என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    தேசூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி டேங்க் ஆபரேட்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    தேசூரை அடுத்த செங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 56). தெள்ளார் ஒன்றியம் லட்சுமிபுரத்தில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் உள்ள பசு மாட்டு பாலை செங்கம்பூண்டி கிராமத்தில் கொடுத்து விட்டு சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே செங்கம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், சந்திரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சந்திரன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன் ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த முரளி வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    அரசு மருத்துவமனையில் மோட்டார் சைக்கிள்கள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு அய்யப்பன் நகரை சேர்ந்தவர் நேரு, காஞ்சியைச் சேர்ந்த ரவி, வேட்டவலத்தைச் சேர்ந்தவர் விஜி. 3 பேரும் தங்களின் மோட்டார்சைக்கிள்களில் தனித் தனியாக வெவ்வேறு நாட்களில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.

    அவா்கள் மருத்துவமனை வளாகத்தில் மோட்டார்சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது அவர்களின் மோட்டார்சைக்கிள்களை காணவில்லை. மர்ம நபர் யாரோ அவற்றை திருடிச் சென்று விட்டனர்.

    இது குறித்து அவர்கள் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று மருத்துவமனை வளாகத்தில் ஒரு மோட்டார்சைக்கிளை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    அவர், திருப்பத்தூர் மாவட்டம் ஜெலகம்பாறை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 38) எனத் தெரிய வந்தது. அவர், மேற்கண்ட நபர்களின் மோட்டார்சைக்கிள்களை திருடியதாக கூறினார். இதையடுத்து விஜயகுமாரை போலீசார், கைது செய்து 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
    வெறையூர் அருகே புளிய மரத்தில் ஆட்டோ மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணாபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள காட்டு செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சேகர் (வயது 37), சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து பழங்களை விற்பனை செய்து வந்தார். சம்பவத்தன்று சேகர் திருவண்ணாமலையில் இருந்து பழங்களை கொள்முதல் செய்து கொண்டு திருக்கோவிலூரை நோக்கி ஆட்டோவை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். வெறையூர் அருகே கல்லேரி கிராமத்தில் சென்றபோது நிலைதடுமாறிய ஆட்டோ சாலை ஓரம் இருந்த ஒரு புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த வெறையூர் போலீசார் விரைந்து சென்று சேகரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இன்று (21-ந்தேதி) இரவு 7.19 மணி முதல் நாளை (22-ந்தேதி) மாலை 6.17 மணி வரை பவுர்ணமி காலமாகும். இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
    திருவண்ணாமலை

    கொரோனா பரவியதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.

    தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு மாறாக இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று (21-ந்தேதி) இரவு 7.19 மணி முதல் நாளை (22-ந்தேதி) மாலை 6.17 மணி வரை பவுர்ணமி காலமாகும். இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல இன்றும் நாளையும் அனுமதி கிடையாது.

    திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தற்போது முக்கிய கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 22-ந்தேதி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாது. எனவே பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து ஏமாற வேண்டாம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள். அதன் மூலம் பெரிய அளவில் வணிகம் நடைபெறும்.

    மேலும் ரெயில், பஸ், சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்து மூலம் அந்த துறைகளுக்கும் கணிசமாக வருமானம் கிடைக்கும். அதுமட்டுமின்றி சிறு வியாபாரிகள் பலனடைந்து வந்தனர்.

    பவுர்ணமி கிரிவல தடையால் அவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் முன்பதிவு செய்த 26 திருமணங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி வாரத்தில் 3 நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் நேற்றுமுன்தினம் வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இதையடுத்து இக்கோவிலில் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு கோவில் கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதத்தில் வரும் முதல் சுபமுகூர்த்த தினம் நேற்று என்பதால் அதிகாலை முதல் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் அலங்கார வாகனத்தில் மணமக்கள் ஊர்வலம் போன்றவை நடைபெற்றது.

    திருவண்ணாமலை நகரில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் நேற்று காலை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமண நிகழ்ச்சிக்கு வந்த வெளியூர் மக்கள் நேற்று முன்தினம் அருணாசலேஸ்வரர் கோவிலில் பலர் சாமி தரிசனம் செய்தனர். நேற்று வந்த வெளியூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் முன்பதிவு செய்து இருந்த 26 திருமணங்கள் கோவிலில் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது.

    அப்போது மணமக்களின் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மட்டும் சமூக இடைவெளியுடன் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் மண்டபங்களில் திருமணம் செய்த மணமக்கள் கோவில் ராஜகோபுரம் முன்பும், 16 கால் மண்டபம் முன்பும் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் நேற்று வரலட்சுமி விரதம் என்பதால் அதற்கான பூஜை பொருட்களை வாங்கவும் பொதுமக்கள் திருவண்ணாமலை நகரில் உள்ள கடை வீதிகளில் குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 938 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுவரை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 938 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 51 ஆயிரத்து 820 பேர் குணமடைந்து உள்ளனர். 472 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 646 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    இன்று ஆவணி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் நேற்று முதல் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 3 நாட்கள் மூடப்படுகிறது.

