search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    27 லட்சம் பனை, மரக்கன்று நடும் பணி தீவிரம்
    X

    27 லட்சம் பனை, மரக்கன்று நடும் பணி தீவிரம்

    • வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு நடவடிக்கை
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் பணிகள் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக இந்த மாவட்டத்தை சேர்ந்த பசுமை குழுக்களை கண்காணிக்கும் பஞ்சாயத்து அதிகாரிகள் கூறியதாவது:-

    மொத்தமாக 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடப்படும்.

    புதிய மரக்கன்றுகள் அந்தப் பகுதியில் உள்ள மரங்களில் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்பாக அங்குள்ள காலநிலைக்கு ஏற்றதா என்பது உறுதி செய்யப்படும் என்றனர். இதில் ஒரு பகுதியாக புன்னை மரம், கல்யாண முருங்கை மற்றும் அரசமரம் ஆகியவையும் நடப்படும்.

    மேலும் கொய்யா, ரோஜா செடி, நாவல், இழுப்பை, மா, நெல்லி போன்ற தாவர வகைகளும் நடப்படும். சராசரியாக, ஒவ்வொரு மரக்கன்றும் சேதமடையாமல் இருக்க 6 முதல் 8 அடி உயரம் இருக்கும்.

    இந்த மாவட்டங்களில் நடப்பட்ட மரக்கன்றுகள் பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக பராமரிக்கப்படும். தன்னார்வலர்கள் ஒரு வருடத்திற்கு வாரத்திற்கு 2 முறை மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவார்கள்.

    கால்நடைகளால் மரக்கன்றுகள் சேதமடையாமல் இருக்க மரத்திற்கு காவலர்கள் நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகள் பாதுகாக்கப்படும்.

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 கிராமங்கள் உள்ளது. இங்கு முதற்கட்டமாக, 8 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட உள்ளது.

    ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம் ஆகிய பகுதிகளில் மட்டும் பனை விதைகளை விதைப்பதற்கு பசுமை இயக்கம் தடை செய்துள்ளது. பனை விதைகள் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக ஆற்றங்கரைகள் மற்றும் பிற நீர்நிலைகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது என்றார்.

    இதேபோல் வேலூர் மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் குறைந்தது 18 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் குமரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×