என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 56 கல்லூரிகளில் 59 சதவீத மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் கலெக்டர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது,

    கல்லூரி வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகளிடம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    மேலும் அவர், கல்லூரியில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தார். பின்னர் அவர், கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தும் முகாமை பார்வையிட்டார்.

    அப்போது கலெக்டர் கூறும்போது, “பள்ளி மற்றும் கல்லூரி களில் சுகாதாரத்துறையின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

    ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கல்வி நிலையங்களை சுகாதாரமாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 6 அடி சமூக இடைவெளி இருக்கும் வகையில், இருக்கை வசதிகள் ஏற்படுத்தி மாணவர்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதால், அதற்கேற்ப பாடத்திட்ட கால அட்டவணை தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 56 கல்லூரிகளில் இளநிலை பாடத்திட்டத்தின் கீழ் 2ம் ஆண்டு படிக்கும் 12,217 மாணவர்களும், 3ம் ஆண்டு படிக்கும் 12,816 மாணவர்களும் மற்றும் முதுநிலை பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 1,958 மாணவர்களும் என மொத்தம் 26,987 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களில் 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் என 59 சதவீதம் பேர் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

    கல்லூரிகளில் பணியாற்றும் 3,700 பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் 3,550 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஏதுவாக, கல்லூரி வளாகத்தில் முகாம் நடத்தப்படுகிறது” என்றார்.

    இதில், உதவி கலெக்டர் ரவி தேஜா, கோட்டாட்சியர் வெற்றி வேல், அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    கண்ணமங்கலம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் ஆத்துவாம்பாடியில் ரோந்து சென்றனர். அப்போது அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் வேலன் (வயது 41) என்பவர் சாராயம் விற்றதாக கைது செய்தனர்.
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள கோவில் உண்டியல்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது.
    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆவணி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

    மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது.வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருமானம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் ஆவணி மாத பவுர்ணமி முடிந்ததை தொடர்ந்து நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது.

    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள கோவில் உண்டியல்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது.

    இப்பணிகள் கோவில் இணை ஆணையர்வி.கே. அசோக்குமார், மேல்மலையனூர் உதவி ஆணையர் ராமு, கனரா வங்கி துணை மேலாளர் சிவராமன், கோவில் மணியக்காரர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டு வருகிறது.

    இதில் கோவில் ஊழியர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காணிக்கை பணத்தை எண்ணி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர் அருகே திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற போது இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (66), இவரது மகன் விக்னேஷ் (27) கட்டிட தொழிலாளி. விக்னேஷுக்கு வரும் 9-ந் தேதி திருமண நடத்திட ஏற்பாடு நடந்து வந்தது.

    திருமண பத்திரிக்கைகள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி வந்தனர்.

    நேற்றிரவு 8 மணி அளவில் விக்னேஷ், பக்கத்து கிராமமான கனபாபுரத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்குவதற்காக பைக்கில் சென்றார். அப்போது கனபாபுரம் சுங்கா நகர் அருகே வந்தபோது, வழுதலங்குணம் கிராமத்தில் இருந்து வந்து இருசக்கர வாகனத்தில் உதயா (20) என்பவர் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, 2 பைக்கும் நேருக்கு நேர் மோதிகொண்டன.

    இதில் விக்னேசும், உதயாவும் படுகாயம் அடைந்தனர். விக்னேஷூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் விக்னேஷை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு வருகிறது.
    கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 27-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. இதனால் கோவிலின் கோபுர வாயில்கள் அடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் ஆரணி தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கணபதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் ஆரணி தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கணபதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடுப்பூசி போடாத 6 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். மேலும் சுகாதார ஆய்வாளர் வேலாயுதம், சுகாதார செவிலியர்கள் அடங்கிய குழுவினர் ஓட்டல்கள், ஜவுளி கடைகள் உள்பட பல்வேறு கடைக்காரர்கள் மற்றும் அதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.
    பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட 122 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமை பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் இந்திரா இளங்கோவன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணிதரன், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட 122 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் அன்பரசன், சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    கலசபாக்கம் அருகே ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலசபாக்கம்:

    கலசபாக்கத்தை அடுத்த ஆணைவாடி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராஜாமணி (வயது 70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்புற இரும்பு கேட் மற்றும் மரக்கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு பீரோவும் உடைக்கப்பட்டு அதன் உள்ளே இருந்த சுமார் 5 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன. இது குறித்து கலசபாக்கம் போலீசில் ராஜாமணி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்புடைய திருடர்களை தேடி வருகின்றனர்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட தடையால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி வாரத்தில் 3 நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை என பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி கோவில் கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டன.

    எனினும் கோவிலில் வழக்கம் போல் நடைபெறும் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன. பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ராஜகோபுரம் முன்பும், 16 கால் மண்டபத்தின் முன்பும் நின்று கற்பூரம் மற்றும் விளக்கேற்றி வழிபட்டனர்.

    ஏராளமான பக்தர்கள் கோவிலின் வெளியில் நின்று சாமியை வணங்கி வழிபட்டனர். மேலும் தனித்தனியாக பக்தர்கள் கோவில் பின்புறம் உள்ள மலை சுற்றி கிரிவலம் சென்றனர்.

    கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி மாதம் தொடங்கியபின் நேற்று 6-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு சாலையில் வழிபாடு செய்தனர். வழக்கமாக ஆறாம் வெள்ளி திருவிழாவின் போது உற்சவ அம்மனுக்கு கமண்டல நதியில் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெறுவது வழக்கம். ஆனால் கொேரானா தொற்று கட்டுப்பாடு காரணமாக அம்மனுக்கு கோவில் வளாகத்தில் நேற்று தீர்த்தவாரி நடத்தி உட்பிரகார உலா நடந்தது.
    ஆரணி ரோடு ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணிரோடு ரெயில் நிலைய பகுதி தண்டவாளத்தில் ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. தகவலை கேள்விப்பட்டு களம்பூர் நால்வர் தெருவைச் சேர்ந்த சாவித்திரி என்பவர் சென்று பார்த்தார். ரெயிலில் அடிபட்டு பலியானவர் தனது கணவர் ராஜாராமன் (வயது 50) என்பதை உறுதி செய்து கதறினார்.

    நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து காட்பாடியை நோக்கி சென்ற சரக்கு ரெயிலில் ராஜாராமன் அடிபட்டு தலை நசுங்கி பலியானதாக தெரிய வருகிறது. காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    களம்பூர் நால்வர் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான அவர் கடந்த 10 நாட்களாக வீட்டுக்கு வராமல் சுற்றித்திரிந்தார். அவரை, குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை. ஆரணிரோடு ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பலியாகியது தெரிய வந்தது.
    தூசி அருகே பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    தூசி அருகே உள்ள அரசாணைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55), தொழிலாளி. இவரை பாம்பு கடித்துள்ளது.

    இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணியில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் வேலைபார்த்த 6 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், சுகாதார இணை இயக்குனர் டாக்டர் கண்ணகி ஆகியோர் உத்தரவின்படி ஆரணி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி. ராஜவிஜயகாமராஜ் தலைமையில் கடை கடையாக கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் யார் யார் என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் வேலைபார்த்த 6 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

    நகராட்சி வருவாய் ஆய்வாளர் மோகன், கட்டிட ஆய்வாளர் பாலாஜி, சுகாதார ஆய்வாளர் குமரவேல் மற்றும் காவல்துறையினர் சுகாதாரத்துறையினர் உடன் சென்றிருந்தனர்.
    ×