என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணியில் ஓட்டலில் சாப்பிட்ட 24 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (46). அரிசி ஆலை தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி (40). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு லோஷினி (10) என்ற மகளும், சரண் (14) என்ற மகனும் உள்ளனர்.

    இவர்கள் 4 பேரும் கடந்த 8-ம் தேதி இரவு ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அசைவ ஓட்டலில் தந்தூரி உணவு வகைகளைச் சாப்பிட்டுள்ளனர்.

    அதை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களுக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டு ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சை பெற்றனர். அதன்பின், சிறுமி லோஷினிக்கு உடல் நலம் பாதிப்பு அதிகமானதால் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    மேலும், அதே ஓட்டலில் சாப்பிட்ட 24 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சம்பவம் நடந்த அசைவ ஓட்டலில் உணவு மாதிரிகளைச் சேகரித்து விசாரணை நடத்தினார். ஆரணி நகர போலீசார் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஓட்டலின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 2 உணவகங்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் கைலேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் செங்கம் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு வகைகள் விற்பனை செய்யும் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 2 உணவகங்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் நகரில் உணவு வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் உணவு பொருட்கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறுவதற்கு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெற மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தாசில்தார் சுரேஷ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ்குமார் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெறுவதற்கான 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். இதில் வருவாய் ஆய்வாளர்கள் ரேவதி, வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் கோபால், அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை நகர கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் நன்றி கூறினார்.

    கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் நேற்று பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. ஆரணி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து 116 கோரிக்கை மனுக்களை பெற்றார். ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் கோட்டீஸ்வரி குமரவேல், கீதாசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் கணபதி வரவேற்றார்.

    இதில் அய்யம்பாளையம் தலைவர் கற்பகம் சேகர், பாளையஏகாம்பர நல்லூர் தலைவர் சித்ரா ஏழுமலை, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

    கீழ்பென்னாத்தூர் தாலுகா சோமாசிபாடி வருவாய் உள்வட்டத்தைச் சேர்ந்த 25 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் வழங்கப்படும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகைக்கான மனுக்கள் பெறும் முகாம் சோமாசிபாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தாசில்தார் வைதேகி, வட்ட வழங்கல் அலுவலர் சீத்தாராமன், வருவாய் ஆய்வாளர் ரதிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சோமாசிபாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், அரசுஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரயு காயத்ரி, பொலக்குணம் ஊராட்சி மன்ற தலைவர் குப்புஜெயக்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கத்தை அடுத்த இறையூர் கிராமத்தில் நடந்த முகாமில் இறையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட 26 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. செங்கம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கினார். தாசில்தார் மனோகரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

    முகாமில் பல்வேறு உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் குணாநிதி, கிருஷ்ணன், ராஜாராம் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பலர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள பெரிய கொழப்பலூர் பிர்க்காவில் நடந்த முகாமுக்கு கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஹரிதாஸ் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்

    இதில் 23 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு 64 முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான மனுக்கள் மற்றும் முதல்-அமைச்சரின் கல்வி திட்டம், உழவர் பாதுகாப்புதிட்டம் பெறுவதற்கான மனுக்கள் கொடுத்தனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்ரவிக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ரகுராமன், ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தில் உள்ள 11 தாலுகா அலுவலகங்கள் மூலம் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
    ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 101 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    ஆரணி:

    தமிழ்நாட்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் த.சம்பத் மேற்பார்வையில், ஆரணி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜ், நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தில்குமார், நகராட்சி சித்த மருத்துவர் சங்கரீஸ்வரி ஆகியோர் மேற்பார்வையில் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 101 நபர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பில் 10 மடங்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
    திருவண்ணாமலை:

    உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு அரசாணை படி சந்தை மதிப்பில் 10 மடங்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் உதயகுமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் கடும் ஆட்சேபனைகளுக்கு இடையே அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர திட்டங்களுக்கு 100 சதவீதம் கருணைத் தொகை வழங்கிட வேண்டும். வீடு, போர்வேல், நிரந்தர கட்டுமானங்களுக்கு சட்டப்படியான இழப்பீடு வழங்கிட வேண்டும். உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் சட்டப்படியான இழப்பீடுகளை வழங்க வேண்டும்.

