என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    தூசி அருகே லாரி மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
    தூசி:

    காஞ்சீபுரம் தாலுகா தாயார்குள தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் கார்த்திக் (வயது 19), கட்டிட தொழிலாளி. திருவண்ணாமலை மாவட்டம் மன்சூராபாத் துருவம்பேட்டை கிராமத்தில் உள்ள உறவினர் அண்ணாமலை என்பவரின் வீட்டை கார்த்தி கட்டிக் கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்காக கார்த்திக் மற்றும் அவரது நண்பர் செல்வம் (18) ஆகிய இருவரும் மோட்டார்சைக்களில் சொந்த ஊருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். தூசி அருகே ஆக்கூர் கூட்டு சாலை கடக்கும்போது காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசியை நோக்கி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். செல்வம் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுகாமூர் ரோடு பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 8 வயது சிறுவன், பெண் உட்பட 3 பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்ததால் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரிய கலத்தாம்பாடியை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன் (வயது21). கூலி தொழிலாளி.

    இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு திடீரென வேறு மாப்பிள்ளையுடன் பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த சவுந்தரபாண்டியன் இன்று காலை செங்கம் அருகே உள்ள கோனாங்குட்டை கேட் என்ற இடத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி உச்சிக்கு சென்றார்.

    வாலிபர் ஒருவர் செல்போன் டவரில் ஏறுவதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

    இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் செங்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு செங்கம் டி.எஸ்.பி. சரவணகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    செங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    டி.எஸ்.பி. சரவணகுமார் வாலிபரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    காதலியை அழைத்து வந்தால் மட்டுமே செல்போன் டவரில் இருந்து இறங்குவதாக வாலிபர் அடம்பிடித்து தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    இளம்பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாக டி.எஸ்.பி. சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வாலிபர் கீழே இறங்கி வர சம்மதித்தார்.

    தீயணைப்பு வீரர்கள் செல்போன் டவரில் ஏறி வாலிபரை பத்திரமாக கீழே மீட்டு வந்தனர். இதையடுத்து போலீசார் வாலிபரை செங்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்ததால் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவண்ணாமலை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    திருவண்ணாமலை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளன்று பக்தர்கள் மலை ஏறவும்,  கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கார்த்திகை தீபத்தன்று கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    செங்கம் அருகே கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கம்:

    பண்ருட்டியை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 37). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுகன்யா (35). இவர்களுக்கு சிருஷ்டிகா(5), தேவதர்ஷினி (2) என 2 மகள்கள் இருந்தனர்.

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட நிஷாந்த் முடிவு செய்தார். தனியார் டிராவல்ஸ் கார் மூலம் நேற்று இரவு பெங்களூரில் இருந்து பண்ருட்டிக்கு புறப்பட்டனர்.

    காரை பெங்களூரை சேர்ந்த குமார் (34) என்பவர் ஓட்டி வந்தார். அவர்கள் வந்த கார் இன்று அதிகாலை 4 மணிக்கு செங்கம் அடுத்த பாச்சல் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிர் திசையில் பாண்டிச்சேரியில் இருந்து பெங்களூருக்கு கண்டெய்னர் லாரி வந்தது. கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. விபத்தில் கார் டிரைவர் குமார், நிஷாந்த் அவரது மகள் தேவதர்ஷினி ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    நிஷாந்த் மனைவி சுகன்யா, மகள் சிருஷ்டிகா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்து பாச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் இறந்த 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீபாவளிக்காக சொந்த ஊர் சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே இளம்பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    செங்கம்:

    செங்கம் அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 25). இவர் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக புதுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தாயார் புகார் அளித்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து இருவரையும் தேடி வந்தார். 

