search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மீன் மார்க்கெட் அருகே தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்த காட்சி
    X
    வேலூர் மீன் மார்க்கெட் அருகே தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்த காட்சி

    வேலூர் மீன் மார்க்கெட் அருகே தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு

    வேலூர் மீன் மார்க்கெட் அருகில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து வேலூர் கலெக்டர் சண்முகம் ஆய்வு செய்தார்.
    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.46 கோடியில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. அதனால் அங்குள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, ஆரணி, திருப்பத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதைத்தவிர உள்ளூர் டவுன் பஸ்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட தொலை தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்களும் இங்கிருந்து தான் செல்கின்றன.

    பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் இடநெருக்கடி காணப்பட்டது. பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் வருவதற்கும் பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியே செல்வதற்கும் போதிய இடவசதி இல்லாததால் டிரைவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

    அதன் காரணமாக திருவண்ணாமலை, ஆரணி பகுதிகளுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் அண்ணா கலையரங்கம் அருகே கோட்டை சுற்றுச் சாலையில் இருந்து இயக்குவது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு விரைவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகள் அமைக்கப்பட உள்ளதால் அங்கிருந்து பஸ்களை இயக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் வேலூர் மீன் மார்க்கெட் அருகே உள்ள லாரி செட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்து திருவண்ணாமலை, ஆரணி பகுதிகளுக்கு பஸ்களை இயக்குவது தொடர்பாக வேலூர் கலெக்டர் சண்முகம் நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது கலெக்டர், அந்தப் பகுதியில் பஸ்கள் நிறுத்த இடவசதி உள்ளதா, பஸ்களை இயக்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா என்றும், அங்கு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பஸ்கள் அங்கிருந்த இயக்கப்பட்டால் லாரிகளை வேறு இடத்தில் நிறுத்தி வைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், போக்குவரத்து பொது மேலாளர் நடராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், தாசில்தார் ரமேஷ், மாநகராட்சி என்ஜினீயர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×