என் மலர்tooltip icon

    வேலூர்

    • சாம்பிராணி தூவ தீ மூட்டியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 71). 2 பேரும் தனியாக வசித்து வந்தனர். சண்முகம் நேற்று சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.

    ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று ராஜேஸ்வரி வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜை செய்து உள்ளார். அப்போது சாம்பிராணி புகை தூவுவதற்காக மரக்குச்சிகளை தீயிட்டு எரித்தார்.

    எதிர்பாராத விதமாக தீ அருகில் இருந்த பஞ்சு மெத்தைக்கு பரவியது. பஞ்சு மெத்தை சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் வீடு முழுவதும் கரும்பு புகை மண்டலம் சூழ்ந்தது.

    தீயை அணைக்க ராஜேஸ்வரி வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்தார். இருப்பினும் வீடு முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததால் ராஜேஸ்வரி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

    வீட்டில் புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் சென்று கதவை திறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. இது குறித்து அந்த பகுதி மக்கள் குடியாத்தம் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஸ்வரி மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அப்போது அங்கே வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

    ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தென்னை மட்டை குவியலில் இருந்தது
    • வனத்துறையினர் காப்பு காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:-

    ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் அருகே உள்ள மராட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றார்.

    வீட்டின் முன்பு தென்னை மட்டை குவியல் போட்டு வைத்துள்ளார். அதில் நேற்று மாலை ஏதோ சத்தம் கேட்டுள்ளது அருகே சென்று பார்த்த போது அதில் மலைப்பாம்பு இருந்ததை கண்டு அலறி அடித்து ஒடினார். இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 10 அடி நீளமுடைய மலை பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் வனச்சரகர் இந்து உத்தரவின் பேரில் மீட்கப்பட்ட மலைப்பாம்பு அருகில் உள்ள காப்பு காட்டில் விடப்பட்டது.

    • பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:-

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்களை அடையாளம் காணுதல் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி முகாம் பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

    இதனை தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் அர்ச்சுனன், உமாராணி, ராமு, பரப்புரையாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மற்றொரு ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்
    • போலீசில் புகார்

    வேலூர்:-

    வேலூர் அடுத்த ஊசூர் சேர்ந்தவர் பரசுராமன். இவர், எல்லை பாதுகாப்பு படை வீரராக உள்ளார். இவரது மனைவி அஸ் வினி (வயது 38), கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி தங்ககோவில் பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரம் அருகில் நின்றிருந்தார்.

    அப்போது, அங்குவந்த அடையாளம் தெரியாத நபரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து, தனது வங்கிக் கணக்கில் மொத்தம் எவ்வளவு பணம் உள்ளது என பார்த்து சொல்லும்படி கூறினார். அந்த நபரும் ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் போட்டு பார்த்தார்.

    இதில், அந்த வங்கிக்கணக்கில் சில லட்சம் ரூபாய் இருந்துள்ளது. ஆனால், அந்த நபர் பணம் எதுவும் காட்டவில்லை என அஸ்வினியிடம் கூறினார். அதோடு, அவர் கொடுத்த ஏடிஎம் கார்டுக்கு பதிலாக அதேபோல் இருக்கும் மற்றொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    தொடர்ந்து, 3 நாட்களில் அஸ் வினியின் வங்கிக்கணக்கில் இருந்து சிறிது சிறிதாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் எடுத்து விட்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச் சியடைந்த அஸ்வினி இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று முறையிட்டார். இதையடுத்து, அவரது வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டை வாங்கி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, ஏடிஎம் கார்டு போலியானது என தெரியவந்தது. அப்போதுதான், அடையாளம் தெரியாத நபரிடம் ஒரிஜினல் ஏடிஎம் கார்டு கொடுத்து ஏமாந்தது அஸ்வினிக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில், அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கலெக்டர் உபகரணங்களை வழங்கினார்
    • அறுவை சிகிச்சை, உபகரணங்களுக்காக டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்

    வேலூர்:-

    வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை தாங்கினார்.

