என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையின் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    • சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்கள் தச்சூர் கூட்டு சாலையில் இருந்து பஞ்செட்டி சர்வீஸ் சாலை வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இணையும். இந்த சர்வீஸ் சாலையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது சென்னை, செங்குன்றம், வண்டலூர், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி, தடா, மாதர்பாக்கம், ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொன்னேரி- தச்சூர் கூட்டு சாலை அருகில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் உள்ள சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    மழைநீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் காணப்படுவதால் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி உள்ளது. இதனால் இந்த சர்வீஸ் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையின் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    சுமார் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு சர்வீஸ்சாலை படுமோசமாக உள்ளது. மேலும் இந்த சாலையில் செல்வதற்கு செங்குன்றம் சுங்கச்சாவடி மூலம் வரி வசூலும் செய்யப்படுகிறது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக வாகன ஓட்டிகள் கூறும்போது, இந்த சாலையை சீரமைக்ககோரி தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதனை கண்டித்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சாலையில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றவும், மழைநீர் கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஆயில் மில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
    • விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக சென்னை-திருப்பதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வழிபாடு நடைபெற்றது. திருவள்ளூரில்-111, திருத்தணி-121, ஊத்துக்கோட்டை-209, பொன்னேரி-46, கும்மிடிப்பூண்டி-153 என மொத்தம் 640 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.

    நேற்று முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றது.

    திருவள்ளூர் பகுதிகளில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக ஆயில் மில் பகுதிக்கு டிராக்டர் போன்ற வாகனங்களில் கொண்டு வந்தனர். பின்னர் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் அனுமதித்த குறிப்பிட்ட வழித்தடங்களில் விதிமுறைப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு கொண்டு சென்றனர்.

    திருவள்ளூர், திருப்பாச்சூர், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, எடப்பாளையம், ஈக்காடு கண்டிகை, வெங்கத்தூர், மணவாளநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஆயில் மில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

    இந்த ஊர்வல நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாவட்ட தலைவர் மு.வினோத் கண்ணா தலைமை தாங்கினார். மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டு சென்றது. இந்த ஊர்வலம் ஜே.என்.சாலை, பேருந்து நிலையம், வீரராகவர் கோவில் தேரடி, குளக்கரைச் சாலை, பஜார் வீதி, காக்களூர் சாலை வழியாக ஏரிக்கு மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஆடல் பாடல்களுடன் கொண்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து காக்களூர் ஏரியில் ஒவ்வொரு சிலையாக கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக சென்னை-திருப்பதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்த் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த மணியை கைது செய்தனர்.

    செங்குன்றம்:

    புழல் அண்ணா நினைவு நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் சரவணன் (வயது33). பெயிண்டர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணியும் (32) நண்பர்கள் ஆவர்.

    நேற்று இரவு நண்பர்கள் இருவரும் புழலில் உள்ள ஒரு கடையில் மது அருந்தினர். பின்னர் போதை அதிகமானதும் இருவரும் தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இந்தநிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மணி மீண்டும் மதுகுடிக்க நினைத்தார். இதையடுத்து அவர் நண்பர் சரவணன் வீட்டிற்கு சென்று மீண்டும் மதுகுடிக்க வருமாறு அழைத்தார். ஆனால் சரவணன் மதுகுடிக்க வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த மணி அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சரவணனின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சரவணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த மணியை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பருவ மழை காலம் தொடங்குவதற்கு முன்பாக சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு மந்தகதியில் நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதால் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ராட்சத பள்ளங்களால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 10-வது வார்டு பர்மா நகர் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு பாதாள சாக்கடை பணிகள் தோண்டப்பட்டு முடிவடைந்த நிலையில் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் அண்மையில் பெய்த மழையால் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    குழந்தைகளின் பள்ளி சீருடை அழுக்காகி பள்ளிக்கு செல்வதாகவும் வயதானவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் தவிப்பதாகவும் சேற்றில் நடந்து கால்களில் சேற்றுப்புண், தோல் வியாதி வருவதாகவும் தெருக்களில் சாலை அமைத்து தரக் கோரி வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் இந்த நிலையில் வார்டு சபை கூட்டம் 10-வது வார்டு பர்மா நகர் பகுதியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் கூட்டத்தை புறக்கணித்து திடீரென்று பர்மா தெரு சாலையில் அமர்ந்து சாலையை சீமரமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் நகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பருவ மழை காலம் தொடங்குவதற்கு முன்பாக சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி வார்டு கவுன்சிலர் வேலா கதிரவன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பலர் புதிதாக மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்தனர்.
    • ஏராளமானோர் ஒரே நேரத்தில் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 77 ஆயிரத்து 801 பேர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் செய்து இருந்தனர்.

