என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • உபரிநீர் திறக்க ஏற்பாடு
    • 5 கிமீ தூரம் நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு

    கண்ணமங்கலம்:

    கடந்த வாரம் முதல் பெய்து வரும் தொடர் மழையால் படவேடு பகுதியில் உள்ள தாமரை ஏரி கடல் போல நிரம்பி வருகிறது. 25 ஆண்டுகளாக தாமரை ஏரி நிரம்பாமல் தண்ணீர் வரத்து கால்வாயில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தது.

    இந்த நிலையில் புதூர் பகுதியில் தாமரை ஏரிக்கு வரும் கால்வாயை சீரமைத்து வழி நெடுகிலும் சுமார் 5 கிமீ தூரம் நீர்வரத்து கால்வாயை ஜேசிபி மூலம் சீரமைத்து கடந்த ஆண்டு உபரிநீர் திறக்கப்பட்டது.

    அப்போது கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் சிறப்பு பூஜை செய்து, 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து இந்த ஆண்டும் பெய்த மழையில் தாமரை ஏரிக்கு வரும் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் பேரில், 2-வது ஆண்டாக தாமரை ஏரியில் கடல் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    படவேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் உள்பட விவசாயிகள் சார்பில் விரைவில் சிறப்பு பூஜை செய்து இந்த ஆண்டும் உபரிநீர் திறக்கப்படஉள்ளது என்று படவேடு பகுதியில் வசிக்கும் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

    • மனவளர்ச்சி குன்றிய சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் நடவடிக்கை
    • திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பாகாயத் தோட்ட தெரு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 56), ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி 8 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய, வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி வாதாடினார். இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

    அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குணசேகரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கார்த்திகை தீப விழா தொடக்க நிகழ்ச்சியாக நடக்கிறது
    • நாளை பிடாரி அம்மன் உற்சவம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு இன்று துர்க்கை அம்மன் உற்சவம் நடக்கிறது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது.

    சாமி உலா, தேரோட்டம் ஆகியவை கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் வழக்கம் போல் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.

    முதல் நாள் விழாவின் போது காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையும் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.

    மற்ற நாட்களில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும். தொடர்ந்து விழாவின் 7-ம் நாளான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வங்கள் உற்சவம் நடைபெறும். அதன்படி இன்று துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி இரவு திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காமதேனு வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும். தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் பிடாரி அம்மன் உற்சவம் நடைபெறும்.

    அன்று அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 26-ந் தேதி (சனிக்கிழமை) மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாக னத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    இவ்விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • வெற்றி பெரும் 3 பேருக்கு கலெக்டர் முருகேஷ் பரிசு வழங்குகிறார்
    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தூய்மை மற்றும் பாதுகாப்பான தீபம்-2022 என்ற தலைப்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு 'மீம்ஸ்' போட்டி திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் நடைபெற உள்ளது.

    தீபத்தின் போது பொதுமக்கள் குற்ற முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளான குற்ற விழிப்பு ணர்வு, நகை பறிப்பு, பிக்பாக்கெட், குழந்தை கடத்தல், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சி னைகள், மூத்த குடிமக்களுக்கான உதவி, தீயணைப்பு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தூய்மை, பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர் தொடர்பான 'மீம்ஸ்'கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயார் செய்து தங்களுடைய பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களை இணைத்து smctvmpolice@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    சிறந்த 'மீம்ஸ்'களாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 பேருக்கு கலெக்டர் முருகேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோரால் நினைவு பரிசு மற்றும் வெகுமதி வழங்கப்படும்.

    மேலும் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் 'மீம்ஸ்'கள் மகா தீப திருவிழாவின் போது பொதுமக்களிடையே திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்களுடைய 'மீம்ஸ்'களை வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

    • கலெக்டர் தகவல்
    • தீபத் திருவிழாவை முன்னிட்டு நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இவ்விழாவை முன்னிட்டு திருவண்ணா மலை நகர பகுதிக்கு அருகில் செங் கம் சாலை, காமராஜர் சிலை அருகில், வேங்கிக்கால் ஏரிக் கரை, வேங்கிக்கால் புறவழிச்சாலை பைபாஸ், நல்லவன் பாளையம் ஆகிய பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைகள், திருவண்ணாமலை நகரத்தின் உள்பகுதியில் ஓட்டல்களில் இயங்கி வரும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் வேங்கிக்காலில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி ஆகிய உரிமம் பெற்ற மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 7-ந் தேதி (புதன்கிழமை) வரை 6 நாட்களுக்கு மதுவிற்பனை நடைபெறாமல் மூடி வைக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    செங்கம்:

    செங்கம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்ட கிராம பகுதிகளில் காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இடைவிடாமல் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் காலை பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலக வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் "பெண் கல்வியும் பாதுகாப்பும்" என்ற தலைப்பில் மாணவிகளுக்கு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமை தாங்கினார்.

    ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே.ஜி‌.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக, தெள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல் ராஜ் கலந்துகொண்டு அவர் கூறும் போது:-

    மாணவிகள் ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும் எனவும், வெளி இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளை கவனமுடன் கையாள வேண்டும் என்று பேசினார்.