    அனைத்து வகையான இழப்பீடுகளையும் சட்டப்படி விவசாயிகளின் வங்கி கணக்கில் முழுமையாக செலுத்திய பின் வேலையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், சட்ட ஆலோசகர் அபிராமன், விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பிரகலநாதன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தையொட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, ரமேஷ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

    ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்ற ஏற்பட்டதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த, கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 29-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார்.

    இதில் அவருக்கு கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 5 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ குழுவினர் பள்ளிக்கு சென்று அங்கு அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்தனர்.

    இதில் 2 பெண் ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் பணிபுரியும் 15 ஆசிரியர்கள் மற்றும் 150 மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து பள்ளிக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளியை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    போளூர் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரைப்பூண்டி செய்யாற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த பாக்மார்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்ற வாலிபரை கைது செய்து, மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியரின் சொந்த ஊரான வடமாத்தூர் கிராமம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறுகிறது.

    அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்ட முதல் 3 நாட்களுக்கு அறிகுறி மற்றும் பாதிப்பு ஆகிய காரணங்களால், சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது.

    இதையடுத்து அந்த ஆசிரியர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும், ஆசிரியர் சென்று வந்த வகுப்பறை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், பள்ளி முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 50 பேருக்கும், அவரது குடும்பத்தில் உள்ள 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 4-ந் தேதி உறுதியானது.

    இதையடுத்து அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஆசிரியரின் மனைவி, 3 வயது மகள், 8 மாத ஆண் குழந்தை மற்றும் 2 பேர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது.

    அவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஆசிரியரின் சொந்த ஊரான வடமாத்தூர் கிராமத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று தெரியவரும்.

    அதனடிப்படையில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியை மூட பரிந்துரைக்கப்படும்” என தெரிவித்தார்.



    கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    கலசப்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தொற்று உறுதியானதை தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவ குழுவினர் பள்ளியில் ஆசிரியர் உடன் பணிபுரிந்த சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்தனர்.

    இதில் பரிசோதனை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

    ஆரணி அருகே கணவனுடன் சென்ற கர்ப்பிணி பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. தனியார் பள்ளி பஸ் டிரைவர். இவருடைய மனைவி பிரியா (வயது 22). இவர்களுக்கு சுஜித் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். பாபு தனது மனைவி பிரியா மற்றும் மகன் சுஜித் ஆகியோருடன் நேற்று வேலூர் - ஆரணி நெடுஞ்சாலையில் குண்ணத்தூர் கூட்ரோடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினரின் நிகழ்ச்சிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    குண்ணத்தூர் கூட்ரோடு அருகே தற்போது சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதனால் அங்கிருந்த வேகத்தடையில் இருந்த எதிரொலிப்பான் தெரிவதில்லை. இதனால் பாபு சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து பிரியா கீழே விழுந்துள்ளார்.

    அப்போது வேலூரிலிருந்து ஆரணி நோக்கி சென்ற அரசு பஸ்சின் பின்சக்கரத்தில் பிரியா சிக்கினார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரியாவின் உடலை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே சின்ன ஏழாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மனைவி ஹேமலதா. இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு கோட்டீஸ்வரி (வயது 17), சுமித்ரா (14) என 2 மகள்கள்.

    கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஹேமலதா அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பெற்றோருக்கு இடையே தகராறு ஏற்படுவதால் மன உளைச்சலில் இருந்த கோட்டீஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    செய்யாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    செய்யாறு தாலுகா திருவேங்கடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி சசிரேகா, மகள் சண்முகப்பிரியா உள்ளனர். ராம்குமார் செய்யாறு டவுன் பகுதியில் ஆற்காடு சாலையில் பேப்பர் மற்றும் எழுதுப்பொருள் விற்பனை கடை நடத்தி வந்தார்.

    நேற்று கடைக்கு வந்து மீண்டும் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செய்யாறு- காஞ்சீபுரம் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் சென்றபோது, அந்த வழியாக காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி வந்த ஒரு தனியார் பஸ் திடீரென எதிரே வந்த ராம்குமாரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் பலத்த காயம் அடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    செய்யாறு போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பியோடிய பஸ் டிரைவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோலை செய்யாறு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
    ×