    இந்த நிலையில் புதுப்பாளையம் அருகே வினோத்குமாரும், அவர் கடத்திச்சென்றதாக கூறப்பட்ட இளம்பெண்ணும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சென்று இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக வினோத்குமாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    கலசபாக்கம் அருகே பெண் தற்கொலை வழக்கில் தந்தை - மகனை போலீசார் கைது செய்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கலசபாக்கம்:

    கலசபாக்கம் தாலுகா மேலாரணி மதுரா மேல்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 30). அவருடைய மனைவி சுகுணா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சுகுணாவிடம் மாமியாரும், மாமனாரும் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுகுணா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சுகுணாவின் உறவினர்கள் அவரது சாவுக்கு காரணமான கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரையும் கைது செய்யக்கோரி திடீரென போளூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து வென்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுணாவின் கணவர் அன்புச்செல்வன், மாமனார் ஏழுமலை (50) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா நடத்துவது குறித்து அதிகாரிகளின் கூட்டத்தில் மேற்கொண்ட ஆலோசனையின்படி இன்று (வியாழக்கிழமை) இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசுக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சக்திவேல் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில், பூரி ஜெகந்நாதர் கோவிலில் நடத்திய திருவிழா போல, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலிலும் திருவிழாக்களை நடத்தவேண்டும் என்றும், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கடந்த 7-ந் தேதி கோரிக்கை மனு அனுப்பியதாகவும் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “திருவிழா நடத்தினால், வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவதை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த முடியும். ஆனால், உள்ளூர் மக்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்.

    அப்போது அரசு தரப்பில், “கோவில் விழாக்கள் நடத்துவது குறித்து அக்டோபர் 30-ந் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கோவில் நடைமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த திருவிழாவை எப்படி நடத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகம்தான் முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

    “வழக்கமாக 17 நாட்கள் திருவிழா நடக்கும். இதில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள், தேர் திருவிழாவின்போது 5 லட்சம் பக்தர்கள், மகா கார்த்திகை தீபம் அன்று 20 முதல் 25 லட்சம் பக்தர்கள் வரை திருவண்ணாமலை கோவிலுக்கு வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூஜைகள் அனைத்தும் முறையாக நடத்தப்படும். தேர்த் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்காமல், உற்சவரை வைத்து கோவிலுக்குள் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரம், தீபத்திருவிழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று (நேற்று) நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் நாளை (இன்று) இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கோவில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது குறித்து அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அன்று தெரிவிக்கும்படி அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
    கீழ்பென்னாத்தூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி, 2 மகள்களை கடப்பாரையால் தாக்கியதில் 2 மகள்கள் இறந்தனர். தாக்கிய நெசவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த ராயம்பேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 38), நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தேவிகா (27). இவர்களுக்கு மீனா (10), ஷிவானி (8) என 2 மகள்கள் இருந்தனர். அங்குள்ள அரசு பள்ளியில் மீனா 5-ம் வகுப்பும், ஷிவானி 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    தேவிகா அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 4 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு முருகன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் செய்து வந்த வேலையை விட்டு விட்டு கீழ்பென்னாத்தூரில் உள்ள ஓட்டலில் கடந்த 15 நாட்களாக தேவிகா வேலைக்கு சென்று வந்ததாகவும், அங்கும் வேலைக்கு செல்லக்கூடாது என்று முருகன் தேவிகாவிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மீனாவும், ஷிவானியும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முருகன், தேவிகாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தேவிகாவையும், தூங்கிக்கொண்டிருந்த மகள்களையும் கடப்பாரையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் ஷிவானி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேவிகா, மீனா 2 பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தாள். தேவிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக முருகனை கைது செய்தனர்.
    மங்கலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    மங்கலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை கலஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் (வயது 30), துரிஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (32), விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா மனந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (42) ஆகியோரை திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான மங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேர் மீது சாராய விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் மோகன்தாஸ், சக்திவேல், வெங்கடேசன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 126 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தண்டராம்பட்டு அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தென்முடியனூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மாணிக்கம், சங்கர், ஏழுமலை ஆகிய 3 பேரும் விற்பனையாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு வழக்கம்போல கடையை பூட்டி கொண்டு சென்றனர். மறுநாள் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் வைத்திருந்த மதுபாட்டில்கள் விற்பனையான பணம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 160-ஐ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் 4 மதுபாட்டில்களையும் திருடி சென்று உள்ளனர்.

    இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசில் விற்பனையாளர்கள் 3 பேரும் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    கலசபாக்கம் அருகே பள்ளியின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலசபாக்கம்:

    கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழுதான கம்ப்யூட்டர்களை, கணினி அறையில் தனியாக வைத்து பூட்டி வைத்துள்ளனர். இந்த நிலையில் மர்ம நபர்கள் பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கணினி அறையில் தனியாக வைத்திருந்த பழுதான கம்ப்யூட்டர்களை திருடிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து கடலாடி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×