    மாவட்ட கல்வி அலுவலர் ஜோதீஸ்வரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் , தாசில்தார் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.

    முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எலும்பு முறிவு சிகிச்சை, மனநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்டவைகளுக்கு பரிசோதித்து அறுவை சிகிச்சை, மற்றும் உபகரணங்களுக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

    மேலும் மருத்துவ சான்றிதழ் வழங்குதல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனை, இலவச ரெயில் மற்றும் பஸ் பயணச் சலுகை, உதவித் தொகைக்கான பதிவு, முதல் அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு உள்ளிட்ட பணிகளும் நடந்தது.

    • அடிப்படை வசதி செய்து தரக்கோரி நடத்தினர்
    • போலீசார் சமாதானம் செய்தனர்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி, கே.கே.நகர், பாரதியார் தெரு, பாலமுருகன் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கால்வாய் வசதி கேட்டு மனு அளிக்க இன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

    மேயர் மற்றும் கமிஷனரிடம் மனு அளிக்க நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வர தாமதமானது இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.

    மேலும் அவர்களை மாநகராட்சி அதிகாரியிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    அதிகாரியிடம் கே.கே.நகர் பகுதி மக்கள் அளித்தமனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அடிப்படை வசதிகளும் இல்லை.

    கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீடு புகுந்து திருட முயற்சி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, பாலாற்றங்கரையோரம் உள்ள சத்யா நகர் ,ஓசி பெருமாள் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி டிவோட்டி (வயது 30). இவர் குழந்தைகளுடன் சத்யா நகரில் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் கொள்ளையன் ஒருவன் டிவோட்டியின் வீட்டின் மதில் சுவர் ஏறி உள்பக்கமாக குதித்தார். அப்போது தெருவில் இருந்த நாய்கள் கொள்ளையனை பார்த்து குறைத்தன.

    சத்தம் கேட்ட டிவோட்டி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கிருந்த கொள்ளையனை பார்த்து டிவோட்டி கத்தினார். இதனால் பதறிப்போன கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இது குறித்து டிவோட்டி விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் விருதம்பட்டு போலீசார் டிவோட்டியின் வீட்டிற்கு சென்று அவரது வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் தெருவில் பெரிய கம்புடன் கொள்ளையன் வருகிறான். அவனை பார்த்து குறைக்கும் நாய்களை கம்பால் விரட்டி விரட்டி தாக்கியுள்ளார். அதற்கு பிறகு வீடு புகுந்து திருட முயன்றுள்ளார். இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதி மக்கள் திக்..திக்... மன நிலையில் உள்ளனர்.

    • மாணவர்களுக்கு அழைப்பு
    • வேலூர், அமிர்தி பூங்காவில் நடக்கிறது

    வேலூர்:

    தமிழ்நாடு வனத்துறை சார்பாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் வாரம் வன விலங்கு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி வேலூர் வனக்கோட்டத்தில் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை வனவிலங்கு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை காலை 7 மணி அளவில் இயற்கை நடைஎன்ற தலைப்பில் நடை போட்டி சத்து வாச்சாரி, தீர்த்தகிரி முருகன் கோவிலில் இருந்து தொடங்க உள்ளது.

    இதில் கலந்து கொள்ள சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

    இது தொடர்பான பதிவுகள் 9655413566 7904443195 மற்றும் 9952131786 ஆகிய கைபேசி எண்களில் தொடர்புக் கொண்டு பதிவு செய்யலாம்.

    7-ந் தேதி காலை 8 மணியளவில் ஸ்ரீ வெங்க டேஸ்வரா மேல்நிலை பள்ளியில் ஓவிய போட்டி, வினாடி வினாபோட்டி மற்றும் பேச்சு போட்டி கள்முறையே வனவிலங்கு பாதுகாப்பு சுற்றுசூழல், வனம் மற்றும் வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் நமது பங்கு ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற உள்ளது.

