என் மலர்tooltip icon

    வேலூர்

    காவேரிப்பாக்கம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த தச்சம்பட்டறை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அரி (வயது 45), விவசாயி. இவரது மனைவி காமாட்சி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அரி, காமாட்சி ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கணவன் மனைவி இடையே நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் விரக்தி அடைந்த காமாட்சி வீட்டில் விவசாய நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்துவிட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடக்கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்காக அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு 11 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. அதில் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    அரக்கோணம்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஊரடங்கின்போது தெற்கு ரெயில்வே அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் ஊழியர்கள், மத்திய, மாநில சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு சென்றுவர காலை, மாலை என 6 ஒர்க்மேன் சிறப்பு ரெயில்களை இயக்கியது.

    ஊரடங்கில் தளர்வு செய்தபின், மாநில அரசின் பல்வேறு துறைகள் செயல்பட ஆரம்பித்ததும், அது சார்ந்த ஊழியர்கள் வேலைக்கு செல்ல தொடங்கினர். தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கு வந்து செல்ல வசதியாக ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் மின்சார ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே உத்தரவிட்டது.

    இதையடுத்து அரக்கோணத்தில் இருந்து நேற்று அதிகாலை 5.40 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை வரை மொத்தம் 11 மின்சார ரெயில்கள் சென்னைக்கு இயங்க தொடங்கின. அதில் பயணம் செய்யும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தங்களது அலுவலக அடையாள அட்டையை காண்பித்து பயணச்சீட்டு பெற்று பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னதாக ரெயில் நிலையத்துக்கு வந்த அரசு ஊழியர்கள் முகக் கவசம் அணிந்தும், சமுக விலகலை கடைப்பிடித்தும் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்தும், தெர்மல் ஸ்கேனர் கருவியால் உடல் வெப்ப பரிசோதனை செய்தும், கைகளில் கிருமி நாசினியை தெளித்தும், பயணச்சீட்டு பெற்று பயணம் செய்ய அனுமதித்தனர்.

    இதையறிந்த பிற தனியார் துறைகளை சேர்ந்த ஊழியர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மேற்கண்ட ரெயில்களில் பயணம் செய்ய தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
    கே.வி.குப்பம் அருகே காரில் இருந்த அமிலத்தை தண்ணீர் என நினைத்து குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் அருகே சென்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 56), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு காரில் இருந்த அமிலத்தை தண்ணீர் என்று நினைத்து தவறுதலாக குடித்தார். எரிச்சலால் துடித்த அவரை கே.வி.குப்பம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பயனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கணியம்பாடி அருகே 18 வயது நிரம்பாத சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    வேலூர்:

    கணியம்பாடி அருகே ஒரு கிராமத்தில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வருவதாக நேற்று முன்தினம் வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சைல்டுலைன் அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் அங்கு சென்று விசாரித்தனர். அதில் 17 வயது சிறுமிக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் 21 வயது வாலிபருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது தெரிய வந்தது. 

    இதையடுத்து திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அலுவலர்கள் இருதரப்பு வீட்டாரையும் அழைத்து பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எழுதி வாங்கினர். இதையடுத்து சிறுமியை மீட்டு செங்குட்டையில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    கணியம்பாடி அருகே உள்ள மற்றொரு கிராமத்தை சேர்ந்த 17 வயது பெண் காட்பாடியை சேர்ந்த 25 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதற்கு சிறுமியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் அவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி காட்பாடியில் உள்ள காதலன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சமூகநல அலுவலர்கள் அங்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமிக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
    வேலூரில் தந்தை, மகள் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    ஜார்தாகொல்லைமலை கிராமத்தை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரது மனைவி பாஞ்சாலை. பொன்னுச்சாமி 10 வயது மகள் தீபாவுடன் ரங்கப்பன்கொட்டாய் பகுதியில் அன்வர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.

    மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், ஒரே வீட்டில் அவர் மட்டும் தனி அறையிலும், தந்தையும், மகளும் தனி அறையிலும் தங்கியிருந்துள்ளனர்.

    காலை நேரத்தில் பொன்னுச்சாமி வெகுநேரமாகியும் வெளியே வராதால் அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது, தந்தையும், மகளும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.

    மற்றொரு அறைக்குள் படுத்திருந்த மனைவிக்கும் எதுவும் ஆகவில்லை. சம்பவ இடத்திற்கு வடக்கு மண்டல டிஜஜி, ஏஎஸ்பி உள்ளிட்டோர் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தடையை மீறி நடத்திய கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் துரைமுருகன், எ.வ.வேலு உள்பட 1064 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    வேலூர்:

    கொரோனா பரவல் தடுக்கும் வகையில் நேற்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.

    ஆனால் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.

    அதன்படி காட்பாடியில் தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன், குடியாத்தத்தில் வேலூர் கதிர் ஆனந்த் எம்.பி, அணைக்கட்டில் நந்தகுமார் எம்.எல்.ஏ உட்பட தி.மு.கவினர் கிராமசபை கூட்டம் நடத்தினர்.

    இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்தியது, கொரோனா அபாய நிலையை அறிந்தும் மக்களை கூட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் துரைமுருகன் உள்பட மொத்தம் 200-க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவண்ணாமலை அடுத்த நாச்சானந்தல் பஞ்சாயத்தில் தி.மு.க. சார்பில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.யுமான எ.வ.வேலு கலந்து கொண்டார்.