    கலாம் பவுண்டேஷன் நிர்வாகி கேசவராஜ், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் சதானந்தன் ஆகியோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். மேலும் மாணவிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக இசையாசிரியர் சமூக விழிப்புணர்வு பாடல்களை பாடினார். பின்னர் பல்வேறு போட்டிகள் நடைபெற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இறுதியில் பட்டதாரி ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.

    • வேலைக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 37). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி நர்மதா இவர் வழூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 1 வயதில் இசை செல்வன் என்ற குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சசிகுமார் நேற்று காலை வேலைக்கு சென்று இருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு செல்வதற்காக தனது பைக்கில் ஆரணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே லாரி சசிகுமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சசிகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

    இதையடுத்து தகவல் அறிந்ததும் வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • பாம்பு நடமாட்டம் உள்ள பகுதிகளில் வேலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த அரை யாளம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தின்படி பணி தள பொறுப்பாளர் சரளா மேற்பார்வையில் ஊராட்சி மன்ற தலைவர் பழனி முன் னிலையில் 120 பேருக்கு வேலை வழங்கப்பட்டது.

    அவர்கள் அனைவரும் நேற்று பெரிய ஏரியின் வழியாக பாசன கால்வாய் செல்லும் பாதையை சீரமைப்புக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தனலட்சுமி (வயது 55) என்பவரை பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது, உடனடியாக அவரை தச்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவம னைக்கு அழைத்து சென்ற னர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அனைவரும் ஒன்று திரண்டு அரையாளம் கிராமத்தில் உள்ள ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர்.

    தற்போது மழை பெய்து வரும் காரணத்தினால் ஏரி கால்வாய் பகுதிகளில் அதிகளவில் பாம்பு நடமாட்டம் உள்ளது. இந்த பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களை வேலை செய்ய உத்தரவிட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தும் ஆரணி தாலுகாபோலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜன், சப்-இன்ஸ் சாலை மறியலில் ஈடுடட்ட பொதுமக்களிடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நந் தினி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி, துணைத்தலைவர் புவனேஸ் வரி பிரபாகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனால் அக்கிராமத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. 100 நாள் வேலை திட்டத் தில் பணி செய்யும் இடத்தில் ஊராட்சி சார்பில் அவசர மருத்துவ கிட் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் ஏன் வைத்திருக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

    • வந்தவாசியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நடவடிக்கை
    • சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை கோவிலில் சமூக விரோதிகள் அதிகமாக நடமாட்டம் இருப்பதால் போலீசா ர் தடுப்பு வேலி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    வெண்குன்றம் கிராமத்தில் மிகப்பெரிய மலை உள்ளது இந்த மலையில் 1440 அடி உயரத்தில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது. இந்த மலை மீது வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கார்த்திகை மாதம் தீபம் அன்று மலை ஏற்றுவது வழக்கம்.

    புகழ் பெற்ற இந்த மலையில் உள்ள ஸ்ரீ தவளகிரீஸ்வரர் கோவிலை கடந்த ஆகஸ்டு மாதம் சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் தற்போது இந்த மலையில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் மலையின் அடிவாரத்தில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களை தீவிரமாக சோதனை செய்த பிறகு அவர்களுடைய முழு விலாசத்தை பெற்றுக் கொண்ட பிறகு தான் மலையின் மீது ஏற அனுமதித்து வருகின்றனர்.

    கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த நிலையில் தற்போது வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலையின் அடிவாரத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டியை முன்னிட்டு நடந்தது
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசியில் மாநில அளவிலான தடகள போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெறுவதை யொட்டி விழிப்புணர்வு ஒலிம்பிக் சுடர் பேரணி வந்தவாசியில் நடைபெற்றது.

    பேரணியை மாவட்ட துணை போலி சூப்பிரண்டு கார்த்திக் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் திருவண்ணாமலையில் மாநில அளவிலான தடகளப் போட்டி நடைபெற உள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் ஒலிம்பிக் சுடர் கையில் ஏந்தி கொண்டு பேரணியாக சென்றனர்.

    இந்தப் பேரணி வந்தவாசி 5 கண் பாலம் அருகே இருந்து தொடங்கி தேரடி பகுதி பஜார் சாலை பழைய பஸ் நிலையம் வழியாக சென்று அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சென்று முடிவடைந்தது.

    இந்தப் பேரணியில் வந்தவாசி சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம்.
    • கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நேற்று குபேர கிரிவலம் நடைபெற்றது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்துள்ளது. 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன. கிரிவலப்பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் என்ற வழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார் என்று கூறப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் கிரிவலப் பாதையில் உள்ள 7-வது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அதன்படி கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நேற்று குபேர கிரிவலம் நடைபெற்றது. குபேர கிரிவலம் செல்ல மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உகந்தநேரம் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குபேர லிங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றனர்.

    மாலை 6 மணியளவில் குபேர லிங்க கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவிலும் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.

    குபேர கிரிவலத்தை யொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×