search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.ம.மு.க. பிரமுகர் கொலை: பிரபல ரவுடியை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
    X

    அ.ம.மு.க. பிரமுகர் கொலை: பிரபல ரவுடியை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

    • ஜெகன் கொலைக்கு மூளையாக செயல்பட்டது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மந்திரமூர்த்தி என்பது தெரிந்தது.
    • ரவுடி மந்திர மூர்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    சென்னை முகப்பேர் மேற்கு ரெட்டிபாளையம் பிரதான சாலையில் கடந்த 5-ந்தேதி அ.ம.மு.க. பிரமுகர் ஜெகன்(வயது 45) மர்ம கும்பலால் தனது மீன் கடையின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி அவரது மனைவி அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த நொளம்பூர் போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இது தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 2015-ம் ஆண்டு மதன் என்பவரின் கொலையில் ஆரம்பித்த இந்த சம்பவம் தொடர்ந்து வீரபாண்டியன், 2021-ம் ஆண்டு அவரது சகோதரர் ராஜேஷ் ஆகியோரை தாண்டி தற்போது ஜெகனின் கொலையில் வந்து முடிந்துள்ளது.

    இந்த நிலையில் ஜெகன் கொலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, கோவிலூர் பகுதியை சேர்ந்த மகேஷ், அறிவு என்கிற அறிவழகன், சிவா என்கிற சிவசுப்பிரமணியம், சுதாகர் ஆகிய 4 பேர் நொளம்பூர் காவல் நிலையத்தில் நள்ளிரவு சரண் அடைந்தனர்.

    அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. ஜெகன் கொலைக்கு மூளையாக செயல்பட்டது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மந்திரமூர்த்தி என்பது தெரிந்தது. அவர் ஏற்கனவே வேறொரு வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர். அதன் பேரில் நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் போலீசார் அவரை நேற்று திருச்சி சிறையில் இருந்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இதனை விசாரித்த நீதிபதி 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதனையடுத்து ரவுடி மந்திர மூர்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×