என் மலர்
திருவண்ணாமலை
செங்கம்:
செங்கம் அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது24) சமையல் மாஸ்டராக வெளியூரில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான வீரானந்தல் கிராமத்திற்கு வந்தார்.
நேற்று முத்தனூர் சாலையில் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வெங்கடேசன் சென்று கொண்டு இருந்தார். அப்போது உண்ணாமலை பாளையம் அருகே வெங்கடேசனை வழிமறித்த சிலர் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புதுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீஸ் விசாரணையில் முன்விரோதம் காரணமாக வெங்கடேசன் படுகொலை செய்யப்பட்டது கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட புதுப்பாளையம் ஜி.என்பாளையம் பகுதியை சேர்ந்த மதுசூதனன் (33), சுரேஷ் (30), வல்லரசு (26), ஏழுமலை (24) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வசந்த் மற்றும் வினோத் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து புதுப்பாளையம் நகரில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூரில் இருந்து திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் வேலை செய்யும் 9 போலீசாரை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று இன்று காலை திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது.
கண்ணமங்கலம் அடுத்த அழகு சேனை ஏரிக்கரை அருகே போலீஸ் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பள்ளத்தில் இறங்காமல் இருக்க டிரைவர் வேனை வலது பக்கம் திருப்பினார்.
அப்போது செங்கத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த காரும் போலீஸ்வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் போலீஸ் வேன் கவிழ்ந்தது.
சாலையோரம் இருந்த விநாயகர் கோவில் மீது கார் மோதி நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி செங்கத்தை சேர்ந்த சரஸ்வதி (வயது53) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் கார் டிரைவர் செவ்வந்தி, காரில் வந்த ராமு, சுந்தர் மற்றும் வேனில் வந்த 9 போலீசார் காயத்துடன் உயிர் தப்பினர்.
அருகில் இருந்தவர்கள் கார் மற்றும் வேனில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் புதிய காலனியை சேர்ந்தவர் காளி. அவரது மகன் விஜயகுமார் (வயது 38). இவர், நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு சென்றார். பின்னர் அங்கு மக்காச்சோளம் மூட்டையை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்.
கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கூட்ரோடு பகுதியில் வந்த போது, அந்த வழியாக வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் இறந்த விஜயகுமாருக்கு பிரியங்கா (26) என்ற மனைவியும், சங்கீதா (3) என்ற மகளும், அஸ்வின் என்ற மகனும் உள்ளனர்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் -அனுராதா ஆகியோரின் மகள் ஜெயஹரணிக்கும், தஞ்சாவூர் கிருஷ்ணசாமி வாண்டையார் -ராஜேஸ்வரி அம்மாள் மகன் ராமநாதன் துளசி ஐயா வாண்டையாருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் சசிகலா, மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஓம் சக்தி நகர் பராசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் அருகில் கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. மாப்பிள்ளை அழைப்பின்போது வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த திருமண நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உறவினர்கள் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு ஆசிரியர்நகர் பகுதியில் வசிப்பவர் அருள்மேரி வசந்தி (வயது 47). இவர், சேத்துப்பட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு பணிக்குச் சென்று விட்டார்.
மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது, உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரம், 20 பவுன் நகையை காணவில்லை. பட்டப்பகலில் யாரோ நகை, பணத்தைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆசிரியை அருள்மேரி வசந்தி சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தா்ா. துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், முருகன் மற்றும் போலீசார் ஆசிரியை வீட்டுக்கு சென்று விசாரித்தனர். திருவண்ணாமலையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை பதிவு செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பந்த காலுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் பிச்சகமிராசுகள் ரகுராமன் மற்றும் விஜயகுமார் மங்கள வாத்தியங்கள் முழங்க அண்ணாமலையார் கோவிலுக்கு உரித்தான ஒடல் வாத்தியங்கள் இசைக்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பந்தக்காலை சுமந்து வந்து ராஜகோபுரம் எதிரே உள்ள மைதானத்தில் நட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாட வீதியில் நிறுத்தப்பட்டுள்ள தேர்களுக்கு விசேஷ பூஜை செய்யப்பட்டு பின்பு பந்தகாலுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இணை ஆணையர் அசோக்குமார், கண்காணிப்பாளர் பத்ராச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி. டி.வி தினகரன், அனுராதா தினகரன் தம்பதியரின் மகள் ஜெயஹரிணி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார்- ராஜேஸ்வரி அம்மாள் ஆகியோரின் மகன் ராமநாதன் துளசி ஐயா வாண்டையார் திருமணம் திருவண்ணாமலையில் நாளை வியாழக்கிழமை நடக்கிறது.
இதையொட்டி திருமண நிச்சயதார்த்தம் இன்று மாலை 6.50 மணி முதல் 7.50 மணி வரை திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இதனை தொடர்ந்து மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் அபர்ணா ஓட்டலில் இருந்து வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் வரை நடக்கிறது.
நாளை காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி புதிய மேடையில் திருமணம் நடைபெறுகிறது.
இதில் சசிகலா மற்றும் உறவினர்கள் பாஸ்கரன், சுதாகரன், ஸ்ரீதளாதேவி பாஸ்கரன், சிவக்குமார், வெங்கடேஷ், மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
ஏற்பாடுகளை விவேகானந்தம் முனையரையர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
திருமண விழாவையொட்டி திருவண்ணாமலை நகரில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போடும் மாபெரும் முகாம் நடந்தது. போளூரில் உள்ள 18 வார்டுகளில் 12 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு, முதல் மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசியாக 1,434 பேருக்கு செலுத்தப்பட்டது.
இதில் போளூரை சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர் மஞ்சுளா விவேகமாக செயல்பட்டு 200 பேரை முகாம்களுக்கு அழைத்து வந்து கொரோனா தடுப்பூசி போட வைத்து அனுப்பி வைத்தார். அவரின் சேவையை பாராட்டி பேரூராட்சி செயல் அலுவலர் முஹம்மது ரிஜ்வான் குக்கர் பரிசு வழங்கினார்.
அப்போது பேரூராட்சி தலைமை எழுத்தர் முகமது ஈசாக், போளூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ஜி.சண்முகம் உடனிருந்து பாராட்டினார்கள்.






