என் மலர்tooltip icon

    வேலூர்

    குடியாத்தத்தில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் சுடுகாடு பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஏராளமான கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் தற்போது 120 பேர் வீடுகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்த நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 12-ந் தேதி முதல் கொரோனா பாதித்த 40 வயதுக்கு உட்பட்ட வேறு நோய்கள் இல்லாதவர்களுக்கு வீட்டில் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்த நபர்கள் ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி மற்றும் மருந்துகள் வழங்கப்படும். மேலும் அவர்கள் உடல்நிலை பற்றி அவ்வப்போது கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் டாக்டர்கள் கேட்டறிவார்கள்.

    அந்த நபர் வீட்டில் தான் உள்ளாரா என்பதை கண்டறியவும், உடல்நிலை மோசமடைந்தால் அவர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் டாக்டர்கள் பேசுவார்கள். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், நர்சுகள் உடனடியாக அங்கு சென்று முதலுதவி அளிப்பார்கள். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் தற்போது 120 பேர் வீடுகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைனில் பண மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    காட்பாடி:

    வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆன்லைன் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கீழ்மொணவூரை சேர்ந்த உதயகுமார் (வயது 27) என்பவர் தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும் ஆன்லைனில் பதிவிட்டிருந்தார்.

    இதனை நம்பிய சிலர் வேலை கேட்டு பணத்தை ஆன்லைனில் கட்டியுள்ளனர். அதன்படி, அவர் வேலை வாங்கித் தரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு அவர் சரியான பதில் தெரிவிக்கவில்லை. இதுவரை 50-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் பணம் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து காட்பாடி போலீசில் பெண் ஒருவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் வேலைக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பாதது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    வேலூர்:

    வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கடந்த 5-ந்தேதி வேலைக்கு சென்ற இளம்பெண் அதன்பிறகு வீடு திரும்பி வரவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உஷாலில்லி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலூர் கோட்டையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தொல்லியல்துறை அதிகாரி அறிவுறுத்தினார்.
    வேலூர்:

    வேலூர் நகரின் மையப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் கோட்டை அமைந்துள்ளது. இது மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டை வளாகத்தில் ஜலகண்டேஸ்வரர் கோவில், மசூதி, தேவாலயம், அருங்காட்சியகம், காவலர் பயிற்சி பள்ளி, அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன. இதனை காண தமிழகத்தில் இருந்து மட்டும் அல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    அவர்கள் கருங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை மற்றும் அதனையொட்டி சுற்றி காணப்படும் அகழி மற்றும் கட்டிடக்கலையை வியந்து பார்வையிட்டு செல்கிறார்கள். பல்வேறு சிறப்புகள் காணப்படும் கோட்டை மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.33 கோடியில் அழகுப்படுத்தும் பணி நடக்கிறது. முதற்கட்டமாக அகழியை தூர்வாருவது, நடைபாதை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தொல்லியல்துறை சென்னை வட்டார கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் நேற்று வேலூர் கோட்டையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்ற அவர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சுத்தமாக பராமரிக்கும்படியும், தொன்மை மாறாமல் கோவிலுக்கு வர்ணம் பூச வேண்டும் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஸ்ரீராமன் கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் கோட்டை வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம், கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது கோட்டை முதுநிலை பராமரிப்பாளர் ஈஸ்வர், அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    பாணாவரத்தில் கஞ்சா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அடுத்த சூரை காலனி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சூரைகாலனியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 20) என்பவர் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கஞ்சா பதுக்கிவைத்திருந்ததாக தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர்.
    ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை பெற்றுவந்த பேரறிவாளன் நேற்று 3-வது முறையாக பரோலில் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு பலத்த காவலுடன் வந்தார். அப்போது அவரை தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்றார்.
    ஜோலார்பேட்டை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஏற்கனவே அவர் இரண்டு முறை பரோலில் வந்திருந்தார்.

    இந்த நிலையில் 3-வது முறையாக பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் கேட்டு, அவரது தாயார் அற்புதம்மாள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் சிறைத்துறை தரப்பில் பேரறிவாளனுக்கு பரோல் விடுப்பு தர முடியாது எனக் கூறப்பட்டது. ஆனால், இவ்விவகாரத்தில் சிறைத்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் விடுப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.

    அதன்படி, நேற்று காலை 8 மணியளவில் சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்து, வேலூர் மத்திய சிறைக்கு பலத்த காவலுடன் அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து பலத்த காவலுடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று பிற்பகல் 1.55 மணியளவில் அழைத்து வரப்பட்டார்.

    அப்பொழுது அவரது தாயார் அற்புதம்மாள் கிருமி நாசினியை கொடுத்தார். அதன் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பேரறிவாளன் வீட்டுக்கு வெளியே வாளியில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள்நீர் கலந்த தண்ணீரில் முகத்தையும் சுத்தப்படுத்திக்கொண்டார். அப்போது அவரை தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்றார்.