    இதில் 2,170 பேருக்கு முதல் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. பெரும்பாலானோரின் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக தெரிகிறது.

    இதனால் அதிருப்தி அடைந்த விண்ணப்பித்து இருந்த குடும்ப தலைவிகள் ஏராமானோர் நேற்று திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு விபரங்களை கேட்டறிந்தனர். பலர் புதிதாக மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் 2-வது நாளாக திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

    தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்று அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஏராளமானோர் ஒரே நேரத்தில் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து செல்ல முயன்றனர்.

    தகவல் அறிந்ததும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நெரிசலை சரி செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மீண்டும் உரிமைத்தொகை மனு பெற்று அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பெண்கள் வந்து கொண்டே இருப்பதால் வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது.

    • ஷவர்மா சாப்பிட்ட பலரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • திருவள்ளூர் நகரில் செயல்பட்டு வரும் பாஸ்ட் புட் உணவகங்களில் திடீர் சோதனையிட்டனர்.

    திருவள்ளூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் உணவகம் ஒன்றில், 'ஷவர்மா' சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 'ஷவர்மா' சாப்பிட்ட பலரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார துறையினர் திருவள்ளூர் நகரில் செயல்பட்டு வரும் பாஸ்ட் புட் உணவகங்களில் திடீர் சோதனையிட்டனர்.

    ஜெ.என்.சாலை, சி.வி. நாயுடு சாலை உள்ளிட்ட 'ஷவர்மா' கடையில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவசங்கரன் மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு கடைக்கு நகராட்சியின் அனுமதி பெறவில்லை என்று கூறி சீல் வைத்தனர். மேலும் மூன்று கடைகளுக்கு நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    கடையில் உள்ள இறைச்சியினை உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கர் சோதனை செய்ததில் அதில் அளவுக்கு மீறி கலர் சேர்த்தும், ஏற்கனவே வேக வைக்கப்பட்ட இறைச்சியினை குளிர்சாதன பெட்டியில் வைத்ததும் கடையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரிந்தது. இதைத்தொடர்ந்து 3 கடைகளுக்கும் 'நோட்டீஸ்' அளித்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பாஸ்ட் புட் உணவகம், 'ஷவர்மா' கடைகளில் சோதனை நடைபெறும் என உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் நகராட்சி சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 55 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    ஷவர்மா மற்றும் அசைவ உணவகங்களில் நடத்திய திடீர் சோதனையில் 28 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் கெட்டுப்போன உணவு வகைகளை பறிமுதல் செய்தனர். 23 உணவகங்களில் உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. 3 உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம், சிட்கோ நகர் 46-வது தெருவை சேர்ந்தவர் பரத் (21). இவர் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் அம்பத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். பாடி மேம்பாலத்தில் வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட பரத், பாலத்தில் இருந்து கீழே உள்ள சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கு மதிய வேளை அறுசுவை உணவளிக்கும் நிகழ்ச்சி.
    • அரசு மருத்துவர் காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இசிஜி உள்ளிட்ட பொருட்கள் வேண்டுமென அரிமா சங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டூர், மீஞ்சூர், அத்திப்பட்டு, பொன்னேரி, ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் கர்ப்பிணிமார்களுக்கு பொன்னேரி அரிமா சங்கம் சார்பில் மதிய வேளையில் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. அதன் படி இந்நிகழ்வானது 100 வது வாரமாக நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கு மதிய வேளை அறுசுவை உணவளிக்கும் நிகழ்ச்சியில் அரிமா சங்க முதல் துணை மாவட்ட ஆளுநர் ரவிச்சந்திரன், இரண்டாவது துணை மாவட்ட ஆளுநர் மணி சேகர், முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ்குமார், மாவட்டத் தலைவர் சரவணன், மண்டல தலைவர் எஸ்.சரஸ்வதி, மற்றும் காட்டூர் அரசு மருத்துவர் மதுசுதர்சனன், பொன்னேரி பகுதி அரிமா சங்கத் தலைவர் ராஜா, செயலாளர் சுகுமார், பொருளாளர் கோபி, நிர்வாகிகள் வினோத், சந்திரசேகர், பிரவீன்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு மதிய வேளை அறுசுவை உணவு வழங்கினர்.