    இதேபோல் சோமாசிபாடியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான பிச்சாண்டி, கலசபாக்கத்தில் நடந்த கூட்டத்தில் அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதுதவிர மேலும் 20 இடங்களில் தி.மு.க. சார்பில் அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக எம்.எல்.ஏக்கள் எ.வ.வேலு, பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி. மற்றும் 20 பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட தி.மு.க.வினர் 864 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அண்ணாசாலையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்று, கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வாகீத்பாஷா, மண்டல தலைவர் ஐ.பி.ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் கவுன்சிலர் கோதண்டபாணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    வேலூர் மீன் மார்க்கெட் அருகில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து வேலூர் கலெக்டர் சண்முகம் ஆய்வு செய்தார்.
    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.46 கோடியில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. அதனால் அங்குள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, ஆரணி, திருப்பத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதைத்தவிர உள்ளூர் டவுன் பஸ்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட தொலை தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்களும் இங்கிருந்து தான் செல்கின்றன.

    பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் இடநெருக்கடி காணப்பட்டது. பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் வருவதற்கும் பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியே செல்வதற்கும் போதிய இடவசதி இல்லாததால் டிரைவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

    அதன் காரணமாக திருவண்ணாமலை, ஆரணி பகுதிகளுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் அண்ணா கலையரங்கம் அருகே கோட்டை சுற்றுச் சாலையில் இருந்து இயக்குவது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு விரைவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகள் அமைக்கப்பட உள்ளதால் அங்கிருந்து பஸ்களை இயக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் வேலூர் மீன் மார்க்கெட் அருகே உள்ள லாரி செட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்து திருவண்ணாமலை, ஆரணி பகுதிகளுக்கு பஸ்களை இயக்குவது தொடர்பாக வேலூர் கலெக்டர் சண்முகம் நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது கலெக்டர், அந்தப் பகுதியில் பஸ்கள் நிறுத்த இடவசதி உள்ளதா, பஸ்களை இயக்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா என்றும், அங்கு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பஸ்கள் அங்கிருந்த இயக்கப்பட்டால் லாரிகளை வேறு இடத்தில் நிறுத்தி வைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், போக்குவரத்து பொது மேலாளர் நடராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், தாசில்தார் ரமேஷ், மாநகராட்சி என்ஜினீயர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    கொணவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் அமானுல்லா. இவர் கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரிஸ்வானா (வயது 30). இவர்கள் கொணவட்டத்தில் புதிதாக வீடு கட்டினர். அதனால் ஏற்கனவே குடியிருந்த வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு எடுத்துசென்றுவிட்டனர். நேற்று முன்தினம் இரவு ரிஸ்வானா முள்ளிபாளையத்தில் உள்ள அவருடைய அம்மா வீட்டில் தூங்க சென்றார். இந்த நிலையில் நேற்று காலை புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு ரிஸ்வானா வந்தார். அங்கு முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த திருட்டு குறித்து ரிஸ்வானா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜோலார்பேட்டை ஒன்றிய பா.ஜ.க. தலைவர், நாட்டறம்பள்ளி வேளாண் உதவி அலுவலர் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் பலர் முறைகேடாக சேர்க்கப்பட்டு உதவித்தொகை பெற்று வந்ததும், பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து மாவட்டம் வாரியாக இந்தத் திட்டத்தில் முறைகேடாக நிதி உதவி பெற்றவர்கள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,657 பேர் விவசாயிகள் அல்லாதோர் என்பதும், ரூ.80 லட்சத்து 60 ஆயிரம் மோசடி நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் வங்கி கணக்கில் இருந்து இதுவரை ரூ.60 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வேளாண்மைத் துறை அதிகாரிகள் வேலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வேளாண்மைத் துறையில் தற்காலிக கணினி ஆபரேட்டர்களாக பணியாற்றியவர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள், நிதியுதவி பெற்ற விவசாயிகள் அல்லாதோர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். சிலர் பணிநீக்கமும், சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கிசான் திட்ட முறைகேட்டில் நாட்டறம்பள்ளி அருகே உள்ள வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த ஜோலார்பேட்டை ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கண்மணி (வயது 33) மற்றும் நாட்டறம்பள்ளி வேளாண் உதவி அலுவலர் பச்சூரை சேர்ந்த ஜெகன்நாதன் (41) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    அவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அல்லாதவர்களிடம் ஆவணங்களை பெற்று இணையதளம் மூலமாக பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. அதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 174 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,966 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின்  எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 14,792 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,966 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 13,702 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 242 பேர் உயிரிழந்துள்ளனர்.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணியாத நபர்களுக்கு கட்டாய பரிசோதனை செய்ய வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று பல்வேறுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழக அரசு பொது இடங்களில் முககவசம் அணியாத நபர்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். மேலும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் முக கவசம் அணியாவிட்டாலோ, சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டாலோ அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கொரோனா தொற்று பாதித்த நபர்களின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு உள்ளாட்சி அமைப்பினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

    வேலூர் பழைய பஸ் நிலையம், மண்டித்தெருவில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் முக கவசம் அணியாத நபர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனாலும் பலர் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்தனர். அதனால் தொற்று பாதித்த நபர்கள் மூலம் பிறருக்கு கொரோனா பரவும் அபாயம் காணப்பட்டது.

    இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாத அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வேலூர் மண்டித்தெரு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்பட பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் முக கவசம் அணியாதவர்களுக்கு கட்டாய பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் வேலூர் பழைய மீன்மார்க்கெட் அருகே வருவாய்த்துறை, போலீசார் அடங்கிய குழுவினர் முக கவசம் அணியும்படி வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.
    ×