    கடந்த திங்கட்கிழமை முதல் நேற்றுவரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இந்தநிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி வாரத்தில் மூன்று நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று (20-ந்தேதி) முதல் வருகிற 22-ம் தேதி வரை 3 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

    இன்று ஆவணி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் நேற்று முதல் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. நேற்று இரவில் அலங்கார வாகனத்தில் மாப்பிள்ளை ஊர்வலம், கோவில்களில் மணமகள் உறவினர்கள் வழிபாடு செய்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    50-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் இன்று காலை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமண நிகழ்ச்சிக்கு வந்த வெளியூர் மக்கள் நேற்றே பலர் சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று நடை சாத்தப்பட்டிருந்தது. வெளியூர் மக்கள் அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    அவர்கள் கோவில் வெளியே ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்தனர். இதேபோல் ஏராளமான புதுமண ஜோடிகளும் கோவில் முன்பு நின்று வழிபட்டனர்.

    இன்று காலை கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் இன்று வரலட்சுமி விரதம் என்பதால் அதற்கான பூஜை பொருட்களை வாங்கவும் பொதுமக்கள் குவிந்தனர்.

    இன்று மாலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல சிவாலயங்களில் பிரதோ‌ஷ வழிபாடுகள் நடைபெற உள்ளது.

    சாமை பயிரை நெல் பயிரை அறுவடை செய்யும் எந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியும். சாமை பயிரின் வைக்கோல் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
    திருவண்ணாமலை:

    தமிழ்நாட்டில் சாமை போன்ற சிறுதானியங்கள் விளையும் மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று. சாமை பயிரானது 85 முதல் 90 நாட்கள் வளரக்கூடியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தில் உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்.

    அந்தவகையில் அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தில் பயிரிடப்பட்டு உள்ள சாமை மற்றும் திணை பயிர்களின் வல்லுனர் விதை உற்பத்தி பண்ணையில் திருவண்ணாமலை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மலர்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சாமை மற்றும் திணை பயிர்களில் பிற ரக கலப்பு மற்றும் தூய்மையினை அவர் ஆய்வு செய்தார். இந்த ரக சாமை அதிக இரும்பு சத்து நிறைந்தது. வறட்சியை தாங்கி வளரும். சாமை பயிரின் வைக்கோல் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம். சாமை பயிரை நெல் பயிரை அறுவடை செய்யும் எந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியும். பெரும்பாலும் மானாவாரி பருவமான ஆடி முதல் புரட்டாசி மாதம் வரை விதைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தின் பேராசிரியரும், தலைவருமான நிர்மலாகுமாரி உடனிருந்தார்.
    படுகாயம் அடைந்த கமலக்கண்ணனை பொதுமக்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் அருந்ததியர் பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சரவணன், தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வரும் கமலக்கண்ணன் (வயது 45) என்பவருடன் ஆரணி சாலையில் உள்ள கடைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்.

    அங்குள்ள பயணியர் விடுதி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக சரவணன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த கமலக்கண்ணனை பொதுமக்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் ஊராட்சியில் இதுவரை 95 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் ஊராட்சியில் 11-வது முறையாக நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அத்தியந்தல் ஊராட்சியில் இதுவரை 95சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அத்தியந்தல் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனை புதிதாக பொறுப்பேற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அருணாசலம் பார்வையிடுவதற்காக அத்தியந்தல் ஊராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை ஊராட்சி மன்றத் தலைவர் இரா.முருகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    பின்னர் கால்வாய் அமைக்கும் இடத்துக்கு நேரில் சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அத்தியந்தல் பகுதியில் சிறப்பாக திட்டப்பணிகள் நடைபெற்று வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
    மணல் கடத்திய டிராக்டர், மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி அடுத்த களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். ஆரணி அடுத்த நடுக்குப்பம் பகுதியில் சென்றபோது அந்தவழுியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த நபர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதேபோன்று காமக்கூர் ஆற்றுப்படுகைப் பகுதியில் இருந்து காமக்கூரை சேர்ந்த சேட்டு என்பவர் மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்தார். அவரும் போலீசாரை பார்த்ததும் மாட்டுவண்டியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அதைத்தொடர்ந்து போலீசார் டிராக்டர், மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கலசபாக்கம் அருகே சூதாட்ட தகராறில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலசபாக்கம்:

    கலசபாக்கம் ஒன்றியம் கடலாடி அடுத்த அரிதாரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் காமராஜ் (வயது 26), சிவக்குமார் (51). இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் காமராஜ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை அடகு வைத்து அந்த பணத்தையும் சூதாட்டத்தில் தோற்றுவிட்டதாகவும், இதற்கு சிவக்குமார்தான் காரணம் என இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் சிவக்குமாரை கடத்தி விட்டதாக அவரது மனைவி வள்ளி கடலாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடத்தப்பட்ட சிவக்குமாரை மீட்டு, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்டதாக காமராஜ் மற்றும் தென்மாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மகன் செல்வகுமார் (24) ஆகியோரை கைது செய்துள்ளனர். சிவக்குமாரை அடிதடி வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×