என் மலர்
திருவள்ளூர்
- இருசக்கர வாகனங்கள், லாரிகள், படகுகள் மூலம் எடுத்து செல்லுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொதுப் பணித்துறை, காவல்துறை, வனத்துறை, போக்கு வரத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரியில் கனிம வளம் குறித்த ஆய்வு கூட்டம் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் தாசில்தார் மதியழகன் முன்னிலையில் நடை பெற்றது.
கூட்டத்தில் அனுமதிக்கப்படாமல் இரவு நேரங்களில் சவுடு மண் மற்றும் ஆற்று மணல், கடல் மணல் ஆகிய கனிம வளங்களை இருசக்கர வாகனங்கள், லாரிகள், படகுகள் மூலம் எடுத்து செல்லுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விசயத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்னேரி தாசில்தார் மதியழகன் தெரிவித்தார். அதன் பின் திருவிழாக்கள் மற்றும் இறுதி ஊர்வலம் நடைபெறும் போது வாகன ஓட்டிகளுக்கு பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு அரசு அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் துணை தாசில்தார் செந்தில், வருவாய் துறை, பொதுப் பணித்துறை, காவல்துறை, வனத்துறை, போக்கு வரத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
- குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
திருவள்ளூர்:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் திருவள்ளூரில் 63 இடங்களிலும், திருத்தணி 98, ஊத்துக்கோட்டை 204, கும்மிடிப்பூண்டி 67, பொன்னேரி 20 உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 452 சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தெரிவித்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர், திருத்தணி, வெங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் திருவள்ளூர் - ஆவடி சாலையில் காக்களூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது விநாயகர் சிலையில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகின்றனவா என ஆய்வு செய்தனர்.
- சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் சொந்த ஊருக்கு படையெடுத்தனர்.
- சென்னையில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் வெளியூர் புறப்பட்டு சென்றனர்.
போரூர்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு இன்று, நாளை சேர்த்து மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் சொந்த ஊருக்கு படையெடுத்தனர்.
பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
முக்கிய ரெயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்தது. ஆம்னி பஸ்களில் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களில் பயணம் செய்யவே தற்போது அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று இரவு முதலே கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்த பயணிகளை தவிர்த்து கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிட்டவர்கள் என ஏராளமானோர் ஒரே நேரத்தில் தங்களது குடும்பத்துடன் குவிந்ததால் பஸ் நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் வசதிக்காக வழக்கமாக தினசரி இயக்கப்படும் 2200 பஸ்களுடன் நேற்று கூடுதலாக 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
இதன்மூலம் சென்னையில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் வெளியூர் புறப்பட்டு சென்றனர். இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக மேலும் 850 சிறப்பு பஸ்கள் வரை இயக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எழும்பூர் ரெயில் நிலையம் வழக்கத்தை விட பயணிகள் கூட்டத்தால் திணறியது. தாம்பரம், பெருங்களத்தூரில் அரசு பஸ்களில் செல்லவும் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாரடைப்பு காரணமாக தியாகராஜன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆர்.கே. பேட்டை அடுத்த வங்கனூர் காலனியில் வசித்தவர் தியாகராஜன் (வயது 47). இவர் திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலன் மற்றும் மாணவர் விடுதியில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இவரோடு விடுதியின் சமையலர் கோபிநாத் என்பவரும் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை 4 மணி அளவில் கழிவறைக்கு சென்ற தியாகராஜன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. அறையை விட்டு வெளியே வந்து சமையலர் கோபிநாத் பார்த்த போது வராண்டாவில் தியாகராஜன் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத் விடுதி அதிகாரிகள் மற்றும் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் பிணத்தைக் கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாரடைப்பு காரணமாக தியாகராஜன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்து போன இரவு காவலர் தியாகராஜனுக்கு பன்னீர் செல்வி என்ற மனைவியும் தனுஸ்ரீ, கோகுல்ராஜ் ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.
