுத்த வேண்டும். இந்த கொள்கையை விடுதலை சிறுத்வதைகள் வலியுறுத்துகிறது. எல்லா ஆட்சி காலத்திலும் மதுவிலக்கு கொள்கை பேசப்பட்டது.

    தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாக உள்ளனர் .அதற்கு காரணம் மது. இதுவரை அரசியல் விழிப்புணர்வு மாநாட்டை நடத்தினோம். ஆனால் இந்த மாநாடு ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கும் மாநாடு.

    தி.மு.க.கூட்டணியில் இருப்பதால் முதல்வரிடம் மனு கொடுக்கலாமே என கேட்கிறார்கள். ஆனால் இது மக்களே ஒன்று சேர்ந்து கேட்கவேண்டிய கோரிக்கை .

    அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், சகோதரிகள் நீல நிறபுடவையும் சிகப்பு நிற ஜாக்கெட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2026-வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை. அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு.
    • சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புகிறார்கள்.

    விழுப்புரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விழுப்புரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டதில் மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

    மது, போதை பொருள்களை ஒழிக்க காலங்காலமாக போராடி வருகிறோம். பவுத்தத்தை தழுவியர்கள் 22 கொள்கைகளில் மதுவை தொட கூடாது என்பது ஒன்று. மது ஒழிப்பு போராட்டம் என்பது தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    மதுவை ஒழிக்க மகளிரின் குரல் ஒலிக்க வேண்டுமென்பதால் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம். கட்சி அரசியல் என்பது வேறு சமூகம் மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேறு. மதுவை ஒழிக்க அனைவரும் எங்களுடன் போராட வேண்டும். மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியுள்ளது. தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துள்ள போது படிப்படியாக ஏன் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரஇயலாது. இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவைகளில் தமிழகம் முதன்மையானவையாக இருக்கும் போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானவையாக இருக்க கூடாது.

    மது ஒழிப்பிற்கு அறை கூவல் விடுப்பது மதுவை ஒழிக்க மட்டுமே. இது 2026-வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை. அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு. சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புகிறார்கள்.

    கூட்டணியில் இருந்தாலும் நல்ல பிரச்சனைகள் இருந்தால் எதிர்த்து போராடுவோம். அதன்படி அ.தி.மு.க. மது ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து மேடையில் பேசலாம்.

    பா.ஜ.க, பா.ம.க.விற்கு தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் மதவாத, சாதியவாத கட்சி என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம். தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம். மதுக்கடைகளை வைத்து கொண்டு அதன் மூலம் வருமானத்தை கொண்டு அரசு ஆட்சி நடத்துவது என்பது ஏற்புடையதல்ல. மக்களுடைய கோரிக்கையை தான் முன் வைக்கிறோம். அது ஒரு கட்சியின் கோரிக்கையாக பார்க்க வேண்டாம். எல்லோரும் கை கோர்த்தால் தான் முடிவு எட்டப்படும். கள்ளச்சாராயம் புழக்கம் இன்னும் இருக்கிறது. பள்ளி வரை போதை பொருள் பழக்கம் உள்ளது.

    பெண்களுக்கெதிரான குற்றங்கள் அனைத்தும் போதை பொருட்களில் அடிமையானவர்களால் நடைபெற்றுள்ளது. போதை என்பது அமைதியாக நடைபெறுகிற பேரழிவு. தமிழகம் கல்வி கொள்கையில் சிறந்து விளங்குவதாக மத்திய மந்திரியே தெரிவிப்பதால் கல்வி சிறப்பாக இருப்பது தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது.
    • திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    விழுப்புரம்:

    தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், செல்லூர் கிராம மக்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் விழுப்புரத்தில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மது விலக்கை ஆதரிக்கின்றன.

    * பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது.

    * மதுவிலக்கில் தமிழகம் ஏன் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கக்கூடாது.

    * மதுவிலக்கு என்ற குரலுக்கு எல்லா கட்சியினரும் ஆதரவு தர வேண்டும்.

    * மதுவிலக்கு கோரிக்கையை தமிழகத்தை ஆளும் திமுக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.

    * திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    * அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கும்போது மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்?

    * மதுவிலக்கு என்பது திமுகவிற்கும் உடன்பாடான கருத்துதான்.

    * மதுவிலக்கு விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம்.

    * திமுகவுக்கு முரணான கருத்தை நாங்கள் சொல்லவில்லை. மக்களின் கோரிக்கையை தான் முன்வைக்கிறோம் என்று கூறினார்.

