என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் நேற்று மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.

    மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும், என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருவண்ணாமலை அருகே மொபட்டில் இருந்து விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள பெரியபாளிப்பட்டு புதிய காலனி, மேட்டுதெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 21). இவர் சம்பவத்தன்று அந்தபகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் அவரின் தாயார் சுதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தற்கொலை செய்து கொண்ட அகிலாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் ஆரணி உதவி கலெக்டர் கவிதா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 39). அவரது மகள் அகிலா (19). இவருக்கும், ஆரணி ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஏழுமலை என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    தற்போது ஆடிமாதம் என்பதால் அகிலா தனது தாய் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி அகிலா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலனஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அகிலா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அகிலாவின் தாய் விஜயா கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார்.

    தற்கொலை செய்து கொண்ட அகிலாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் ஆரணி உதவி கலெக்டர் கவிதா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    இன்றும், நாளையும் கோவிலுக்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 2 நாட்களுக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெறும்
    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடினால் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால் அதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மத வழிபாட்டு தலங்களில் மக்கள் அதிகமாக செல்வதால் கொரோனா பரவும் அபாயம் இருந்ததால் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

    இதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து 4-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு 8-ந்தேதி வரை அதாவது நேற்று முன்தினம் வரை தரிசனத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டது.

    இந்த தடை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டனர். 8 நாட்களுக்கு பின்னர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இதனிடையே தமிழகத்தில் கடந்த 6-ந் தேதி கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது. ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் தமிழில் அர்ச்சனை நடைபெறவில்லை. நேற்று கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் நேற்று தமிழில் அர்ச்சனை தொடங்கியது. இதற்காக 6 சிவாச்சாரியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழில் அர்ச்சனை செய்தனர்.

    இந்தநிலையில் ஆடிப்பூரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்றும், நாளையும் 2 நாட்கள் கோவில் நடை சாத்தப்படுகிறது.

    இதுதொடர்பாக கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்றும், நாளையும் கோவிலுக்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 2 நாட்களுக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. தீமிதி விழா நடைபெறாது. பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
    குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த சுமங்கலி பெண்கள் கோவில் குளத்தில் புனித நீராடி மடிப்பிச்சை ஏந்தி கோவில் வளாகத்தில் உள்ள சாதுக்களிடம் பிரசாதம் பெற்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழந்த மகான் ஆறுமுக சுவாமி பொதுமக்களுக்கு மூலிகை மருத்துவம் செய்து கொண்டு அருளாசி வழங்கி வந்தார்.

    இந்நிலையில் வயது முதிர்ந்த தருவாயில் ஆடி அமாவாசை தினத்தன்று ஜீவசமாதி அடைய போவதாகவும், அந்த இடத்தில் கோவில் கட்டி வருடந்தோறும் ஆடி அமாவாசை நாளில் குழந்தை பாக்கியம் இல்லாத திருமணமான பெண்கள் விரதமிருந்து இங்கு வந்து எனக்கு படைக்கும் படையலை பரதேசிகளிடம் இருந்து மடிப்பிச்சையாக பெற்று அருகில் உள்ள குளக்கரையில் மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறி ஜீவசமாதி அடைந்தார்.

    அதனை தொடர்ந்து அந்த இடத்தில் பொது மக்கள் கோவில் கட்டி வணங்கி வருகின்றனர்.

    ஆடி அமாவாசை தினமான நேற்று குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த சுமங்கலி பெண்கள் கோவில் குளத்தில் புனித நீராடி மடிப்பிச்சை ஏந்தி கோவில் வளாகத்தில் உள்ள சாதுக்களிடம் பிரசாதம் பெற்றனர்.

    தொடர்ந்து அவர்கள் கோவில் அருகில் உள்ள குளக்கரை படியில் சென்று பிரசாதத்தினை வைத்து பயபக்தியுடன் சுவாமியை வேண்டி மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு மண்சோறு சாப்பிட்டனர்.

    மேலும் வேண்டுதலை நிறைவேறிய பெண்கள் தங்கள் குழந்தையுடன் வந்து எடைக்கு எடை நாணயம் காணிக்கையாக செலுத்தினர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 388 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 47 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 545 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுவரை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 388 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 51 ஆயிரத்து 204 பேர் குணமடைந்து உள்ளனர். 639 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கலெக்டர் உத்தரவின் பேரில் ருக்மணி, சந்தோஷ்ராஜ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    போளூர் மாட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நாகப்பன் என்பவரது மனைவி ருக்மணி (வயது 54). இவர், சாராயம் விற்றதாக போளூர் போலீசார் கைது செய்தனர்.

    செங்கம் தாலுகா புதுப்பாளையம் வீரணந்தல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சந்தோஷ்ராஜ் (32) என்பவர் சாராயம் விற்பனை செய்த போது செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் கைது செய்தார்.

    இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ருக்மணி, சந்தோஷ்ராஜ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    போளூரில் பாம்பு கடித்து டிரைவர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் பெரியார் சாலையில் வசிப்பவர் மாருதி குமார் (வயது 36). இவர் போளூரை அடுத்த வெண்மணியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் இரவு 8 மணிக்கு போளூர் செல்வம்பேட்டையில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது மாருதிகுமாரை பாம்பு கடித்து விட்டது.

    அவரை போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும் அவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வழியிலேயே மாருதிகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மனைவி புவனேஸ்வரி போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 57 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 57 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் இந்நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார். மேலும் 55 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து 544 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 336 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 51 ஆயிரத்து 153 பேர் குணமடைந்து உள்ளனர். 639 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல் 70 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கணினி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி செல்வி இவர்களுக்கு 3 மகள் உள்ளனர். சேகர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    3 மகள்களும் திருமணமாகி சென்றதால் செல்வி வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் செல்வி சென்னையில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு செல்ல வீட்டை பூட்டி விட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட திருட்டு கும்பல் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 13 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

    மேலும் அதே பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் கமலகண்ணன் என்பவரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல் 70 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கணினி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாண்டியன் என்பவருடைய வீட்டிலும் புகுந்து 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    3 வீடுகளிலும் சேர்த்து 86 பவுன் நகைகளை திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.30 லட்சமாகும்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூசி அருகே மணல் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே கீழ்நேத்தப்பாக்கம் ஆற்றுப்படுகையில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த ஹரிதாஸ் (வயது 62), வையாபுரி (60), மணி (50), மனோகரன் (40), முனியாண்டி ஆகியோர் 5 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர்.

    தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தவர்களில் மணி, முனியாண்டி, மனோகரன் ஆகிய 3 பேர் போலீசாரை பார்த்தவுடன் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பி ஓடினர்.

    இதனையடுத்து ஹரிதாஸ், வையாபுரி ஆகியோரை போலீசார் கைது செய்து. 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.


    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை :

    ஆடிப் பெருவிழாகளால் கொரோனா தொற்று பரவல் அதிகமாகிவிட கூடாது என்ற காரணத்தால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கோவிலில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதை நீட்டிப்பு செய்து நேற்று இரவு திடீரென மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதாவது வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்திலுள்ள முக்கிய கோவில்களிலும் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கோவிலில் வழக்கம்போல் நடைபெறும் அனைத்து பூஜைகளும் ஆகம விதிப்படி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    ×