- வெள்ளம்பாக்கம், கல்பாக்கம் பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது.
- பொன்னேரி ரெயில்வே சாலையில் கழிவுநீர் கால்வாய் முழுவதும் நிரம்பி சாலை சமமாக காணப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம், தச்சூர், திருப்பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது. காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மீஞ்சூரை அடுத்த வெள்ளம்பாக்கத்தில் உயர் அழுத்த மின் கம்பம் சாய்ந்து விழுந்தது.
இதனால் வெள்ளம்பாக்கம், கல்பாக்கம் பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது. அதேபோன்று மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு பகுதிகளில் இரவில் மின்சாரம் விட்டுவிட்டு சப்ளை செய்யப்பட்டது.
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் தண்ணீர் தேங்கிய நிலையில் பொதுமக்கள் போக்குவரத்திற்கு பெரும் சிரமப்பட்டனர்.
பொன்னேரி ரெயில்வே சாலையில் கழிவுநீர் கால்வாய் முழுவதும் நிரம்பி சாலை சமமாக காணப்பட்டது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. காரில் 4 பேர் இருந்தனர்.
திடீரென அந்த கார் கால்வாயில் கவிழ்ந்து சேற்றில் சிக்கியது. அதில் இருந்த 4 பேரும் அலறினார்கள். சத்தம் கேட்டு அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடி வந்து காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் காரும் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- காவலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த காட்டூரை சேர்ந்தவர் முரளி (வயது 48). இவர் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடியிருப்பின் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இவருடன் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பாக்கம் பகுதி சேர்ந்த உதயன் (42) என்பவரும் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு இவர்கள் 2 பேரும் பணியில் இருந்தனர்.
அப்போது அவர்களுக்கு இடையே திடீர் என வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி கைகலப்பானது. அப்போது ஆத்திரம் அடைந்த உதயன் கட்டையால் முரளியை சரமாரியாக தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய உதயன் காட்டூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
காட்டூர் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட முரளியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முரளிக்கு கவுரி என்ற மனைவியும் தர்ணிகா (7)என்ற பெண் குழந்தையும் உள்ளது.
காவலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையை சேர்ந்த ரவணைய்யா நாயுடு என்பவரின் மனைவி மூதாட்டி புள்ளம்மாள் (வயது 70). இவர், கடந்த மாதம் 11-ந்தேதி வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு வீட்டிற்குள் செல்ல முயன்றபோது அங்கு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன், அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றான்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த வாலிபர் ஜான்பாண்டியன் (37) என்பவரை கவரைப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000 த்திற்கு மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்வதுண்டு இந்நிலையில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்டசுற்று வட்டார பகுதிகளில் கொலை, தற்கொலை, சாலை விபத்து மற்றும் விஷக்கடிக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு வரும் உடல்களை பாதுகாக்க மருத்துவமனையில் இரண்டு ப்ரிசர்பாக்ஸ் மட்டுமே உள்ளன.
சில நேரங்களில் கூடுதலாக உடல்கள் வருவதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பபடுகின்றன. இதனால் உறவினர்களிடையே கடும் வாக்குவாதம், பெரும் சிரமம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில் கூடுதலாக ஃப்ரீசர் பாக்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மருத்துவமனையில் கூடுதலாக இருந்த ஃப்ரீசர் பாக்ஸ் கொண்டுவரப்பட்டு பிணவறையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமள விஸ்வநாதன் தலைமை மருத்துவர் அசோகன் மற்றும் மருத்துவ குழுவினர் பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இனி மருத்துவமனைக்கு கூடுதலாக உடற்கூறு ஆய்விற்கு சடலங்கள் வந்தால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவது தவிர்க்கப்படும் என தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
- மாணவன் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
திருவள்ளூர்:
திருவள்ளூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அந்த மாணவிக்கு திருவள்ளூர் பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் காதல் தொல்லை கொடுத்து தினமும் பின்தொடர்ந்ததாக தெரிகிறது. இதனை மாணவி கண்டித்தும் கேட்கவில்லை.
