search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழைநீர் தேங்குவதால் பஞ்செட்டி சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக மாறியது- திணறும் வாகன ஓட்டிகள்
    X

    மழைநீர் தேங்குவதால் பஞ்செட்டி சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக மாறியது- திணறும் வாகன ஓட்டிகள்

    • இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையின் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    • சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்கள் தச்சூர் கூட்டு சாலையில் இருந்து பஞ்செட்டி சர்வீஸ் சாலை வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இணையும். இந்த சர்வீஸ் சாலையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது சென்னை, செங்குன்றம், வண்டலூர், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி, தடா, மாதர்பாக்கம், ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொன்னேரி- தச்சூர் கூட்டு சாலை அருகில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் உள்ள சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    மழைநீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் காணப்படுவதால் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி உள்ளது. இதனால் இந்த சர்வீஸ் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையின் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    சுமார் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு சர்வீஸ்சாலை படுமோசமாக உள்ளது. மேலும் இந்த சாலையில் செல்வதற்கு செங்குன்றம் சுங்கச்சாவடி மூலம் வரி வசூலும் செய்யப்படுகிறது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக வாகன ஓட்டிகள் கூறும்போது, இந்த சாலையை சீரமைக்ககோரி தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதனை கண்டித்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சாலையில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றவும், மழைநீர் கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×