search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு கடித்தது"

    • வழக்கம்போல பள்ளிக்கு சென்ற அவன், வகுப்பறையில் உட்கார்ந்திருந்தபோது மேஜையின் உள்பகுதியில் தற்செயலாக புத்தகத்தை எடுப்பதற்காக கையை விட்டுள்ளான்.
    • மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாம்பை லாவகமாக பிடித்து ஒரு குளிர்பான பாட்டிலில் போட்டு அடைத்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் களிமண்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. கூலித்தொழிலாளி. இவருடைய மகன் முனீஸ்பாலா (வயது 13). அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    நேற்று முன்தினம் மாணவன் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற அவன், வகுப்பறையில் உட்கார்ந்திருந்தபோது மேஜையின் உள்பகுதியில் தற்செயலாக புத்தகத்தை எடுப்பதற்காக கையை விட்டுள்ளான். அப்போது வெடுக்கென்று ஏதோ ஒன்று கடித்ததை உணர்ந்த முனீஸ்பாலா, உடனடியாக கையை உதறிக்கொண்டு வெளியில் எடுத்துள்ளான். உள்ளே பார்த்தபோது பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

    அதனை கண்டு அலறவே மாணவர்கள் ஒன்று சேர்ந்து அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு குளிர்பான பாட்டிலில் போட்டு அடைத்தனர். உடனடியாக மாணவன் முனீஸ்பாலா ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். பாட்டிலில் அடைக்கப்பட்ட பாம்பும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    அது ஒரு வகையான விஷப்பாம்பு என்பதை அறிந்த டாக்டர்கள், மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவனை பாம்பு கடித்தது.
    • கடந்த 27-ந்தேதி 9-வது முறையாக பிரஜ்வலை பாம்பு கடித்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்-உஷா தம்பதியின் மகன் பிரஜ்வல் (வயது 14). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி பிரஜ்வல் வீட்டு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்றான். அப்போது ஒரு பாம்பு அவனை கடித்தது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவனை பாம்பு கடித்தது. இவ்வாறு அவனை தொடர்ந்து 6 முறை பாம்பு கடித்தது. 3 முறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமான பிரஜ்வல் 3 முறை நாட்டு மருந்து சிகிச்சையும் எடுத்து உள்ளான். இதனால் பயந்துபோன அவனது பெற்றோர் சித்தாப்பூருக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். அதன் பின்னரும் 2 முறை பாம்பு சிறுவன் பிரஜ்வலை கடித்துள்ளது. அதற்கும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி 9-வது முறையாக பிரஜ்வலை பாம்பு கடித்தது. தற்போது அவன் கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். தற்போது அவன் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுவரை அந்த பாம்பை பிரஜ்வலை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. இதையடுத்து விஜயகுமார்-உஷா தம்பதி, நாக தேவதைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளனர். 2 மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளிக்கு செல்வதற்காக தர்மராஜ் புறப்பட்டுக் கொண்டு இருந்தான்.
    • டாக்டரிடம் காண்பிக்கவே பாம்பை கையில் எடுத்து வந்ததாக சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த பழைய கன்னிவாடி கே. குரும்பபட்டியை சேர்ந்தவர் செல்வம். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தர்மராஜ் (வயது 8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக தர்மராஜ் புறப்பட்டுக் கொண்டு இருந்தான். அப்போது வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு சிறுவனின் கால் கட்டை விரலில் கடித்தது. இதனால் சிறுவன் கூச்சலிட்டான். மகனின் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை செல்வம் 4 அடியில் நல்லபாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அந்த பாம்பை அடித்து கையோடு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மகனுடன் சிகிச்சைக்கு வந்தார். இதனை பார்த்ததும் ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து சிறுவன் தர்மராஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது மகனை கடித்த பாம்பு எந்த வகையை சேர்ந்தது என டாக்டரிடம் காண்பிக்கவே பாம்பை கையில் எடுத்து வந்ததாக சிறுவனின் தந்தை தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 மாத பச்சிளம் குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
    • குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (23), இவரது மனைவி செல்வி(21). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் செல்வி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    தலை பிரசவத்திற்காக அவர் ஒடுகத்தூர் அருகே உள்ள ஓ.ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு வந்தார். அங்கு செல்விக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    3 மாத பச்சிளம் குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு முழுவதும் குழந்தை அருகில் தூங்கிய தாய் செல்வி, விடிந்ததும் வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே வேலை செய்து கொண்டு இருந்தார். குழந்தை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தது.

    திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. பதறிப்போன செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை நாகப்பாம்பு கடித்துவிட்டு படம் எடுத்து நின்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக குழந்தையை அவரது உறவினர்கள் மீட்டு, ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர்.

    அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. பின்னர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இரவு பாலாஜி குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கினார்.
    • பாலாஜி, அவரது மகள் விகிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி(வயது30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு 2 மகன்களும், விகிதா(7) என்ற மகளும் உள்ளனர். விகிதா அருகில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாலாஜி குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வீட்டுக்குள் வந்த பாம்பு ஒன்று பாலாஜியையும், அவரது மகள் விகிதாவையும் கடித்து சென்று விட்டது.

    இதில் விஷம் ஏறியதில் அவர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கினர். இன்று அதிகாலை ராதா மற்றும் அவரது மகன்கள் எழுந்தபோது பாலாஜியும், விகிதாவும் பாம்பு கடித்ததில் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்களை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு பாலாஜி, அவரது மகள் விகிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நாகலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து கணேசன் தனது 5 மகள்களையும் பராமரித்து வளர்த்து வந்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி (வயது35). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, ஷிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்த நாகலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஊராட்சி செயலாளருக்கும், இவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் நாகலட்சுமி இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

    மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து கணேசன் தனது 5 மகள்களையும் பராமரித்து வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவர் தோட்ட வேலைக்கு சென்று விட்டார். 2-வது மகள் விஜயதர்ஷினி (வயது9), 4-வது மகள் சண்முகப்பிரியா(4) ஆகிய 2 பேர் வீட்டில் இருந்தனர்.

    அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த விஷப்பாம்பு 2 பேரையும் கடித்தது. சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயதர்ஷினி மற்றும் சண்முகப்பிரியாவை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி சிறுமி சண்முகப்பிரியா பரிதாபமாக இறந்தார். மற்றொரு சிறுமி விஜயதர்ஷினிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் தற்கொலை செய்து கொண்ட சில மாதங்களில் மகள் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பாம்பு பிடிக்க சென்றபோது விபரீதம்
    • திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை அடுத்த கருப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோழனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நாகப் பாம்பு இருப்பதாக திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன், சிறப்பு நிலைய அலுவலர் முருகன் மற்றும் வீரர்கள் சென்று பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தீயணைப்பு வீரர் சரவணன் (வயது 26) என்பவரை பாம்பு கடித்து விட்டது. சரவணன் வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது.

    அவரை சகதீயணைப்பு வீரர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சத்தியம்மா சிங்கம் பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார்.
    • மாணவி கழிப்பறைக்கு செல்லும் போது அங்கிருந்த கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு சத்தியம்மாவை கடித்தது.

    கரூர்

    குளித்தலை அடுத்த, பாலவிடுதி சிங்கம்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மனைவி போதும்பொன்னு. இவர்களுக்கு, சத்தியம்மா (வயது 10) என்ற மகள் உள்ளார். இவர் சிங்கம் பட்டியில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளியில் படித்து வந்தார். காலை வழக்கம்போல் சக்தியம்மா பள்ளிக்கு சென்றார்.

    பின் மாணவி கழிப்பறைக்கு செல்லும் போது அங்கிருந்த கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு சத்தியம்மாவை கடித்தது. இதனால் வலி தாங்கமுடியாமல், சத்தியம்மா வகுப்பறைக்கு ஓடி வந்தார்.

    இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் மோகன்ராஜ், மாணவியின் பெற்றோ ருக்கு தகவலளித்தார். பின் சந்தியம்மாவை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவி சந்தியம்மாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டி கிணத்து மேட்டிற்கு மோட்டார் போட சென்ற விவசாயியை பாம்பு கடித்தது.
    • இந்த சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த காமராஜ் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (47). விவசாயி. சண்முகசுந்தரம் சம்பவத்தன்று சிறுவன்காட்டுவலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டி கிணத்து மேட்டிற்கு மோட்டார் போட சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.

    இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×