என் மலர்
உள்ளூர் செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு 20 ஆண்டு ஜெயில்
- மனவளர்ச்சி குன்றிய சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் நடவடிக்கை
- திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பாகாயத் தோட்ட தெரு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 56), ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி 8 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய, வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி வாதாடினார். இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.
அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குணசேகரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.






