என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொன்னேரி பகுதியில் கன மழை: கால்வாய் நீரில் கார் சிக்கியது- 4 பேர் உயிர் தப்பினர்
- வெள்ளம்பாக்கம், கல்பாக்கம் பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது.
- பொன்னேரி ரெயில்வே சாலையில் கழிவுநீர் கால்வாய் முழுவதும் நிரம்பி சாலை சமமாக காணப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம், தச்சூர், திருப்பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது. காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மீஞ்சூரை அடுத்த வெள்ளம்பாக்கத்தில் உயர் அழுத்த மின் கம்பம் சாய்ந்து விழுந்தது.
இதனால் வெள்ளம்பாக்கம், கல்பாக்கம் பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது. அதேபோன்று மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு பகுதிகளில் இரவில் மின்சாரம் விட்டுவிட்டு சப்ளை செய்யப்பட்டது.
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் தண்ணீர் தேங்கிய நிலையில் பொதுமக்கள் போக்குவரத்திற்கு பெரும் சிரமப்பட்டனர்.
பொன்னேரி ரெயில்வே சாலையில் கழிவுநீர் கால்வாய் முழுவதும் நிரம்பி சாலை சமமாக காணப்பட்டது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. காரில் 4 பேர் இருந்தனர்.
திடீரென அந்த கார் கால்வாயில் கவிழ்ந்து சேற்றில் சிக்கியது. அதில் இருந்த 4 பேரும் அலறினார்கள். சத்தம் கேட்டு அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடி வந்து காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் காரும் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






