search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லாங்குழியாக காட்சியளிக்கும் பொன்னேரி நெடுஞ்சாலை- வாகன ஓட்டிகள் கடும் அவதி
    X

    பல்லாங்குழியாக காட்சியளிக்கும் பொன்னேரி நெடுஞ்சாலை- வாகன ஓட்டிகள் கடும் அவதி

    • சாலை வழியாக வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகிறார்கள்.
    • குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    மணலி அருகே உள்ள பொன்னேரி தேசிய நெடுஞ்சாலை எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. மேலும் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் கண்டெய்னர்களின் யார்டுகள் மணலிபுதுநகர், விச்சூர், ஆண்டார் குப்பம் உள்ளிட்ட பகுதியில் இருப்பதால் எப்போதும் இந்த சாலையில் கனரக வாகன போக்குவரத்து இருக்கும். சாலைபோக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான இந்த சாலையில் மாநகரபஸ்கள், கண்டெய்னர் லாரிகள், கார், இருசக்கர வாகனங்கள் என எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். இந்த நிலையில் மணலி எம்.எப்.எல். சந்திப்பு அருகே பொன்னேரி நெடுஞ்சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக பல்லாங்குழி போல் காட்சி அளிக்கிறது. மேலும் சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து சிதறிகிடக்கின்றன.

    இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக சாலைப்பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகிறார்கள்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பொன்னேரி நெடுஞ்சாலை இதேபோல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வப்போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதையடுத்து போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையைசீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறும்போது, எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய சாலையாக பொன்னேரி நெடுஞ்சாலை உள்ளது. கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சாலை சேதமடைந்து வருகின்றது. குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    சாலையை சீரமைப்பதற்காக வாகன வரி, சாலை வரி, என பொதுமக்கள் செலுத்துகின்றனர். அது மட்டுமின்றி சாலைகளை பராமரிப்பதற்காக சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலைகளை பராமரிப்பதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இதற்கான டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் சாலையை பராமரிக்காமல் கிடப்பில் விட்டு விடுகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×