    மேலும், அமிர்தி வன உயிரின பூங்காவில் விழிப்புணர்வு முகாம், பள்ளி குழந்தைகள் இலவ சமாக அமிர்தி பூங்காவை பார்வையிடுதல் மற்றும் வன விலங்கு பாதுகாப்பில் நமது பங்கு என்ற தலைப்பில் ஓவிய மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    • போக்குவரத்து நெரிசல்
    • தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்

    வேலூர்:

    வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்தவர் மாதய்யன். இவர் தனது காரை வேலூரில் உள்ள மெக்கானிக் கடைக்கு பழுது பார்க்க ஓட்டி சென்றார்.

    அப்போது கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வேலூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென காரில் புகை வந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சடைந்த மாதய்யன் காரில் இருந்து உடனே வெளியே இறங்கி ஓடி வந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீ பரவியதால், அந்தப் பகுதியில் கரும் புகை மண்டலம் சூழ்ந்தது.

    இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள், தீப்பிடித்து எரிந்த கார் வெடுத்து விடுமோ? என பயந்து தூரமாகவே வாகனங்களை நிறுத்தி விட்டனர். சுமார் 45 நிமிடங்கள் கார் தீப்பற்றி எரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சென்று, போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீயில் கருகி நாசமானது.

    வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால், சத்துவாச்சாரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    45 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்ததால், சிலர் சர்வீஸ் சாலைகளில் இறங்கி எதிரும், புதிருமாக சென்றனர்.

    வாகன போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுத டைந்து காணப்படுகிறது
    • மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் அரசம்பட்டு கிராமத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது.

    இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுத டைந்து காணப்படுகிறது.மேலும் சாலையில் அங்கங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்கு வரத்துக்கு லாயக்காற்ற நிலையில் கிடக்கிறது.

    மழை காலங்களில் சாலையில் உருவான பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிய டைந்து வருகின்றனர்.

    ரெட்டிபாளையம் முருகர் கோவில், கீழ்புதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், ஆரணி மற்றும் கண்ணமங்கலம் செல்லும் பொது மக்கள் இந்த சாலையை தான் அதிகம் பயன்படுத்து கின்றனர்.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரி செல்லும் நோயாளிகள் கடும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்.

    மேலும் சாலையில் கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து இருப்பதால் இதன் வழியாக செல்லும் வாகனங்கள் சில அடிக்கடி பஞ்சர் ஆகி பாதியில் நிற்பதோடு, விபத்துகளும் அதிக அளவில் ஏற்படுகிறது.

    புதிய சாலை அமைப்போடு, மழைநீர் செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும் என பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சாலையை புதுப்பிப்ப தோடு, மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டு மென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மர்ம கும்பலுக்கு வலை வீச்சு
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மும்முனி புறவழி சாலையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ பச்சையம்மன் கோவில் உள்ளது.

    இங்கு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் காணிக்கையாக உண்டி யலில் பணம் மற்றும் நகை களை செலுத்து கின்றனர்.

    இக்கோவிலில் சண்முகம் என்பவர் பூசாரியாக உள்ளார். வழக்கம் போல் இருந்து பூஜைகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை கோவிலின் நடை சாத்தி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும் கோவிலில் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து 2 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.

    இன்று காலை கோவில் திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம கும்பல் உண்டியலில் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • வேலூர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இன்று காலை இவரது 2 வயது மகன் ஹர்ஷன் வீட்டின் முன்பு விளை யாடிக் கொண்டிருந்தான். ரோஜா வீட்டில் உள்ள அறையில் அமர்ந்து அவரது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டி ருந்தார்.

    தெருவில் ஓடி வந்த 4 தெரு நாய்கள் சிறுவன் ஹர்ஷன் மீது பாய்ந்தன. சிறுவனை கடித்து குதறின. மேலும் 4 நாய்களும் சேர்ந்து சிறுவனை இழுத்துச் சென்றன.

    இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அழுது துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நாய்களிடமிருந்து சிறுவனை மீட்டனர்.

    உடனடியாக சிறுவனை மீட்டு பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டான். தற்போது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வீட்டில் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த பகுதியில் கட்டுக்கடங்காமல் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×