    • மது கடைகளை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் தேவையில்லை.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தில் விற்பனை செய்யப்பட்ட விஷ சாராயத்தை குடித்துவிட்டு கடந்த வருடம் மே மாதம் 5-ந் தேதி எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தை 10 பேர் மற்றும் மரக்காணம் சம்புவெளி செல்லம் தெரு மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுபோல் 52 பேர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    விஷசாரயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் அழைத்து அவர்களது குடும்பத்தின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மதுவால் அவர்களது குடும்பம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    மது கடைகளை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு திருமாவளவன் எம்.பி. நிதி உதவியும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுக்கடைகளை மூடுவதற்குரிய செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பாக சில அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு அல்லது தமிழ்நாடு முதல்-அமைச்சர் செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை தோழமையோடு முன்வைக்கிறோம். விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு நிதி வழங்குவது ஏற்புடையது அல்ல.

    மரக்காணத்தில் மீன் மார்க்கெட் மற்றும் மீன்பிடி துறைமுகம், தூண்டில் முள் வளைவு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும்.

    மேலும் மீன் மார்க்கெட் கட்டுவதற்கு மரக்காணம் பேரூராட்சி சார்பில் இடம் வழங்கப்பட்டால் விழுப்புரம் எம்.பி. நிதியில் இருந்து மீன் மார்க்கெட் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    விடுதலை சிறுத்தைகள் சார்பாக நடத்தக்கூடிய மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் தேவையில்லை. நாங்கள் இதை அரசியலோடு அணுகவில்லை. 100 விழுக்காடு அரசியல் கடந்து ஒரு சமூக பண்பாட்டு பிரச்சினையாக இதை பார்க்கிறோம்.

    இதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இது நாட்டு நலனோடு மக்கள் நலனோடு தொடர்புடைய ஒரு பிரச்சனை.

    இதில் கூட்டணி கணக்குகளை போட வேண்டாம். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

    தி.மு.க.வும் மதுவிலக்கில் உடன்பாடு உள்ள கட்சி தான். அ.தி.மு.க.வும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிற கட்சிதான். இடதுசாரிகளுக்கும் இதிலே 100 விழுக்காடு உடன்பாடு உண்டு.

    பா.ம.க.வும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று தான் சொல்கிறது. ஆகவே விடுதலை சிறுத்தைகள் மட்டும் அல்ல எல்லோருக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு இருக்கிற போது நாம் ஏன் அனைவரும் ஒருங்கிணைந்து அரசியல் அடையாளங்களை கடந்து கட்சி அடையாளங்களை கடந்து பேசக்கூடாது. குரல் கொடுக்கக் கூடாது என்ற கேள்வியை விடுதலை சிறுத்தைகள் முன்வைக்கிறோம் .

    கள்ளச்சாராயத்தை விற்பவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் விஜய் விருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.
    • குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற காவல் துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மாநாடு நடைபெறும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட மாநாடு சம்பந்தப்பட்ட இடங்களின் வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.

    இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது:-

    மாநாடு 2 மணிக்கு தொடங்கினால், 1.30 மணிக்குள் தொண்டர்கள் பந்தலுக்குள் வந்துவிட வேண்டும். 2 மணிக்கு மேல் மாநாட்டில் பங்கேற்க தொண்பர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    மாநாட்டிற்கு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் எத்தனை பேர் வர உள்ளனர்? எந்த பிரதிநிதி தலைமையில் வருவார்கள் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

    குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

    த.வெ.க நிர்வாகிகள் அளித்த கணக்குப்படி, வாகனங்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே வர முடியும். ஆனால், 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று சொல்லி உள்ளீர்கள். மீதி வருபவர்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

    கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அமர நெரிசல் இல்லாமல் தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

    நடிகர் விஜய் விருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.

    மாநாடு நடத்தப்படும் இடம் அருகில் உள்ள கிணறுகள் மூடப்பட வேண்டும்.

    மின் ஒயர்கள் செல்லும் வழியில் நாற்காலிகள் போடாமல் தவிர்ப்பது நல்லது.

    மாநாடு மேடையின் அளவு என்ன ? எத்தனை பேர் மேடையில் அமரப் போகிறார்கள் என்ற விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மாநாடு நடக்கும் பகுதியில் பட்டாசு வெடித்தல் வாண வேடிக்கை உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும்.

    விஐபி பாஸ் வழங்கப்படும் விவரங்கள் முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    மாநாடு முழுவதும், பார்க்கிங் உள்பட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

    போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.
    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ‘வி.சாலை’ என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலாக வந்துள்ளார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.

    சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

    இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

    திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மாநாடு நடத்துவதற்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'வி.சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மாநாடு நடத்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் 21 கேள்விகள் கேட்டு புஸ்சி ஆனந்துக்கு கடிதம் அனுப்பினார்கள். அவரும் பதில் கடிதம் கொடுத்தார்.

    இதனைத்தொடர்ந்து மாநாட்டுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டது. விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் இதற்கான அனுமதி கடிதத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணி பாலாஜி, வக்கீல் அரவிந்த் ஆகியோரிடம் வழங்கினார்.

    ×