    கொரோனா தொற்று காரணமாக பேரறிவாளனை காண வெளியாட்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பேரறிவாளனின் தாயாரை நிருபர்கள் சந்தித்தபோது கூறியதாவது:-

    என்னுடைய பிள்ளைக்கு சிறுநீர் தொற்று நோய் இருப்பது உலகத்திற்கே தெரியும். தற்பொழுது கொரோனா நோய் தொற்று காலகட்டம் என்பதால் என் பிள்ளை தனக்கு பாதிக்கப்பட்ட வியாதிக்கு உரிய மருந்துகளை கடந்த 5, 6 மாத காலமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. 30 ஆண்டுகாலம் இளமையை இழந்து வாழ்க்கையை தொலைத்து விட்ட என் பிள்ளையை நான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் பரோல் கேட்டேன். காலதாமதமாக கிடைத்து இருந்தாலும் பரவாயில்லை வேறு என்ன செய்வது எங்களால் கேட்கத்தான் முடியும் என்று சட்டத்திற்கு முன்பு போராட முடியாத இயலாமையில் உள்ளேன். மேலும் என் பிள்ளையை முன்னாள் முதல்-அமைச்சர் கண்டிப்பாக விடுவிப்பேன் என்று உறுதியளித்திருந்தார். நான் மலைபோல் நம்பி இருந்தேன். அது நடக்கவில்லை. நடப்பது நடக்கட்டும். பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன்- நளினி இருவரும் வீடியோ காலில் பேசியுள்ளனர்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை பேசி வந்தனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இதற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் பிற கைதிகள் தங்கள் உறவினர்களிடம் செல்போனில் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த சிறப்பு அனுமதி நளினி- முருகனுக்கு வழங்கப்படாததால் அவர்கள் சட்டப்போராட்டம் நடத்தினர். பின்னர் இருவரும் சிறை விதிமுறைகளுக்கு உட்பட்டு செல்போன் மூலம் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று மதியம் 15 நிமிடங்கள் அவர்கள் இருவரும் பேசினர். அதில், நளினி விடுப்பு கேட்டு விண்ணப்பிப்பது தொடர்பாகவும், நளினி தன் தாயார் பத்மாவிடம் செல்போனில் பேசும் நேரத்தை அதிகப்படுத்த மனு அளிப்பது தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
    மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த வாலிபர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரன் (வயது 27). இவருடைய மனைவி சுகுணா. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு குமரனை விட்டு பிரிந்து சுகுணா தனது மகனுடன் தனியாக சென்றுவிட்டார். மனைவி, மகன் பிரிந்து சென்றதன் காரணமாக குமரன் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமரன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து குமரனின் தாயார் அல்லி வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 186 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,924 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 15,738 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 186 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,924 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 14,617 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 254 பேர் உயிரிழந்துள்ளனர்.
    ஒரு ஆண்டுக்கு பின்னர் வேலூர் வந்த மனைவியின் கள்ளக்காதலனை வாலிபர் வெட்டிக்கொன்றார்.
    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 38), கார் டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (35) என்பவருடைய மனைவி ரமணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிச் சென்றனர்.

    ரமணியை கோபி பெங்களூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் சரவணன் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியை அழைத்துச் சென்றதால் கோபி மீது சரவணன் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இதற்கு பழி வாங்க சரவணன் காத்திருந்தார்.

    இந்த நிலையில் உறவினர் ஒருவரின் துக்கநிகழ்ச்சிக்காக கோபி நேற்று முன்தினம் வேலூர் வந்தார். இதையறிந்த சரவணன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அம்மணாங்குட்டை பகுதியில் கோபி நின்றிருந்தபோது அங்கு வந்த ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கோபியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், சரவணன் மனைவி ரமணிக்கும், கோபிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை எழுந்தது. பின்னர் கோபி, ரமணியை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு சென்றார். துக்க நிகழ்ச்சிக்கு கோபி வேலூர் வந்திருந்தபோது ஓராண்டு காத்திருந்த சரவணன் அவரை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சரவணனுக்கு 2 பேர் உதவியாக இருந்தது தெரியவருகிறது. அவர்களையும், சரவணனையும் தேடி வருகிறோம் என்றனர்.
    வேலூரில் வாலிபரை ஆட்டோவில் கடத்தி கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். தந்தையை கொன்றதால் நண்பர்களுடன் சேர்ந்து பழி வாங்கியதாக கைதானவர்களில் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு கொணவட்டம் அம்பேத்கர்நகரை சேர்ந்த சாலமன் (வயது 30) என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை மர்ம நபர்கள் ஆட்டோவில் கடத்தி கொலைசெய்து உடலை வீசிச்சென்றனர்.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கொலை செய்யப்பட்ட சாலமன் அதே பகுதியில் தள்ளுவண்டியில் புட்டு விற்பனை செய்து வந்ததும், கடந்த 2018-ம் ஆண்டு வேலூர் ஆர்.எஸ்.நகரை சேர்ந்த முனியனை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் முனியன் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் முனியனின் மகன் விஜயை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த சாலமனை ஆட்டோவில் கடத்தியதாகவும், தந்தையை கொலை செய்ததற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக சாலமனை ஆட்டோவில் வைத்து சரமாரியாக கத்தியால் வெட்டி கொலைசெய்து உடலை ஆள்நடமாட்டம் இல்லாத மருத்துவமனையின் அருகே வீசி விட்டு சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து விஜய் (26) மற்றும் அவருடைய நண்பர்கள் விக்னேஷ் (25), பிரபாகரன் (25), பிரவீன்குமார் (25), மணிகண்டன் (26), அய்யப்பன் (25) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.
    ×