    முடிவில் அரசு மருத்துவர் காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜெனரேட்டர், இசிஜி உள்ளிட்ட பொருட்கள் வேண்டுமென அரிமா சங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.

    • வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆர்.கே.பேட்டை:

    பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 70). இவரது மனைவி எல்லம்மாள் (60). இவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க குடத்துடன் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் எல்லம்மாள் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து எல்லம்மாளின் மகன் முரளி (40) ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து எல்லம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • திருமணமாகி 2 ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த தொழுவூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகராணி (வயது33), இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாகராணி நேற்று இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாகராணியின் உடலைக் கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நாகராணியிடம் கூடுதல் வரதட்சணையாக நகை, பணம் கேட்டும், குழந்தை இல்லை என்று கூறி கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி நாகராணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சுமார்50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சம்பந்த்பபட்டவர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நாகராணியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இதுகுறித்து நாகராணியின் தாய் மேனகா செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து நாகராணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 2 ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    • சாலை வழியாக வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகிறார்கள்.
    • குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    மணலி அருகே உள்ள பொன்னேரி தேசிய நெடுஞ்சாலை எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. மேலும் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் கண்டெய்னர்களின் யார்டுகள் மணலிபுதுநகர், விச்சூர், ஆண்டார் குப்பம் உள்ளிட்ட பகுதியில் இருப்பதால் எப்போதும் இந்த சாலையில் கனரக வாகன போக்குவரத்து இருக்கும். சாலைபோக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான இந்த சாலையில் மாநகரபஸ்கள், கண்டெய்னர் லாரிகள், கார், இருசக்கர வாகனங்கள் என எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். இந்த நிலையில் மணலி எம்.எப்.எல். சந்திப்பு அருகே பொன்னேரி நெடுஞ்சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக பல்லாங்குழி போல் காட்சி அளிக்கிறது. மேலும் சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து சிதறிகிடக்கின்றன.

    இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக சாலைப்பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகிறார்கள்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பொன்னேரி நெடுஞ்சாலை இதேபோல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வப்போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதையடுத்து போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையைசீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறும்போது, எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய சாலையாக பொன்னேரி நெடுஞ்சாலை உள்ளது. கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சாலை சேதமடைந்து வருகின்றது. குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    சாலையை சீரமைப்பதற்காக வாகன வரி, சாலை வரி, என பொதுமக்கள் செலுத்துகின்றனர். அது மட்டுமின்றி சாலைகளை பராமரிப்பதற்காக சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலைகளை பராமரிப்பதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இதற்கான டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் சாலையை பராமரிக்காமல் கிடப்பில் விட்டு விடுகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.

    • கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த மே மாதம் முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்து வைத்து சென்னை குடிநீர் தேவைக்காக தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீரை அனுப்புவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த மே மாதம் முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக திருவள்ளூர் மாவடட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தற்போது பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 1030 கனஅடியாக இருந்தது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லி யன் கனஅடி. இதில் 2586 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    ஏரிக்கு மழைநீர் 650 கனஅடியும், கிருஷ்ணா தண்ணீர் வரத்து 380 கன அடியாகவும் இருந்தது. 480 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. லிங்க் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 300 கனஅடி அனுப்பப்படுகிறது.

    ×