என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
    • நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர்.

    அம்பத்தூர்:

    முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ஜெகன்(45) என்பவர் கடந்த 5-ந்தேதி அதே பகுதியில் உள்ள அவரது மீன்கடை வாசலில் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

    ஏற்கனவே இந்த கொலை தொடர்பாக திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, கோவிலூர் பகுதியை சேர்ந்த மகேஷ் உள்பட 4 பேர் நொளம்பூர் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான மந்திரமூர்த்தியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் அ.ம.மு.க.பிரமுகர் ஜெகன் கொலை தொடர்பாக நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அம்பத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவம் அதிகரித்து உள்ளது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், விட்டல் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். அம்பத்தூரில் 3 டாஸ்மாக் பார்களை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றார். நேற்று இரவு அவர்கள் திரும்பி வந்த போது வீட்டின் வெளிப்புற கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் நகை ரூ.50 லட்சம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த வாட்ச் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அலமேலு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு பதிந்து இருந்த ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

    ராஜேஷ் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிைச காட்டி உள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள காண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அம்பத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவம் அதிகரித்து உள்ளது. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
    • டெங்கு மற்றும் காய்ச்சலுக்கான ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. சளி, இருமல், மற்றும் உடல் வலியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டு வருவதால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 70 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை 6 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். டெங்கு காய்ச்சல் மேலும் பரவ வாய்ப்பு உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனி சிகிச்சை வார்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தற்போது டெங்கு காய்ச்சலால் ஒரு சிறுமி மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் டெங்கு அறிகுறிகளோடு 37 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்த மாதிரி பரிசோதனை அனுப்பப்பட்டு உள்ளது. அவர்களது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் திலகவதி கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது, டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்தாலும், அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், 70 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும். ஓரிரு நாட்களில் காய்ச்சல் குணமாவிட்டாலும், பசி இன்மை, குமட்டல், வாந்தி, உடல்சோர்வு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், வாய், பல் ஈறு மற்றும் மூக்கில் இருந்து ரத்த கசிவு, வயிற்று வலி, மூச்சு விட சிரமம், மலம் கருப்பாக வெளியேறுதல், மயக்கம் ஏற்படுதல் என, இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால், உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு வரவும்.

    இங்கு, டெங்கு மற்றும் காய்ச்சலுக்கான ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. திருவள்ளூர் அரசு மருத்து வக்கல்லுாரி மருத்துவமனையில், டெங்கு மற்றும் காய்ச்சலை குணப்படுத்த தேவையான மருந்து, நரம்பு வழி வாயிலாக செலுத்தப்படும் மருந்து, திரவம், நிலவேம்பு கசாயம், ரத்த தட்டணுக்கள் குறைவை சரிசெய்ய, 24 மணி நேரமும் சிறப்பு பிரிவு இயங்கும். எந்த நேரத்திலும், டெங்கு பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையை அணுகலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி பழங்குடியின மக்கள் 400 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
    • தாமரை குளக்கரையில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

    பொன்னேரி:

    பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி மாநில செயலாளர் அத்திப்பட்டு அன்பாலயா சிவகுமார் தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி பழங்குடியின மக்கள் 400 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊடகப் பிரிவு தலைவர் கோகுல், கிளை தலைவர் கண்ணன், நிர்வாகி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொன்னேரி நகர செயலாளர் சிவகுமார் தலைமையில் புதிய பஸ் நிலையம் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பொன்னேரி அடுத்த டி. வி. புரத்தில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு செயலாளர் பிரபு ஏற்பாட்டில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் தாமரை குளக்கரையில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

    • மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டார்.
    • பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி 125 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. 20ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தார்களாம். எனவே, இதன் அடிப்படையில் தமிழ்நாடு பேரூராட்சிகள் கூடுதல் இயக்குனர் மலையமான்திருமுடிகாரி நேற்று இந்த பேரூராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பேருந்து நிலையம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் சுட்டிக் காட்டிய இடம் நீர் நிலைக்கு மிக அருகில் உள்ளதால் மாற்று இடம் இருந்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினாராம். இதன் பின்னர் ஆரணி பேரூராட்சியின் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டார்.

     நவீன வசதிகளுடன் கூடிய மார்க்கெட் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) லதாவுக்கு உத்தரவிட்டார். மக்கும் குப்பை, மக்காத குப்பை உள்ளிட்டவைகளை உரிய முறையில் பாதுகாப்புடன் தரம் பிரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியின் போது ஆரணி பேரூராட்சியின் செயல் அலுவலர் பாஸ்கரன், பேரூராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

    • பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
    • புயல் மழை நேரங்களிலும் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி வகுப்பு பள்ளியின் வளாகத்தில் பொன்னேரி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மாணவிகளின் மத்தியில் பேரிடர் காலத்தில் தீ தொற்று, வெள்ள அபாயம், புயல் மழை நேரங்களிலும் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது எனவும், அந்நேரங்களில் மற்றவர்களை எவ்வாறு எல்லாம் காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட பயிற்சி ஒத்திகையை செய்முறையாக செய்து காட்டி விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.

