search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X

    குபேர லிங்க கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க கோவிலில் குவிந்த பக்தர்கள்

    • குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம்.
    • கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நேற்று குபேர கிரிவலம் நடைபெற்றது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்துள்ளது. 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன. கிரிவலப்பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் என்ற வழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார் என்று கூறப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் கிரிவலப் பாதையில் உள்ள 7-வது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அதன்படி கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நேற்று குபேர கிரிவலம் நடைபெற்றது. குபேர கிரிவலம் செல்ல மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உகந்தநேரம் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குபேர லிங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றனர்.

    மாலை 6 மணியளவில் குபேர லிங்க கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவிலும் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.

    குபேர கிரிவலத்தை யொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×