search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: ஜோலார்பேட்டை ஒன்றிய பா.ஜ.க. தலைவர் உள்பட 2 பேர் கைது

    பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜோலார்பேட்டை ஒன்றிய பா.ஜ.க. தலைவர், நாட்டறம்பள்ளி வேளாண் உதவி அலுவலர் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் பலர் முறைகேடாக சேர்க்கப்பட்டு உதவித்தொகை பெற்று வந்ததும், பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து மாவட்டம் வாரியாக இந்தத் திட்டத்தில் முறைகேடாக நிதி உதவி பெற்றவர்கள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,657 பேர் விவசாயிகள் அல்லாதோர் என்பதும், ரூ.80 லட்சத்து 60 ஆயிரம் மோசடி நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் வங்கி கணக்கில் இருந்து இதுவரை ரூ.60 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வேளாண்மைத் துறை அதிகாரிகள் வேலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வேளாண்மைத் துறையில் தற்காலிக கணினி ஆபரேட்டர்களாக பணியாற்றியவர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள், நிதியுதவி பெற்ற விவசாயிகள் அல்லாதோர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். சிலர் பணிநீக்கமும், சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கிசான் திட்ட முறைகேட்டில் நாட்டறம்பள்ளி அருகே உள்ள வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த ஜோலார்பேட்டை ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கண்மணி (வயது 33) மற்றும் நாட்டறம்பள்ளி வேளாண் உதவி அலுவலர் பச்சூரை சேர்ந்த ஜெகன்நாதன் (41) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    அவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அல்லாதவர்களிடம் ஆவணங்களை பெற்று இணையதளம் மூலமாக பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. அதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×