    அதேபோன்று மாணவிகளை அழைத்து செயல்முறையையும் செய்து காட்டசொல்லி விளக்கினார் இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் சக்தி நாராயண பெருமாள் கோவில் மற்றும் லட்சுமி அம்மன் கோவிலிலும் கொள்ளை நடந்து உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சென்னிவாக்கம், கிராமத்தில் தியாஞ்சி அம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச்சென்று விட்டனர். இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் சக்தி நாராயண பெருமாள் கோவில் மற்றும் லட்சுமி அம்மன் கோவிலிலும் கொள்ளை நடந்து உள்ளது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது.
    • மலைக்கோவில் முழுவதும் புதுமண ஜோடி மற்றும் திருமண கோஷ்டியினர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆவணி மாதத்தில் கடைசி சுபமுகூர்த்தம் நாளான இன்று திருத்தணி முருகன் கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

    இதனால் மலைக்கோவில் முழுவதும் புதுமண ஜோடி மற்றும் திருமண கோஷ்டியினர் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • யாக பூஜையை திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் குருக்கள் இரா.ரவி தொடங்கி வைத்தார்.
    • கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், காக்களூர் பைபாஸ் சாலையில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் 9 யாக குண்டங்களுடன் கடந்த 14-ந் தேதி முதல் 5 கால விசேஷ ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    இந்த யாக பூஜையை திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் குருக்கள் இரா.ரவி தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து கஜ பூஜை, அஸ்வ பூஜை உடன் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையுடன் நடைபெற்றது.

    இன்று காலை 9 மணி முதல் மங்கள இசையுடன் திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடந்தது. காலை 10.30 மணியளவில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் கோபுரத்தின் விமான கலசத்திற்கு குருக்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர்.

    அப்போது கோவிலை சுற்றி கூடி நின்ற திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவிலில் தொடர்ந்து 48 நாட்களுக்கு மூலமந்திர ஹோமங்களுடன் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வியாபாரிகள் நல சங்கம் ஒருங்கிணைப்பாளர் ஆர்யா சீனிவாசன், தலைவர் பி.சுரேஷ், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் அருள், தர்மலிங்கம், ரகுபதி, பக்தவச்சலம், பாலசுப்பிரமணியம், புஜ்ஜி பாபு, தசரத நாயுடு, ஜெகதீசன், பழனிபாபு, ஆர்.கருணாகரன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

    • பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.
    • புகார் விவகாரத்தில் என் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் தாங்கிக்கொள்வேன்.

    திருவள்ளூர்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். இந்த நிலையில் அவர் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    பின்னர் வீரலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், நடிகை புகார் விவகாரத்தில் என் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் தாங்கிக்கொள்வேன். வீரலட்சுமி யார் என சீமானுக்கு தெரியாதா? சீமானுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட்டம் இருக்கிறது என்றார்.

    • ஜெகன் கொலைக்கு மூளையாக செயல்பட்டது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மந்திரமூர்த்தி என்பது தெரிந்தது.
    • ரவுடி மந்திர மூர்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    சென்னை முகப்பேர் மேற்கு ரெட்டிபாளையம் பிரதான சாலையில் கடந்த 5-ந்தேதி அ.ம.மு.க. பிரமுகர் ஜெகன்(வயது 45) மர்ம கும்பலால் தனது மீன் கடையின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி அவரது மனைவி அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த நொளம்பூர் போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இது தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 2015-ம் ஆண்டு மதன் என்பவரின் கொலையில் ஆரம்பித்த இந்த சம்பவம் தொடர்ந்து வீரபாண்டியன், 2021-ம் ஆண்டு அவரது சகோதரர் ராஜேஷ் ஆகியோரை தாண்டி தற்போது ஜெகனின் கொலையில் வந்து முடிந்துள்ளது.

    இந்த நிலையில் ஜெகன் கொலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, கோவிலூர் பகுதியை சேர்ந்த மகேஷ், அறிவு என்கிற அறிவழகன், சிவா என்கிற சிவசுப்பிரமணியம், சுதாகர் ஆகிய 4 பேர் நொளம்பூர் காவல் நிலையத்தில் நள்ளிரவு சரண் அடைந்தனர்.

    அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. ஜெகன் கொலைக்கு மூளையாக செயல்பட்டது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மந்திரமூர்த்தி என்பது தெரிந்தது. அவர் ஏற்கனவே வேறொரு வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர். அதன் பேரில் நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் போலீசார் அவரை நேற்று திருச்சி சிறையில் இருந்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இதனை விசாரித்த நீதிபதி 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதனையடுத்து ரவுடி மந்திர மூர்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.
    • குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பூந்தமல்லி:

    உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கிராம சபை கூட்டம் போல நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வார்டு குழு மற்றும் பகுதி சபா நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி, பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு குமணன்சாவடி பகுதியில் பகுதி சபா கூட்டம் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பழுதான மின்கம்பங்களை சீரமைத்தல், சாலைகளை சீரமைத்தல், கழிவுநீர் மற்றும் மழை நீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், 18-வது வார்டு பகுதியை பூந்தமல்லி வட்டத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணசாமி கூட்டத்தில் பூந்தமல்லி நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, துணை தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் மற்றும் நகராட்சி அதிகாரிகள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×