என் மலர்
வேலூர்
- போக்குவரத்து பாதிப்பு
- தெருக்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதாக புகார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் பெரிய ஏரியூர் கிராம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் தெருக்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
இங்கு பள்ளி செல்லும் மாணவர்கள், முதியவர்கள் அதில் நடந்து செல்வதால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்தவித நடக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒடுக்கத்தூர் - அணைக்கட்டு சாலையில் அரசு பஸ்களை மறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரிய ஏரியூர் பகுதியில் கழிவு நீர் கால்வாய், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காவிட்டால் அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அப்பகுதி கிராம மக்கள் கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு நடவடிக்கை
- கலெக்டர் தகவல்
வேலூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் பணிகள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக இந்த மாவட்டத்தை சேர்ந்த பசுமை குழுக்களை கண்காணிக்கும் பஞ்சாயத்து அதிகாரிகள் கூறியதாவது:-
மொத்தமாக 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடப்படும்.
புதிய மரக்கன்றுகள் அந்தப் பகுதியில் உள்ள மரங்களில் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்பாக அங்குள்ள காலநிலைக்கு ஏற்றதா என்பது உறுதி செய்யப்படும் என்றனர். இதில் ஒரு பகுதியாக புன்னை மரம், கல்யாண முருங்கை மற்றும் அரசமரம் ஆகியவையும் நடப்படும்.
மேலும் கொய்யா, ரோஜா செடி, நாவல், இழுப்பை, மா, நெல்லி போன்ற தாவர வகைகளும் நடப்படும். சராசரியாக, ஒவ்வொரு மரக்கன்றும் சேதமடையாமல் இருக்க 6 முதல் 8 அடி உயரம் இருக்கும்.
இந்த மாவட்டங்களில் நடப்பட்ட மரக்கன்றுகள் பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக பராமரிக்கப்படும். தன்னார்வலர்கள் ஒரு வருடத்திற்கு வாரத்திற்கு 2 முறை மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவார்கள்.
கால்நடைகளால் மரக்கன்றுகள் சேதமடையாமல் இருக்க மரத்திற்கு காவலர்கள் நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகள் பாதுகாக்கப்படும்.
திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 கிராமங்கள் உள்ளது. இங்கு முதற்கட்டமாக, 8 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட உள்ளது.
ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம் ஆகிய பகுதிகளில் மட்டும் பனை விதைகளை விதைப்பதற்கு பசுமை இயக்கம் தடை செய்துள்ளது. பனை விதைகள் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக ஆற்றங்கரைகள் மற்றும் பிற நீர்நிலைகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது என்றார்.
இதேபோல் வேலூர் மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் குறைந்தது 18 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் குமரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
- சம்பளம் வழங்காததை கண்டித்து நடந்தது
- பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன
வேலூர்:
வேலூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் தூய்மை பணியில் 500 பெண்களும், 400 ஆண்களும் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். மாநகராட்சியில் தனி நபர் ஒருவர் ஒப்பந்தம் மூலம் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறார்.
தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாதம்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகஸ்டு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் ஒப்பந்த ஊழியர்கள் சம்பளத்தில் இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் ஒப்பந்த ஊழியர்களின் கணக்கில் இ.எஸ்.ஐ, பி.எப் சேர்க்கப்படவில்லை.
இதனை கண்டிக்கும் விதமாக மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வேலையை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் செய்தனர்.
அவர்கள் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று 12 மணிக்குள் நிலுவை சம்பளத்தை வழங்குவதாகவும், இ.எஸ்.ஐ., பி.எப். வராதவர்களுக்கு 2 நாட்களில் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மாநகராட்சி பகுதியில் பணிகள் பாதிக்கப்பட்டன.
- கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் வேண்டா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென்காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். பி.டி.ஓ.க்கள் சுதாகரன் சாந்தி முன்னிலை வகித்தனர்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தாசில்தார் வேண்டா கூறுகையில்:-
உங்களது கோரிக்கைகள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- சாலையை சீரமைக்க கோரி நடத்தினர்
- பஞ். துணைத்தலைவர் தீக்குளிக்க முயற்சி
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினந்தோறும் சென்று வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதில் வேலூரில் இருந்து பென்னாத்தூர், நாகநதி மற்றும் நஞ்சுகொண்டாபுரம் வழியாக செல்லும் சாலையை அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்து கின்றனர்.
நாகநதி கூட்ரோட்டில் இருந்து அமிர்தி பூங்கா வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அதிக அளவில் விபத்துகளும் நடக்கிறது.
இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். மேலும் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
நாகநதியில் இருந்து அமிர்தி செல்லும் சுமார் 8 கிலோமீட்டர் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த வழியாக செல்லும் நாகநதி, மேதல்பாடி, வேட கொல்லைமேடு, நஞ்சு கொண்டாபுரம், அமிர்தி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே அமிர்தி சாலையை சீரமைக்க கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை வனத்துறை மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நஞ்சுகொண்டாபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அமிர்தியில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
அப்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கன்னியப்பன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்கா ரர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
- வேலையை முடித்துவிட்டு சென்ற போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் சிவக்குமார் (வயது 34), டிராக்டர் டிரைவர். மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு கொல்லமங்கலத்தில் இருந்து பள்ளிகொண்டாவிற்கு பைக்கில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அகரம் சேரியை அடுத்த விநாயகபுரம் தேசிய நெடுஞ்சாலை வளைவில் சென்றபோது ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வேகமாக வந்த தனியார் ஆம் புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப் பட்டசிவக்குமார் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளி கொண்டா போலீஸ் இன்ஸ் பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த சிவக் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உறவி னர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவரி டம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சதீஷ்குமார், கட்டிட சென்ட்ரிங் தொழிலாளி. மனைவி ஜானகி (வயது 31).
இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் பேரணாம்பட்டு அருகே சொலப்பல்லி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென் றார். இரவு தாய்க்கு சொந்தமான விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றிருந்தார்.
அப்போது ஜானகியை கண்ணாடி விரியன் விஷ பாம்பு கடித்தது. அவர், பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியில் கதறினார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஜானகி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்சில் இருக்கைகள் கிடைக்காததால் அவதி
- படிக்கட்டுகள் மற்றும் இடைப்பட்ட இடங்களில் அமர்ந்து பயணம் செய்தனர்
வேலூர்:
தமிழகத்தில் பள்ளிகளில் 5 நாட்கள், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்கு செல்ல மூட்டை முடிச்சுகளுடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்தனர்.
பின்னர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு திரும்பினர். இதனால், வேலூர் புதிய பஸ் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. குறிப்பாக, சென்னை, சேலம், பெங்களூர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு இடம்பிடித்தனர்.
பஸ்சில் இடம் கிடைக்காததால் இரவு முழுவதும் பலர் புதிய பஸ் நிலையத்திலேயே காத்திருந்தனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வேலூர் புதிய பஸ் நிலைய பகுதி நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது. அதேபோல் இன்று காலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
சென்னை பெங்களூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலர் பஸ்சில் இருக்கைகள் கிடைக்காததால், படிக்கட்டுகள் மற்றும் இடைப்பட்ட இடங்களில் அமர்ந்து பயணம் செய்தனர்.
- 2-ம் வகுப்பு படித்து வந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி சுகன்யா. தம்பதியின் மகள் மவுலிகா (வயது 7). கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா தனது மகள் மவுனிகாவுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
மவுனிகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சிறுமி தனது தாய் மற்றும் பாட்டியுடன் தூங்கினார். இன்று காலை நீண்ட நேரமாகியும் சிறுமி கண் விழிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தாய் சுகன்யா சென்று பார்த்தபோது மவுலிகா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 300 பாட்டில்கள் பறிமுதல்
- 3 பேர் கைது
வேலூர்:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சைதாப்பேட்டை முருகன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்காளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த விமலா(வயது 75), கமலா ( 70), லட்சுமி (76) ஆகியோர் கள்ளத்தனமாக வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.40,000 மதிப்பிலான 300 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- திருமணம் ஆகாத ஏக்கத்தில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி, மதி நகர், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் நாகரத்தினம். இவரது மகன் வினோத் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த வினோத் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மது போதையில் இருந்த வினோத் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அவதி
- உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பழமையான ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் சுமார் 120 ரெயில்கள் சென்னை மார்க்கமாகவும், ஜோலார்பேட்டை மார்க்க மாகவும், திருப்பதி மார்க்க மாகவும், வேலூர் மார்க்க மாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள மிக முக்கிய ரெயில்வே சந்திப்புகளில் காட்பாடி ரெயில் நிலையமும் ஒன்று. இங்கு 5 பிளாட்பாரங்கள் உள்ளன.
இதில் பயணிகள் எளிதில் சென்று வர வசதியாக எக்ஸ்லேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் 2-வது பிளாட்பாரத்திலும் எக்ஸ்லேட்டர் (நகரும் படிக்கட்டுகள்) ஏற்படுத்தப்ப ட்டுள்ளன.
ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள எக்ஸ்லேட்டர் பழுதடைந்துள்ளது. கடந்த நாட்களாக விடுமுறை காரணமாக அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். 2-வது நடைமேடை மற்றும் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்லேட்டர்கள் இயக்கப்படவில்லை.
இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் அதிக பைகள் எடுத்துச் செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு லிப்ட் மட்டும் உள்ளது.
அதனை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கூட்டம் அதிகமாக சேரும்போது பயணிகள் எக்ஸ் லேட்டர்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது அதுவும் இயங்க வில்லை. அடிக்கடி பராமரிப்பு பணி காரணமாகவும் அதன்னை நிறுத்தி விடுகின்றனர்.
உடனடியாக அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி யுள்ளனர்.