இதுபற்றி அந்த மாணவி உடன்படிக்கும் மற்ற தோழிகளிடம் கூறினார். அவர்களும் அந்த மாணவனை எச்சரித்தனர். ஆனாலும் மாணவன் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் பஸ்நிலையத்தில் நின்ற அந்த மாணவனிடம் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தோழிகள் சேர்ந்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்து திருவள்ளூர், காமராஜர் சிலை அருகே வந்து பதுங்கி நின்றார்.
ஆனாலும் அவரை மாணவிகள் விரட்டி வந்தனர். ஒரு கட்டத்தில் எங்கும் தப்பி ஓட முடியாமல் மாட்டிக்கொண்ட மாணவனை, அனைத்து மாணவிகளும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மாணவிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து போகச்செய்தனர்.
மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தொல்லை கொடுத்த மாணவரை தாக்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
- அம்மா உணவகத்தில் சப்பாத்தி மாவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
திருவொற்றியூர்:
மணலி மண்டல குழு கூட்டம் தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. உதவி கமிஷனர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் மணலியில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் 100-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சா லைகளுக்கு சீல் வைக்க வேண்டும்,அம்மா உணவகங்களில் சப்பாத்தி இல்லை. எனவே, அம்மா உணவகத்தில் சப்பாத்தி மாவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதைத்தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, மணலி பகுதியில் உரிமம் இல்லாமல் இயங்கி வரும் ரசாயன தொழிற்சாலைகள் மீது சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உட்பட 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
- கோவிலில் உள்ள உண்டியல்கள் ஒரு மாதத்துக்கு பின்னர் தேவர் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவில் 5-ம் படை வீடாக உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் ஒரு மாதத்துக்கு பின்னர் தேவர் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மொத்தம் ரூ.1கோடியே 55லட்சத்து 56 ஆயிரத்து 4 ரொக்கம், தங்கம் 960 கிராம், வெள்ளி 11 கிலோ, காணிக்கையாக கிடைத்து இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- போலீசார் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- அடுத்தடுத்து வழிப்பறி நடந்த சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி:
திருத்தணியை சேர்ந்தவர் சுரேந்தர்(34).கடம்பத்தூர் போலீஸ்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து சாதாரண உடையில் வீடுநோக்கி வந்து கொண்டு இருந்தார். திருத்தணி, அக்கயாநாயுடு தெருப்பகுதியில் வந்த போது மர்ம வாலிபர்கள் கையில் கத்தி, அரிவாளுடன் சுரேந்தரை வழிமறித்தனர். மேலும் அவர்கள் பணத்தை கொடுக்கும்படி மிரட்டினர். சுரேந்தர் தான் போலீஸ்காரர் என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் கத்தியால் அவரை வெட்டினர். பின்னர் சுரேந்தரிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்து விரட்டியடித்தனர்.
இதேபோல் அவ்வழியே வந்த கோழிக்கடை நடத்தி வரும் ஜாபர் அலி, தனியார் நிறுவன ஊழியர் தினேஷ் மேலும் 4 பேரை அடுத்தடுத்து மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டினர்.
மேலும் கத்தி முனையில் மிரட்டி அவர்களிடம் இருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்து விரட்டினர். இதில் அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் சுரேந்தர் உள்பட 3 பேர் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் விரைந்து வந்து அப்பகுதியை சுற்றி வளைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
உடனே மர்ம வாலிபர்கள் திருத்தணிகோவில் மலைப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இந்த வழிப்பறி தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சஞ்சய் உள்பட 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் இருந்து 9 கத்தி, மோட்டார் சைக்கிள் செல்போன், ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ்காரர் உள்பட 5 பேரை வெட்டி ஒரே நாளில் அடுத்தடுத்து வழிப்பறி நடந்த சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






